
ரொட்டி, சப்பாத்தி, இடியாப்பம், முறுக்கு போன்ற உணவு பண்டங்கள் செய்வதற்கு, பொருட்கள் மாவாகத் தேவைப்படுகின்றன. இவற்றை அரைப்பதற்கு இப்போது 'அரைவை மில்கள்' இருக்கின்றன. அந்தக் காலத்தில் திரிகை எனப்படும் எந்திரக்கல் மட்டுமே இருந்தது. இது திருகை, திரிமரம், திரிக்கல் என்றும் அழைக்கப்பட்டது.
உலகம் முழுக்க உள்ள மக்கள், இத்திரிகை கல்லை பயன்படுத்தியே உலர்ந்த தானியங்களை அரைத்தார்கள். பொருட்களை மாவு ஆக்குவது மட்டுமல்ல, பருப்பு வகைகள், தானியங்களை உடைத்தெடுக்கவும் இந்தத் திரிகை கல்தான் பயன்படுத்தப்பட்டது.
திரிகல் வடிவம்
வட்டவடிவில் இரண்டு கருங்கற்கள் குடைந்து வைக்கப்பட்டிருக்கும். ஒன்று நகர முடியாதபடி அடி கனத்து இருக்கும். மேல் கல் சற்று கனம் குறைந்து காணப்படும். மேல் கல்லில் கைப்பிடி அமைப்பதற்கு ஒரு சிறு துளை இருக்கும். அத்துளையில் மரக்கொம்பினால் ஆன கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கும். சுத்தியல் கொண்டு அக்கொம்பை இறுக்கமாக அடித்து வைத்திருப்பார்கள். அப்பொழுதுதான் சுழற்றும் போது குச்சி கையோடு வராது.
மேல் கல்லையும், கீழ் கல்லையும் நடுவில் சிறிய அச்சு (குச்சு ) ஒன்று இணைக்கும். எந்திரத்தை சுழற்றும் போது விலகிப்போகாமல் இருக்கவும் அந்த அ(கு)ச்சு உதவும். மேல் கல்லில் உள்ள வாய் அகன்ற துளையின் வழியாக தானியங்களை சிறிது சிறிதாக போட்டு கல்லை சுற்றுவார்கள். சுற்றும் போது, தானியங்கள் அரை பட்டு, மாவு பொருட்கள் கல்லைச் சுற்றி விழும்.
இந்த முறையில்தான் அரிசி மாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றை அரைத்தார்கள். அரிசி நொய் வேண்டும் எனில் கல்லை சுழற்றும் போது மேலாகப் பிடித்து லேசாக தூக்கி விட்டு, மறுபடியும் சுழற்ற வேண்டும். இப்படி தூக்கி விடும் இடை வெளியில் அரிசி முழுதாக அரைபடாமல், நொய்யாக வந்து விழும். இந்த நொய்யில் கஞ்சி, உப்புமா போன்றவை தயாரித்தார்கள். துவரை, காராமணி போன்ற பயறுகளை இதில் போட்டுத்தான் பருப்பாக உடைத்தார்கள்.
'களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையோடு கலப்பை சாத்தி'
பெரும்பாணாற்றுப்படையில் திரிகை மரம் குறித்த பாடல் இது.
யானைக் காலின் அடிபாகத்தைப் போன்று திரிகை எனப்படும் திரிமரம் இருந்தது. அதன் அருகே கலப்பையும் சாத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.
எகிப்தில் திரிகை அரைப்பதற்கென்றே பணிப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கல்லில் உட்கார்ந்து அரைத்துக்கொண்டிருப்பதால் அவர்களின் உடல் நிலை பாதித்து, எலும்பும் தேய்ந்து போனதாம்.
ஆடும் திரிகை அசைந்து நிற்கும் முன்
ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்'
என்கிறது ஒரு பழம் பாடல்.
அகநானூற்றிலும்(224 வது பாடல்) திரிமரம் குறித்த பதிவு ஒன்று உண்டு.

