PUBLISHED ON : ஆக 14, 2023

அந்நியத் துணியை நிராகரிக்கும் போராட்டம், 1932இல் நாடு முழுவதும் நடைபெற்றது.
வெளிநாட்டு ஆடைகளை விற்கும் கடைகளின் எதிரே தேசத் தொண்டர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.
காலையில் ஒரு குழுவாகவும் மாலையில் ஒரு குழுவாகவும் சென்று, துணிக்கடைகளின் எதிரே போராட்டம் நடத்தினர்.
காரைக்குடியில் வெளிநாட்டுத் துணிகளை அணியும் மோகம் அதிகம் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் தங்கள் வியாபாரம், தொழிலை வெளிநாடுகளில் வைத்திருந்ததே அதற்குக் காரணம். அந்நியத்துணி எதிர்ப்புப் போராட்டக் கூட்டங்களில் தேசபக்தர் பொ. திருகூடசுந்தரம் என்பவர் பேசுவார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, பலர் தாங்கள் அணிந்திருக்கும் சில்க் சட்டைகளையும் ஜரிகைத் துண்டுகளையும் கழற்றி தீயில் இடுவார்கள். அந்த அளவிற்குத் தேசபக்தியை, தன் பேச்சிலேயே விதைப்பார் திருகூடசுந்தரம்.
ஜவுளிக்கடை முதலாளிகள், தொண்டர்களைப் பல விதத்திலும் தொந்தரவு செய்தனர். ஆனாலும், தீவிரப் போராட்டத்தின் விளைவாக, துணிகள் தேங்க ஆரம்பித்தன. இதனால், பல துணிக் கடைகள் மூடப்பட்டன. கதர்த் துணிக்கடைகள் திறக்கப்பட்டன.
இதே காரைக்குடி காந்தி சதுக்கத்தில், என்.எஸ். கணபதி என்பவர் பேசினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், தன் படையுடன் வந்து, கணபதியை அந்த இடத்தை விட்டு அகலுமாறு கூறினார். ஆனால், அவர் நகரவில்லை. இன்ஸ்பெக்டர், கணபதியை கீழே தள்ளி, தடியால் அடித்தார். நெஞ்சின் மீதேறி பூட்ஸ் காலால் மிதித்தார். கணபதியின் வாயிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. கணபதி கையில் பிடித்திருந்த தேசியக் கொடி முழுக்கவும் ரத்தம். அதன் பிறகே கணபதியை லாரியில் ஏற்றிக்கொண்டு போனார்கள்.
தொண்டர்கள் பலரையும் கைது செய்து புளிய விளாரால் அடித்து துன்புறுத்தி, கண்ணைக் கட்டி காட்டில் கொண்டுபோய் விட்டார்கள். இதுபோல் நாடுமுழுக்க பலரின் ரத்தம், இன்னுயிர் நீத்துத்தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்பதை நினைவில் கொண்டால், சுதந்திரத்தின் மதிப்பு புரியும்.
