PUBLISHED ON : மார் 19, 2018

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலை, ஐ.நா.சபை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இப்பட்டியலில் முதல் சில இடங்களை வட ஐரோப்பிய பகுதியான நார்டிக் பிரதேச நாடுகளே பெறும். இந்த ஆண்டும் அந்த நாடுகளே முன்னிலை வகிக்கின்றன.
தனிநபர் வருமானம், ஆரோக்கியமான வாழ்கை முறை, சமூகக் கட்டுமானம், தனிநபர் சுதந்திரம், அரசு மற்றும் சக மனிதர்கள் மீதான நம்பிக்கை, ஊழலற்ற தன்மை, மக்களின் பெருந்தன்மை ஆகிய தகுதிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த அளவுகோல்களின் படி, இவ்வாண்டு பின்லாந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. நார்டியன் நாடுகள் என்று சொல்லப்படும், பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் சற்றேறக்குறைய ஒரே அளவு மதிப்பெண்களையே தொடர்ந்து பெற்று வருகின்றன. இந்த ஆண்டு நாட்டின் குடிமக்களோடு குடியேற்றவாசிகளின் கருத்துகளும் கணக்கில் கொள்ளப்பட்டன.
இந்நாடுகளில் வரிவிதிப்பு சற்று அதிகமாக இருந்தபோதிலும் அதை வாழ்கைத் தரத்திற்கான முதலீடாகவே கருதி மக்கள் மகிழ்வுடன் ஒத்துழைக்கிறார்கள். மருத்துவ வசதிகளும் கல்வியும் இலவசமாக தரமான முறையில் வழங்கப்படுவதால் மக்களின் மன அழுத்தம் மிகவும் குறைந்துள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா 18வது இடத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்நாடு உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இருந்தபோதும் அதிகப்படியான எடை(obesity), போதைப் பழக்கங்கள், மன அழுத்தம் ஆகிய காரணிகளால் அமெரிக்க மக்களின் மகிழ்ச்சி குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான புருண்டி(Burundi) இன அழிப்பு, உள்நாட்டுப் போர்கள், ராணுவப் புரட்சிகள் போன்ற பல்வேறு அச்சுறுத்தல்களால் உலகின் மிக துயரமான பகுதியாக மாறியிருக்கிறது. எனவே இப்பட்டியலில் கடைசி இடம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான புருண்டிக்குத்தான் கிடைத்துள்ளது.
இப்பட்டியலில் நமக்கு கிடைத்திருப்பது 133வது இடம். நம் அண்டை நாடான பாகிஸ்தான் 75வது இடத்தில் உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள மற்ற சிறு நாடுகளான நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை போன்றவையும் பட்டியலில் நம்மை விட முன்னே உள்ளன. வரும் காலத்தில் நம் நாடும் இப்பட்டியலில் முன்னேறும் என்று நம்புவோம்.
