
சார்லஸ் ராபர்ட் டார்வின் - 1809 - 1882
இங்கிலாந்து, ஷ்ரூஸ்பரி (Shrewsbury)
சாதனை: உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கியது.
பள்ளிப் படிப்பு முடிந்ததும் டார்வினை மருத்துவம் படிக்க அனுப்பினார் அவரது அப்பா. உயிரினங்களை உயிருடன் அறுக்கப் பிடிக்காத டார்வினுக்கோ இயற்கையை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் இருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர் மூலமாக, தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காகப் புறப்பட்ட, ஹெச்.எம்.எஸ். பீகில் (HMS Beagle) என்ற கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
டிசம்பர் 27, 1831ல் தொடங்கி, ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்தப் பயணத்தில், அனைத்து உயிரினங்களையும் டார்வின் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிய வர்ணனைகளையும் எழுதி வைத்தார். பின்னர், ஒவ்வொரு நிலப்பகுதியையும் உற்றுநோக்கி அப்பகுதி ஏன் அப்படி இருக்கிறது என்பதற்கான காரணத்தையும் தேடத் தொடங்கினார்.
தாவரங்கள், பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்து, உயிரினங்களின் வாழ்க்கை இடத்துக்கு இடம் மாறி இருப்பதைக் கண்டு வியந்தார். விலங்கு, பறவை, பூச்சிகள் ஆகியவற்றின் மாதிரிகளையும், மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்பதையும் ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்டினார். தன்னுடைய கோட்பாடுகளை விளக்கி, 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' (The Origin of Species by Natural Selection) என்ற புத்தகத்தை எழுதினார்.
டார்வின் கோட்பாட்டின் மூன்று முக்கியக்கூறுகள்
1. வேறுபாடு (ஒவ்வொரு உயிரினங்கள் இடையேயும் ஒற்றுமை, வேற்றுமைகள்)
2. மரபு வழி (ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு உயிர் வடிவத்தை எடுத்துச் செல்லும் வாழ்வு சங்கிலி)
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (வாழும் சூழலுக்கு ஏற்ப இனப்பெருக்கம், உடலமைப்பு, குணங்களில் உண்டாகும் மாறுபாடுகள்)

