PUBLISHED ON : ஜன 30, 2017

சென்னைக்கு அருகிலிருக்கும் அத்திரம்பாக்கத்தில் கொற்றலையாறு (வேறு பெயர்கள்: குசஸ்தலையாறு, குறத்தியாறு, குறல் தலையாறு) பாய்கிறது.
அத்திரம்பாக்கத்தின் வேறொரு தனிச்சிறப்பு, நூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நிகழ்த்தப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிகள்தான். இதன்மூலம் தொல்பழங்கால மக்கள் இங்கே வாழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள், ஆங்கிலேயர்களான ராபர்ட் புரூஸ் ஃபூடெ (Robert Bruce Foote) மற்றும் வில்லியம் கிங் (William King). 1863ம் ஆண்டில், பல்லாவரம் பகுதியில் இவர்கள் கண்டெடுத்த ஒரு கற்கருவி (கையில் பிடித்துப் பயன்படுத்துகிற கோடரி) தான் நீண்ட ஆய்வைத் தொடங்கிவைத்தது.
1869ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, ராபர்ட் புரூஸ், வில்லியம் கிங் இருவரும் அத்திரம்பாக்கம் பகுதியில் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நீள்வட்ட வடிவான இரண்டு கருவிகள், அவர்களுடைய கைக்குக் கிடைத்தன. அதைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில், இன்னும் பல கருவிகள் கிடைக்கத் தொடங்கின.
இத்தனைக்கும், அத்திரம்பாக்கம் ஒரு சிறிய பகுதிதான். 'இந்தச் சிறிய இடத்துக்குள் இத்தனை கருவிகளா? இவற்றை நுணுக்கமாக ஆராய்ந்தால், எத்தனை உண்மைகள் தெரியவருமோ!' என்று ராபர்ட் புரூஸ் வியந்துபோனாராம். இதனை இப்பகுதியில் ஆய்வுசெய்துள்ள, சாந்தி பப்பு ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
அதன்பிறகு, அத்திரம்பாக்கம் பகுதியில் பல கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே வாழ்ந்த மக்களைப் பற்றிய பல விவரங்கள் தெரியவந்துள்ளன.
பழங்கற்காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள், அதற்கான சான்றுகளாகப் பல கருவிகள் நமக்குக் கிடைத்துள்ளன. அந்தக் கருவிகளும் மூன்று காலங்களைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை லோயர் பேலியோலித்திக் (Lower Palaeolithic period), மிடில் பேலியோலித்திக் (Middle Palaeolithic period), அப்பர் பேலியோலித்திக் (Upper Palaeolithic period).
இந்தக் கற்கருவிகள் அனைத்தும், ஆற்றுப்படுகையில் கிடைக்கிற குவார்ட்சைட் (Quartzite), சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்றவற்றால் செய்யப்பட்டுள்ளன என்கிறார் முனைவர் வீ. செல்வகுமார். கோடரியோடு, கிளீவர் எனப்படும் வெட்டுக்கருவியும் கிடைத்துள்ளது.
இதில் ஓர் ஆச்சரியமான விஷயம், குவார்ட்சைட் என்பது, க்வார்ட்ஸ் நிறைந்த கல். மிக அதிக வெப்பநிலை, அழுத்தத்துக்கு உட்படும்போது உருவாகும், ஓர் அடர்த்தியான, வலுவான, ஒரேமாதிரியான துகளமைப்பைக்கொண்ட கல் ஆகும். இந்தக் கல், அத்திரம்பாக்கம் பகுதியில் கிடைப்பதில்லை என்கிறார் வரலாற்று ஆய்வாளர் உபிந்தர் சிங்.
அதேபோல், இங்கே கிடைத்துள்ள கற்கருவிகள் அத்திரம்பாக்கத்தில்தான் செய்யப்பட்டவை என்பதற்கான சான்றுகளும் கிடைக்கவில்லை. எனவே, இவை வேறு எங்கோ செய்யப்பட்டு இங்கே கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
கற்கருவிகளுடன், இங்கே சில விலங்குகளின் கால்தடங்களும், பற்களும்கூடக் கிடைத்துள்ளன. இவற்றையும் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.
-நாகா

