PUBLISHED ON : ஆக 19, 2024

இன்றைய உத்தரப் பிரதேச மாநிலம் 'பட்டியாலி' நகரில் கி.பி.1253இல் பிறந்த இவர், ஒரு கவிஞர். பெர்சிய மொழியிலும் இந்தியிலும் கவிதைகள் எழுதியவர். இவரது தந்தை துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். தாய் இந்தியர்.
'ஈரான், மத்திய ஆசியாவைக் காட்டிலும் இந்தியாவின் தட்பவெப்ப நிலை நன்றாக உள்ளது. இங்கு கடுமையான குளிர்காலம் இல்லை. இங்குள்ள ஓர் ஏழை விவசாயி, ஒரு பழைய துணியுடன் திறந்தவெளியில் இரவைக் கழிக்க முடியும். பூக்கள் எல்லாக் காலங்களிலும் பூக்கும்' என்று இந்தியாவைப் பற்றி தம் உயர்ந்த மதிப்பீட்டை எழுதியுள்ளார்.
'சொந்த நாட்டை நேசிப்பது ஒவ்வொருவரின் கடமை. இந்தியா சொர்க்கத்தைப் போன்றது. இந்த இரு காரணங்களுக்காகவே நான் இந்தியாவை நேசிக்கிறேன்' என்று, இவர் 1318இல் எழுதிய நூஹ் சிபிஹ்ர் (Nuh Sipihr) நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சூஃபி கவிஞர் நிஜாமுதீன் அவுலியாவின் (Nizamuddin Auliya) சீடர் இவர்.மொகலாயர் இந்தியாவின் மீது படையெடுத்து வருவதை அறிந்த இவர், 'அவர்களது படையின் எலும்புகளை, எனது ஆடைக்குக் குஞ்சலங்களாக மாட்டுவேன்' என்று இந்திய அரசர் ஒருவர் கூறுவதாகக் கவிதை எழுதி உள்ளார்.
துக்ளக் நாமா (Tughluq Namah) என்ற நூல், இவர் எழுதியதே. அலாவுதீன் கில்ஜியின் (Alauddin Khilji) அரசவைக் கவிஞர் இவர்.
தமிழகத்தின் மதுரை, திருச்சி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், சிதம்பரம் வரை வந்து, மாலிக்காபூரின் படையெடுப்பைப் பற்றி நேரில் கண்டு எழுதியவர்.
கி.பி.1325இல் காலமானார். இந்துஸ்தானத்தின் கிளி என்று அழைக்கப்படும் இந்தக் கவிஞரின் தபால் தலையை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் 1975இல் வெளியிட்டுள்ளன. யார் இந்தக் கவிஞர்?
அமீர் குஸ்ரு (Amir khusrau)