
அஞ்சு பாபி ஜார்ஜ்
19.4.1977
சங்கனாச்சேரி, கேரளம்.
'பல போட்டிகளில் தோல்வியடைந்துள்ளேன். அதனால்தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடிந்தது. எந்த விஷயங்கள் தொந்தரவு செய்தாலும், என் பணியை நன்றாகச் செய்ய வேண்டுமென்பதில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.' இத்தகைய தன்னம்பிக்கை மொழிகளுக்குச் சொந்தக்காரர், இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ்.
15வது வயதிலேயே இவருக்குத் தடகளப் போட்டிகளில் ஆர்வம் இருந்தது. பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் என மாநில அளவில் வெற்றிகள் பெற்றார். 1996ஆம் ஆண்டு, டில்லி ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்று, நீளம் தாண்டுதலில் பதக்கம் வென்றார்.
தொடக்க காலத்தில் 100 மீட்டர் தடை ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் சாதனையாளராக இருந்தார். பின்னர் நீளம் தாண்டுதலில் கவனம் செலுத்தி, தன் கணவர் பாபி ஜார்ஜ் மற்றும் உலக சாதனையாளர் மைக் பாவெல்லிடம் பயிற்சி பெற்றார்.
அதன் பிறகு, 2003ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த உலக தடகளப் போட்டியில் பங்கேற்று, நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாண்டி வெண்கலம் வென்று உலக அளவில் முத்திரை பதித்தார். 2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும் 6.83 மீட்டர் நீளம் தாண்டினார். இது அவரது தனிப்பட்ட சாதனையானது. 2005ஆம் ஆண்டு, மொனாகோ உலக தடகளப் போட்டியில் 6.75 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி வென்றார். அதனுடன் மான்செஸ்டர் காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பெங்களூருவில் அகாடமி அமைத்தார். அடுத்த தலைமுறை சாதனையாளர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு உதவும் திட்டத்தின் செயல் உறுப்பினராக இருந்து வருகிறார் அஞ்சு!
விருதுகள்
2002: அர்ஜுனா
2003: ராஜிவ் காந்தி கேல் ரத்னா
2004: பத்ம ஸ்ரீ

