PUBLISHED ON : ஜூன் 27, 2016

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா பிறந்த தினம் ஜூன் 27
'வந்தே மாதரம்!' எனும் கீதத்தை இயற்றிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயாவின் பிறந்த தினம் இன்று! சுதந்திரப் போராட்ட காலத்தின், புகழ்பெற்ற எழுத்தாளராகவும், கவிஞராகவும், இதழியலாளராகவும் திகழ்ந்தவர் பங்கிம். தாகூருக்கு இணையான வங்காளப் படைப்பாளியாகப் போற்றப்படுகிறார். பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற பெயரில் ஆங்கிலேயர்களாலும், பிற மாநிலத்தவராலும் அழைக்கப்பட்டார்.
பங்கிம், கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை எனும் இடத்தில், 1838ஆம் ஆண்டில், துர்கா சுந்தரி தேவி, ஜாதவ் சந்திர சட்டோபாத்யாயா என்ற தம்பதியரின் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஜாதவ் சந்திரர், ஆங்கிலேய அரசாங்கத்தில் துணை நீதிபதியாகப் பணியாற்றியவர்.
பங்கிம், மேதினிப்பூரில் ஒரு கான்வென்ட் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு, கொல்கத்தா பிரெசிடென்சி கல்லூரியில் சட்டம் படித்தார். கொல்கத்தா பல்கலைகழகத்தின் முதல் இரண்டு பட்டதாரிகளில் ஒருவராகத் தேர்ச்சி அடைந்தார்.
படிப்பை முடித்த 1858ஆம் ஆண்டு முதல், 1891இல் ஓய்வு பெறும் வரை ஆங்கிலேய அரசில் துணை நீதிபதியாகவும், துணை ஆட்சியராகவும் பணி புரிந்தார்.
ஆங்கிலேய அரசு ஊழியராக இருந்தாலும், இந்திய தேசியத்தில் ஆர்வம் கொண்டவராக, தேசிய உணர்வைத் தூண்டும் பல்வேறு இலக்கியங்களைப் படைத்து இருக்கிறார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில்தான் 'வந்தே மாதரம்!' பாடல் இடம்பெற்றுள்ளது.
'God save the Queen!' என்று ஆங்கிலேயர்களின் நாட்டுப்பண்ணை, இந்தியர்கள் பாடி வந்த காலத்தில் 'தாய் மண்ணே வணக்கம்!' என்று பொருள்தரும் பங்கிமின் பாடல், சுதந்திர எழுச்சிப் பாடலாகப் பிரபலம் அடைந்தது.
ரவீந்திரநாத் தாகூர், 1896ல் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் முதன் முதலாக இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார். மேடம் காமா என்ற பெண்மணி, இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தபோது, அதன் நடுவே 'வந்தே மாதரம்' எனும் வரிகளை இடம்பெறச் செய்தும் இருக்கிறார்.
பி.பி.சி. நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் தலைசிறந்த பாடல்களில் இரண்டாம் இடத்தை இப்பாடல் வென்றது. வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளின் மொழிபெயர்ப்பு:
தாயே வணங்குகிறோம்!
இனிய நீர் இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை எங்கள் தாய்!
தாயே வணங்குகிறோம்!
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய் சுகமளிப்பவளே! வரமருள்பவளே!
தாயே வணங்குகிறோம்!!
