
நாகப்பட்டினம் அருகே கழுக்காணி முட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட, செப்பேடுகள்தான் இதுவரை தமிழகத்தில் கிடைத்த செப்பேடுகளில் மிகப் பெரியவை. ஒரு வளையத்தில் மொத்தம் 86 செப்பேடுகள் கிடைத்தன. இதுவரை கிடைத்த தமிழகச் செப்பேடுகள் எதிலும் இவ்வாறு எண்ணிக்கை குறிப்பிடவில்லை.
கழுக்காணி கைலாசநாதர் கோவில் மண்டபம் அருகில், கடந்த 2010 ம் ஆண்டு குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் செப்புச்சிலைகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள் போன்றவற்றுடன், செப்பேடுகளும் கிடைத்தன. இவை சோழர் காலத்தைச் சேர்ந்தவை.
செப்பேட்டில்...
* அமர்ந்த நிலையில் புலி, இரண்டு கயல்கள் (மீன்கள்), நாணுடன் கூடிய வில், இவற்றின் இருபுறமும் குத்து விளக்குகள்.
* இவற்றுக்கு மேல் நடுவில் வெண்கொற்றக் குடை.
* இவ்வளையத்தில் கோத்த செப்பேடு எண்பத்தாறு' என்று, வளையத்திலேயே பொறிக்கப்பட்டு உள்ளது.
* குறிப்பில் 86 என்று இருந்தாலும் 85 செப்பேடுகளே இருந்தன. இவற்றின் நீளம்: 44 செ.மீ.; அகலம்: 21 செ.மீ.
'தர்ம ஏதத் இராஜேந்திர தேவஸ்ய பரகேசரி வர்மணக ஸ்ரீமச்சாசனம் ஊர்வி ச சிரோபிஹ சேகரி' என்று கிரந்த எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. இதன் பொருள், 'இந்தத் தர்மம் இராசேந்திர தேவன் என்கிற பரகேசரி வர்மனால் உலகத்தின் உச்சியின் மீது (தலை சிகரத்தின்) வைக்கப்படுகிறது' என்பதாகும்.
அதாவது முதலாம் இராஜாதிராஜன், தனது முப்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (1053) அளித்த அறக்கொடையைக் குறித்த, செய்தியை அந்த செப்பேடு பதிவு செய்திருக்கிறது. முதலாம் ராஜேந்திரச் சோழனின் மூத்த மகன்தான் இராஜாதிராஜன். அதாவது ராஜராஜ சோழனின் பெயரன்.
அவருக்கு கோவிராஜகேசரிவர்மன், விஜயராஜேந்திரதேவர் என்ற வேறு பெயர்களும் உள்ளன.
இந்த அரசனின் உடன் பிறந்தவர்கள் இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன், அதிராஜேந்திரன்.
பல்லவ மன்னனான கம்ப வர்மன் என்பவனிடமிருந்து, விஜயாலயச் சோழன் தஞ்சையைக் கைப்பற்றி, -பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும் இச்செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
இராஜாதிராஜன், மேலைச் சாளுக்கிய மன்னன் ஆகவ மல்லன் சோமேஸ்வரனை எதிர்த்துக் கொப்பத்தில் செய்த போரில், போர்க் களத்திலேயே யானையின் மீது அமர்ந்தவாறே உயிர் விட்டார்.
இரண்டாம் இராஜேந்திரன், அந்தப் போர்க்களத்திலேயே சோழ அரசனாக முடி சூட்டிக் கொண்டார். ஆகவமல்லனின் தம்பி ஜெயசிம்மனைக் கொன்று, வெற்றி வாகை சூடிய இரண்டாம் இராஜேந்திரன், தன் அண்ணனைக் கொன்றவர்களை பழி தீர்த்தார். அதன் அடையாளமாக கொல்லாபுரத்தில் வெற்றித் தூணையும் நிறுவினார். கொப்பம் தற்போது ஆந்திராவில் உள்ளது. அது இப்போது குப்பம் என்று அழைக்கப்படுகிறது.

