sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

எப்படி வந்தது தமிழ்நாடு?

/

எப்படி வந்தது தமிழ்நாடு?

எப்படி வந்தது தமிழ்நாடு?

எப்படி வந்தது தமிழ்நாடு?


PUBLISHED ON : ஜன 30, 2017

Google News

PUBLISHED ON : ஜன 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்முடைய மாநிலத்தின் பெயர் என்ன?

அட, இது ஒரு கேள்வியா, 'தமிழ்நாடு'.

எளிமையான பதில்தான். ஆனால், ஒரு மாநிலத்தின் பெயரில் 'நாடு' என்ற சொல் இருக்கிறதே, இது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இந்தப் பெயர், நமக்கு அத்தனை எளிதில் கிடைத்ததல்ல. பல அறிஞர்களும், பொதுமக்களும், அரசியல்வாதிகளும் கைகோத்துப் போராடி, 'தமிழ்நாடு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள்.

அதற்கு முன்னால், நம் மாநிலம் 'மெட்ராஸ்/மதராஸ் மாகாணம்' என்றுதான் அழைக்கப்பட்டது. இது ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயர். தென்னிந்தியாவில் அவர்கள் நிர்வகித்த பகுதிகளை இவ்வாறு அழைத்தார்கள், மதராஸ் நகரத்தைத் தலைமையாகக் கொண்ட பகுதி என்பதால், இப்படிப் பெயர் சூட்டப்பட்டது. இதேபோல் பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், மேற்கு மாகாணம் போன்ற பல மாகாணங்களை அவர்கள் ஆண்டுவந்தார்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகும், 'மெட்ராஸ்' என்கிற பெயர் தொடர்ந்தது. அதில் ஒரே ஒரு சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், Madras Presidency என்பது, Madras State என்று ஆனது.

மெட்ராஸ் மாநிலத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுகிறவர்களும் இருநதனர். பின்னர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மெட்ராஸ் மாநிலத்தில், தமிழ் பேசுவோர்தான் அதிகமிருந்தார்கள்.

இந்நிலையில், இந்த மாநிலத்தின் பெயரைத் 'தமிழ்நாடு' என மாற்றவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. 'தமிழரசுக் கட்சி' உள்ளிட்ட பல அமைப்புகள் இதனை முன்வைத்துப் போராடின.

அரசாங்கம் இந்தப் போராட்டத்தை ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. 'பழைய பெயரைத் தொடர்வதில் பல வசதிகள் இருக்கின்றன' என்றும், 'தமிழ்நாடு என்ற பெயர், சமீபத்தில் உருவாக்கப்பட்டது, அதற்கு ஒரு கலாசாரப் பின்னணி இல்லை' என்றும் சொல்லிவந்தனர்.

இதனை அறிஞர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். தமிழ்நாடு என்ற பெயர் பன்னெடுங்காலமாக நமது இலக்கியங்களில் பயின்று வந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்தப் பெயர்தான் நமது மாநிலத்துக்குப் பொருத்தமானது என்றார்கள். பாரதியாரின்

'நீலத்திரைக்கடல் ஓரத்திலே - நின்று

நித்தம் தவம் செய்யும் குமரியெல்லை - வட

மாலவன் குன்றம் இவற்றிடை யேபுகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு'

என்ற பாடலையும், வேறுசில பாடல்களையும் அவர்கள் சான்றாகக் குறிப்பிட்டனர்.

1956ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார் என்ற காந்தியவாதி, 'நமது மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என மாற்றவேண்டும்' என்பது உள்ளிட்ட

12 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்குப் பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால் அப்போதும், அரசாங்கத்திலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல நாட்கள், பல வாரங்கள் தொடர்ந்தது. அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

எழுபத்தைந்து நாள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு, 1956 அக்டோபர் 13ம் தேதி, சங்கரலிங்கனார் உயிர்துறந்தார். தன்னுடைய கனவான, 'தமிழ்நாடு' எனும் பெயர் மாற்றத்தை அவர் காணவே இல்லை.

அதேசமயம், அவருடைய தியாகத்தைத் தொடர்ந்து, மக்களிடையே 'தமிழ்நாடு' எனும் பெயருக்கு ஆதரவு பெருகியது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இந்தக் கோரிக்கை ஒலித்தது. பெயர்மாற்றம் ஏன் தேவை என்பது பற்றிய விவாதங்கள் பரவலாக நடைபெற்றன.

எனினும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. 1967ம் ஆண்டுதான், மெட்ராஸ் மாநிலத்தின் பெயரைத் 'தமிழ்நாடு' என்று மாற்றுவதற்கான முயற்சிகள் சூடுபிடித்தன.

இதையடுத்து, 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, நமது மாநிலத்தின் பெயர் 'தமிழ்நாடு' என்று மாற்றப்பட்டது. அப்போதைய முதல்வரான சி. என். அண்ணாதுரை, சங்கரலிங்கனாரைக் குறிப்பிட்டுப் புகழ்ந்தார். அவரது தியாகத்தை எல்லாரும் நினைவில்கொள்ள வேண்டும் என்றார்.

இப்படிச் சுமார் பதினைந்தாண்டுகாலப் போராட்டத்துக்குப் பிறகுதான், 'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்குக் கிடைத்தது. இந்திய அளவிலும், உலக அரங்கிலும் நமது தனித்துவமான அடையாளமாகத் திகழ்கிறது!

- என். சொக்கன்






      Dinamalar
      Follow us