
அஸ்பெர்ஜில்லோசிஸ் (Aspergillosis) ஒரு வைரஸ் தொற்றாகும்.
தவறு. இது ஒரு பூஞ்சைத் தொற்று. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும் நோய். அஸ்பெர்ஜில்லஸ் (Aspergillus) என்ற பூஞ்சையால் காற்றில் பரவுகிறது. ஆரோக்கியமான நபர்களுக்குப் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நுரையீரல் நோயாளிகள் உள்ளிட்டோருக்கு இது கடுமையான தொற்றாக மாறலாம். ஸ்டெம் செல் அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஸ்டெராய்டுகள் போன்ற சில மருந்துகளை உட்கொள்பவர்கள் என நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது.
இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் அலர்ஜிக் அஸ்பெர்ஜில்லோசிஸ் என்பது பூஞ்சையின் ஒவ்வாமை காரணமாக ஏற்படுகிறது. இதனால் சைனஸ் தொற்று, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அஸ்பெர்ஜில்லோமா என்பது நுரையீரலில் பூஞ்சை பந்து போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்.
நுரையீரல் அஸ்பெர்ஜில்லோசிஸ் என்பது, நுரையீரலின் திசுக்களை பாதிக்கும் கடுமையான தொற்று. தொற்றின் அறிகுறிகளாக, தொடர்ச்சியான இருமல், சளி, ரத்தக் கசிவு, மூச்சுத்திணறல், சோர்வு, எடை இழப்பு, காய்ச்சல், உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இந்த நோயை நுரையீரல் எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிகிச்சை முறையானது, தொற்றுவகை, நோயாளியின் நிலைமையைப் பொறுத்து மாறுபடும்.
பொதுவாக, பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. கடுமையான நிகழ்வுகளில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.