சரித்திரம் பழகு: ஒடிசாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலை
சரித்திரம் பழகு: ஒடிசாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிலை
PUBLISHED ON : நவ 11, 2024

படத்தில் இருப்பது துர்க்கைச் (காளி)சிலை. சங்க இலக்கியங்களில் கொற்றவை என்றும் அழைக்கப்படுகிறார். சோழர் காலத்தில் துர்க்கை வழிபாடு மிகுந்திருந்தது. அவர்கள் போருக்குப் போகும் போது, துர்க்கையை வணங்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. ஊர் எல்லைகளைக் காக்கும் தெய்வமாகவும் துர்க்கையை வைத்திருந்தனர்.
சோழ மன்னர் முதலாம் இராஜேந்திர சோழரின் வட இந்தியப் போர் பற்றி, அனைவரும் அறிந்ததே. இவர் பதினோறாம் நூற்றாண்டில், வடக்கில் கலிங்கப் பகுதியை வென்றார் (கலிங்க நாடு தற்போதைய ஒடிசா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது). அந்த வெற்றியின் நினைவாக, இந்த துர்க்கைச் சிலை உட்பட இன்னும் சில சிலைகளை, கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வந்தார். அந்தச் சிலைகள் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள செங்கல் மேடு எனும் ஊரில் உள்ளன.
செங்கல் மேட்டில் கலிங்க நாட்டில் இருந்து கொண்டு வந்த துர்க்கைச் சிலை பொன்னேரியில் ஒரு சிலை, இளையப் பெருமாநல்லூர் அழகர் கோயிலில் ஒரு சிலை, சுண்ணாம்புக்குழியில் ஒரு சிலை என கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றி, நாற்புறமும் எல்லைகளைக் காப்பதற்காக துர்க்கைச் சிலைகள், சோழர் காலத்தில் வைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் தலைநகரைச் சுற்றி, ஐந்தைந்து கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
ராஜேந்திர சோழரின் ஆட்சிக்காலம் கி.பி. 1014ஆம் ஆண்டு முதல் கி.பி.1044 வரை. கலிங்கத்தைக் கடந்து, கங்கைப் படையெடுப்பு கி.பி. 1021ஆம் ஆண்டு முதல் கி.பி.1023 வரை நடந்தது. எசாலம் (விழுப்புரம்) என்னும் ஊரில் கண்டெடுக்கப்பட்ட செப்பேட்டுத் தகவல்கள், கி.பி. 1035இல் கங்கைகொண்ட சோழீஸ்வரம் கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகிறது.