பல்லவ அரசர்களில் மகேந்திர வர்மன் புகழ்பெற்றவர்.
சாளுக்கிய தேசத்தை ஆண்டு வந்த இரண்டாம் புலிகேசி, தன் பேரரசை விரிவுபடுத்துவதற்காகப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தார். நூற்றுக்கணக்கான கொடிகளையும், குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பிய தூசி, 'எதிர்க்க வந்த பல்லவ வேந்தன் ஒளியை மங்கச் செய்தது' என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
புலிகேசி, பல்லவ நாட்டில் நுழைந்தபோது, அப்படையெடுப்பை மகேந்திரவர்மன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் தற்காப்புக்காக காஞ்சிபுரக் கோட்டையில் மறைந்து கொண்டார்.
பல்லவனுக்கு எதிராய் புலிகேசி படையெடுத்து வந்ததில், சேர சோழ பாண்டிய மன்னர்கள் மகிழ்ந்தனர். காவிரிக்கரை வந்த புலிகேசியின் படைகள், பிறகு திரும்பின.
புலிகேசியின் படைகள் திரும்பிச் செல்கையில் காஞ்சிக்கருகே 'புள்ளலூர்' என்ற இடத்தில் மகேந்திர வர்மனின் படைகள் காத்திருந்து திடீர்த் தாக்குதல் நடத்தின. இருதரப்புக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. வெற்றிக் களிப்போடு நாடு திரும்பியிருக்க வேண்டிய புலிகேசி, இந்தத் தாக்குதலால் சேதங்களோடு பின்வாங்க வேண்டியதாயிற்று. அப்போரினால் பல்லவர்களின் சாளுக்கியப் பகை இன்னும் அதிகமாயிற்று. மகேந்திர வர்மனின் காலத்திற்குப் பிறகும், அவரது மகன் நரசிம்ம வர்மன் காலத்தில், பல்லவ, சாளுக்கியப் போர்கள் நடந்தன.
மகேந்திரவர்மப் பல்லவனின் ஆட்சியில் எண்ணற்ற குடைவரைக் கோவில்கள் அமைக்கப்பட்டன.
இவரது ஆட்சிக் காலம் 600 முதல் 630 வரை.
-காவிரி மைந்தன்

