PUBLISHED ON : ஜன 07, 2019

சமீப காலமாக உமா மிஸ்ஸோடு அனுஷாவைப் பார்க்க முடிந்தது. அனுஷா என் பக்கத்து வகுப்பு. ஒருநாள் கிளாஸிலேயே அவளுக்கு பயங்கர வயிற்றுவலி. துடித்துப் போனாள். இன்னொரு நாள், தொடர்ச்சியாக தலைவலி. கிளாஸில் உட்கார முடியவில்லை என்று மீண்டும் வீட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது பார்த்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
மீண்டும் அனுஷா பள்ளிக்கு வந்தபோது, உமா மிஸ் தான் அவளோடு பேசிக்கொண்டு இருந்தார்கள். படிப்படியாக இப்போது அனுஷா முகத்தில் ஒருவித நிம்மதி, நிதானத்தைப் பார்க்க முடிகிறது. எப்போதும் ஒருவித வருத்தத்தோடு இருப்பாள் அனுஷா. அவள் நிலைமை மாறினதுக்கு உமா மிஸ் காரணமாக இருக்கலாம் என்பது என் யூகம்.
அனுஷா போல், இன்னும் நான்கைந்து மாணவர்களையும் உமா மிஸ்ஸோடு பார்க்கிறேன். மிஸ் ரொம்ப பிஸியாகிவிட்டார். ஒருநாள் மாலை வீடு திரும்பும்போது, இதைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன்.
“அனுஷா வயித்துவலி சரியாயிடுச்சா மிஸ்?”
“ம். இப்போ நல்லா ஆயிட்டா. அது வயித்துவலி இல்ல, மனவலி. அதுக்கு மருந்து போட்டவுடனே, சரியா ஆயிட்டா?”
“மனவலியா? என்ன சொல்றீங்க மிஸ்?”
“போன வருஷம், இதேசமயத்துலதான் அவங்க அப்பா தவறிப் போனாரு. பல மாதங்கள் ஆஸ்பத்திரியில இருந்து, ரொம்ப கஷ்டப்பட்டு, நினைவே இல்லாமல் போயிட்டார். அந்தச் சம்பவங்கள எல்லாத்தையும், அனுஷா பக்கத்துல இருந்து பார்த்திருக்கா. அத்தனையும் அவளுக்கு ஞாபகம் இருக்கு. இப்போ, அதெல்லாம்தான்
அவ வயித்து வலிக்குக் காரணம்.”
“ஓ! அது ஏதோ சாதா உடம்பு பிரச்னைன்னு நினைச்சேன், மிஸ்!”
“பலரும் அப்படித்தான் நினைக்கறோம். ஆழமா பார்த்தா, வேற முக்கியமான காரணங்கள் இருக்கும். பல பேர் கிளாஸ்ல எப்பவும் சேட்டை செஞ்சுக்கிட்டே இருப்பாங்க, அடுத்தவங்களைத் தொந்தரவு செய்வாங்க. இன்னும் கொஞ்சம் பேரு பேசவே மாட்டாங்க, எந்த விஷயத்துலயும் கலந்துக்க மாட்டாங்க. இன்னும் கொஞ்சம் பேரு முரட்டுத்தனமா நடந்துப்பாங்க. ஒரு சிலருக்கு ஏதாவது நோய் வந்துக்கிட்டே இருக்கும். இதெல்லாம் வெளியே தெரியற பாதிப்புகள். இதுக்குப் பின்னால பெரிய, பெரிய வருத்தங்கள் இருக்கலாம். இதையெல்லாம் கவனமா பார்த்து, மாத்தறதுதான் 'ட்ரோமா இன்ஃபார்ம்டு கிளாஸ்ரூம்.' அதாவது, மனவலிகளை, அதிர்ச்சிகளை, வேதனைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப மாணவர்களைக் கையாள்வது….”
பல மேலைநாடுகளில் 'அதிர்ச்சிகளைப் புரிந்துகொள்ளும் வகுப்பறை'க்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதைப் பற்றி உமா மிஸ் பேச ஆரம்பித்தார்கள். மூன்று சிறுவர்களில் இரண்டு சிறுவர்கள் ஏதேனும் ஒருவித ட்ரோமா (Trauma), அதாவது அதிர்ச்சியை அல்லது மனவேதனையைச் சந்திச்சு இருக்காங்க.
அது, குடும்பத்துல அப்பா - அம்மா இடையே நடக்கும் மோசமான சண்டையா இருக்கலாம். தாத்தா, பாட்டி அல்லது நெருங்கிய உறவினர் ஒருவருடைய மரணமாக இருக்கலாம். சாலை விபத்தை நேரில் பார்த்திருக்கலாம். பூகம்பம், சுனாமி, பேரழிவை ஏற்படுத்திய பெருமழையாக இருக்கலாம்.
வீட்டுல யாரோ ஒருவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, வலியால் துடித்துக்கொண்டே இருக்கலாம். அப்பாவோ, அம்மாவோ இல்லாமல், 'சிங்கிள் பேரன்ட்'டாக இருக்கலாம். இவர்களில் ஒருவர் குடிகாரராக, சூதாடியாக, போதைப் பழக்கம் உடையவராக இருக்கலாம். குறைந்தபட்சம், அப்பா, அம்மா அரவணைப்பு இல்லாமல், வேறொரு உறவினர் வீட்டில் வளரலாம். இதெல்லாம், இளம்பிஞ்சுகள் நெஞ்சில் தீராக்காயத்தை, ஆறாதவடுவை ஏற்படுத்திவிடும்.
“இதனால படிப்பு பாதிக்கும். கவனம் குவியாது. மார்க் குறைஞ்சு போகும். விளையாட்டுல ஈடுபாடு இருக்காது. எதிலேயும் ஆர்வம் இருக்காது. மொத்த ஆளுமையையே பாதிக்கும். மனசும் உடம்பும் ஆரோக்கியமில்லாமல் போயிடும். எப்போ பார்த்தாலும் ஒருவித பயம் இருக்கும். சில பேருக்குக் கடுமையான எரிச்சல், வெறுப்பு, கோபம் ஏற்படலாம். இதையெல்லாம் கவனிச்சு, அதுக்கேற்ப படிப்பு மட்டுமல்ல, நம்பிக்கையையும் கொடுக்கறதுதான் ட்ரோமா இன்ஃபார்ம்டு எஷுகேஷன் (Trauma informed education).
இப்படிப்பட்ட மாணவர்களை கண்ணும் கருத்துமாக கவனிச்சுக்க பல வழிமுறைகள் இருக்கு. அதுல ஒண்ணு சரணாலய மாடல். அதாவது, இதுபோன்ற பிரச்னையுடைய மாணவர்களுக்கு பள்ளிச் சூழ்நிலையே ஒரு சரணாலயம் மாதிரி இருக்கணும். அவர்களை அரவணைச்சு, கனிவோட அணுகி, பிரச்னைகளையும் குறைகளையும் பெரிசுபடுத்தாமல், அவங்களோட திறமைகளை மட்டும் வளர்க்கணும். வலிகளுக்கும் வேதனைகளுக்கும் காலம் தான் மருந்து. மறதிதான் ஒரே தீர்வு. அவங்களோட இதர திறமைகளை ஊக்குவிச்சு வளர்த்தோம்னா, வலிகள் மறந்துபோகும். பள்ளிகள் உண்மையான சரணாலயங்கள் ஆகிடும்.” என்றவர் கொஞ்சம் நிறுத்தி,
“இதெல்லாம் டீச்சர்ஸான எங்க வேலை. ஆனால், உங்களைப் போன்ற சக மாணவர்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கு…”
“அது என்ன மிஸ்?”
“பாதிப்புள்ள மாணவர்களைக் கிண்டல் செய்யக் கூடாது. 'முசுடு', 'முரடன்', 'ரெளடி', 'திமிர் பிடிச்சவன்', 'தத்தி', 'ரொம்ப அலட்டிக்கிறான்'… இப்படியெல்லாம் ஒருத்தரைப் பத்திய தீர்மானத்துக்கு வரக்கூடாது. இப்படிச் சொல்லச் சொல்ல, அந்தப் பையனோ, பொண்ணோ, படிப்படியாக விலகிப் போக ஆரம்பிச்சுடுவாங்க. எல்லோருக்கும் எல்லா வசதிகளும் அன்பும் அருளும் ஆரோக்கியமும் கிடைச்சுடறதில்ல. அதனால ஏற்படற வலிகளை அவங்களால சகிச்சுக்க முடியாம திண்டாடறாங்க. அவங்களை மேலும் புண்படுத்திடக் கூடாது.”
உமா மிஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே, நான் வசிக்கும் தெரு வந்துவிட்டது. வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். மனமெங்கும் அனுஷா போன்ற பலர் வந்து போனார்கள். இன்னும் கவனமுடம் அணுகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
சரணாலயத்தை உருவாக்கியவர்!
மனவலிகளால் பாதிப்படையும் மாணவர்களை மேம்படுத்தும் 'சரணாலய மாதிரி'யை (The Sanctuary Model) உருவாக்கியவர் டாக்டர் சாண்ட்ரா ப்ளூம் என்ற அமெரிக்க உளவியல் மருத்துவர். 1980களில் தம் நோயாளிகளின் உளவியல் சிக்கல்களுக்குக் காரணங்களை ஆராயத் தொடங்கினார் டாக்டர் சாண்ட்ரா. பெரும்பாலும் சிறுவயதில் ஏற்படும் அதிர்ச்சிகளும், வேதனைகளுமே இதற்குக் காரணம் என்று கண்டுபிடித்தார். அதைத் தீர்க்க அவர் உருவாக்கிய அணுகுமுறையே சரணாலய மாதிரி. பின்னர், அந்த அணுகுமுறை பள்ளிகளிலும் பயன்பாட்டுக்கு வந்தது.
