தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/இதோ இளையோர் இலக்கியம்!

இதோ இளையோர் இலக்கியம்!

இதோ இளையோர் இலக்கியம்!


PUBLISHED ON : ஜன 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி மாதம் என்றாலே, சென்னைப் புத்தகக் கண்காட்சிதான் அனைவர் கவனத்தையும் கவர்வது. புதிய தாள், புதிய வாசனை, புதிய கருத்துகள்... என்று மனம் மயங்கும். 10 முதல் 17 வயது வரையான இளையோர் வாசிப்பதற்கான புதிய நூல்கள் வந்துள்ளனவா என்று தேடினோம். இளையோருக்கான புதிய எழுத்தாளர்கள் உருவாகியுள்ளனரா என்றும் தேடினோம். புத்தகங்கள் கிடைத்தன; இதோ தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்:

நியூட்ரினோ

புதிய அரசியல்நெறி பதிப்பகம்

விலை ரூ.50

நியூட்ரினோ திட்டம், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்ற தவறான நம்பிக்கை விதைக்கப்படுகிறது. தேவையற்ற பயத்தை அகற்றும் விதமாக எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம். இது, வெறும் நியூட்ரினோ ஆதரவு புத்தகமாக எழுதப்படவில்லை. எதிராளிகள் முன்வைக்கும் வாதங்கள் என்ன என்பதைக் கூறி, அதற்கு அறிவியல் ரீதியாகப் பதிலடிக் கொடுக்கப்பட்டுள்ளது. இளையோர் புத்தக அலமாரியை அலங்கரிக்க வேண்டிய முக்கிய நூல் இது.

மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0

புக்ஸ் ஃபார் சில்ரன்

விலை ரூ. 50

சோதனைக்கூடமோ, பெரிய கருவிகளோ இன்றி, வீட்டில் இருக்கும் மலிவான பொருட்களை வைத்து அறிவியல் பரிசோதனைகளைச் செய்ய உதவுகிறது இந்நூல். 42 சோதனைகளை எளிய பொருட்களின் உதவியோடு மாணவர்கள் செய்துபார்க்கலாம்.

பேரன்பின் பூக்கள்

சித்திரச் செவ்வானம்

விலை ரூ. 350

மலையாள இளையோர் இலக்கியத்தில் புகழ்பெற்றவர் சுமங்களா. 'ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம்தான்' என்ற கருத்தை மையப்படுத்தி, இவர் எழுதியுள்ள கதைகள் சுவாரசியமானவை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள 'பேரன்பின் பூக்கள்' முக்கிய வரவு.

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

கிழக்கு பதிப்பகம்

விலை ரூ.200

அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோகர் என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும்.

காட்டில் இருந்து வீட்டுக்கு பறவைகள்

பாகம் 1, 2

புக்ஸ் ஃபார் சில்ரன்

விலை தலா ரூ. 30

இன்று நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய விலங்குகளும், பறவைகளும் ஒரு காலத்தில் காட்டில் சுற்றித் திரிந்தவை. இவை எல்லாம் வீட்டு விலங்கானது எப்படி என்பதை சுவைபடக் கூறுகிறார் நூலாசிரியர்.

ஒரு மனிதன், ஒரு Like, ஒரு உலகம்

விலை ரூ.70

உயிர்மை பதிப்பகம்

நவீன காலத்தில் இளைஞர்களுக்கான மிக முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது டிஜிட்டல் போதை. நேரக் கட்டுப்பாடின்றி இளையோரை உள்ளிழுக்கும் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றின் பிடியிலிருந்து தப்பிப்பது எப்படி? டிஜிட்டல் ஈர்ப்புக்கான உளவியலைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது இந்நூல்.

மனச்சோர்வு கற்பிதங்களும், உண்மைகளும்

உயிர்மை பதிப்பகம்

விலை ரூ.70

மாணவர்கள் மத்தியில் அதிகம் புழங்கும் வார்த்தைகளில் ஒன்றாகிவிட்டது 'மனச்சோர்வு.' ஆனால், அன்றாடக் கவலைகளும் மனச்சோர்வும் ஒன்றல்ல என்கிறது இப்புத்தகம். இதில், உண்மையில் மனச்சோர்வு என்பது என்ன? நம் மனத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பதைச் சொல்வதன் வழியே, அதற்கான தீர்வும் முன்வைக்கப்படுகிறது.

சர்க்யூட் தமிழன்

புக்ஸ் ஃபார் சில்ரன்

விலை ரூ. 100

அறிவியல் புனைகதை புத்தகமான இதில், எல்லா கதைகளும் எதிர்காலத்தில் நடக்கிறது. அப்போது அறிவியலும் தொழில்நுட்பமும் எவ்வளவுதூரம் முன்னேறியிருக்கும்; நம் வாழ்க்கை முறை எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு, நையாண்டியும் நகைச்சுவையும் கலந்து விருந்து படைத்திருக்கிறார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூலாசிரியர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us