PUBLISHED ON : அக் 28, 2019

அக்டோபர் 28, 1955 - பில்கேட்ஸ் பிறந்த நாள்
'மைக்ரோசாஃப்ட்' நிறுவனர்களில் ஒருவர். அதன், தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுநராகவும் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார். உலக செல்வந்தர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருக்கிறார்.
அக்டோபர் 28, 1955 - இந்திரா நூயி பிறந்த நாள்
பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர். 2014இல் போர்ப்ஸ் வெளியிட்ட வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் 13வது இடம் பெற்றார். இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான, 'பத்ம பூஷண்' விருதை 2007இல் பெற்றார்.
அக்டோபர் 29, 1985 - விஜேந்தர் சிங் பிறந்த நாள்
இந்திய குத்துச்சண்டை வீரர். பெய்ஜிங் ஒலிம்பிக் (2008) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதில், ஒலிம்பிக் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை உடையவர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றிருக்கிறார்.
அக்டோபர் 30, 1909 - ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த நாள்
இந்திய அணுவியல் துறையின் தந்தை! காமா கதிர் பற்றிய இவரது ஆய்வுகள் 'ஹோமி பாபா சிதறல்' என அழைக்கப்படுகிறது. இந்திய அணுமின் கழக நிறுவனம் தற்போது 'பாபா அணு ஆராய்ச்சி நிறுவனம்' என, இவர் பெயர் தாங்கி நிற்கிறது.
அக்டோபர் 31, 1875 - வல்லபபாய் படேல், பிறந்த நாள்
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் பணியாற்றினார். நாடு முழுவதும் பிரிந்து இருந்த ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்தார். இந்தியாவின், 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படுகிறார்.
நவம்பர் 3, 1933 - அமர்த்தியா சென் பிறந்த நாள்
இந்தியப் பொருளாதார அறிஞர். 1998இல் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றார். மனித நேயம், சுற்றுச்சூழல் போன்ற சேவைகளுக்காக பல நாடுகளில் விருது பெற்றுள்ளார். 1999இல் இவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
