சரித்திரச் சுவடி: ராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை மாற்றினார்?
சரித்திரச் சுவடி: ராஜேந்திர சோழன் ஏன் தலைநகரை மாற்றினார்?
PUBLISHED ON : ஜூலை 22, 2024

ராஜராஜன் காலத்தில், தஞ்சை புகழின் உச்சியில் இருந்தது. அப்படி இருக்க 1014இல் மன்னனாகப் பொறுப்பேற்ற ராஜேந்திர சோழர், தஞ்சையை விட்டு, ஏன் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய நகரை உருவாக்கினார்? அதை சோழர்களின் தலைநகராகவும் மாற்றினார்?
''பெரும் படைகள் போவதற்கும் வருவதற்கும் தஞ்சை போதுமானதாக இல்லை. வணிகர்களின் பெருக்கம், வெளிநாட்டவர் வருகை எனத் தஞ்சை நெரிசல்மிக்க இடமாக மாறியது. தஞ்சாவூர் விவசாய நிலங்கள் அதிகம் இருந்த இடம். தவிரவும் காவிரி ஆறு, பாசனத்திற்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. அது நீர் வழிப்போக்குவரத்திற்கு (கப்பல்கள்) ஏற்றதாக இல்லை. அதனால் அவருக்கு மாற்றுச் சிந்தனை உதித்தது. தற்போது கொள்ளிடம் ஆறு என்று கூறப்படும் 'ராஜேந்திர சோழப்பேராற்றை' நீர் வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்த நினைத்தார். கப்பற்படையில் சிறந்தவரான ராஜேந்திர சோழர், கொள்ளிட ஆற்றில் கலன்கள் மூலம் ஆயுதங்கள், படைகளைக் குணகடலுக்குள் (வங்காள விரிகுடா) அனுப்ப முடியும் என்று எண்ணினார். அதனால் புதிய தலைநகரைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவாக்கினார்” என்று அரசியல், சமூகக் காரணங்களைக் குறிப்பிடுகிறார் கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பொறியாளர் கோமகன்.
''அவரது கங்கை வெற்றியும் புதிய தலைநகரை உருவாகக் காரணமாக அமைந்தது. மன்னர்கள் ஒரு நாட்டை வெற்றி கொண்டதன் நினைவாகத் தூண்கள் எழுப்புவது வழக்கம். ராஜேந்திர சோழர், கங்கை நீரைக் கொண்டு வந்து, ஓர் ஏரியை உருவாக்கினார். அதற்குச் சோழ கங்கம் (தற்போது பொன்னேரி) என்று பெயரிட்டார். இன்னொரு காரணம் திருச்சியில் இருந்து எதிரிப்படைகள் தஞ்சையை அடைவது எளிது. கங்கைகொண்ட சோழபுரம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. இதைக் கருத்தில் வைத்தும், அவர் தஞ்சையில் இருந்து தலைநகரைக் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி இருக்கலாம்'' என்று கூறுகிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்.
இப்படிப் பல காரணங்களை யோசித்து உருவாக்கிய நகரம், சிறிது பாண்டியர்களாலும், முழுதும் மாலிக்காபூரின் படையெடுப்பாலும் அழிந்தது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உட்கோட்டை - மாளிகைமேடு என்னும் இடத்தில் இருந்த சோழர்களின் அரண்மனை, இன்று வெறும் செங்கல் கட்டடமாகச் சிதைவுற்ற நிலையில் காட்சியளிக்கிறது.