sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வீட்டுப்பாடம் சுமையா - பயிற்சியா?

/

வீட்டுப்பாடம் சுமையா - பயிற்சியா?

வீட்டுப்பாடம் சுமையா - பயிற்சியா?

வீட்டுப்பாடம் சுமையா - பயிற்சியா?


PUBLISHED ON : ஜூன் 19, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 19, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்னுமா பள்ளிகள் வீட்டுப்பாடம் கொடுக்கின்றன? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. பல பள்ளிகள் வொர்க் ஷீட்களுக்கு மாறிவிட்டன. ஆனால், ஒரு சில பள்ளிகள், இன்னமும் வீட்டுப் பாடம் கொடுக்கின்றன. இதைச் செய்ய ஆசிரியர்களுக்கு ஒரு நியாயம் இருக்கலாம், மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? சென்னை சேத்துப்பட்டு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களிடம் கேட்டோம்:

“வீட்டுப்பாடம், நிறைய மாணவர்களுக்கு சுமையாத்தான் இருக்கு. மாணவர்கள் பள்ளியில் முழுநேரமும் படிச்சிட்டேதான் இருக்காங்க. வீட்டுக்கு வந்தா பெற்றோர்கள் பாட்டுப் பயிற்சி, நடனப்பயிற்சி, கணினி பயிற்சி என்று பல பயிற்சிகளுக்குப் போகச் சொல்றாங்க. இந்த நேரம் தவிர மற்ற நேரத்தில வீட்டுப்பாடம் செஞ்சா, எப்போ விளையாடறது? நண்பர்களிடம் பேசறது? இதனால், உடல் ரீதியான பாதிப்புகளும், மன அழுத்தங்களும்தான் ஏற்படுது. வீட்டுப்பாடம் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராகவும் இருக்கு.” என்று படபடவென்று பேச ஆரம்பித்தார் த.கவின்வேந்தன்.

“அப்படிச் சொல்ல முடியாது. பள்ளியில் நடத்தறதை வீட்டுப்பாடம் செய்வதன் மூலம் பயிற்சி செய்தால், மனதில் நன்றாகப் பதியும். எதையும் சுமை என்று பார்த்தால், படிப்பதும் சுமைதான். பாடத்தைக் கவனமா கேக்கறோம். ஆனா அது மனதில் பதிவது வீட்டுப்பாடம் செய்வதால்தான். பள்ளியில என்ன படிச்சோம், என்ன புரிஞ்சுக்கிட்டோம்னு யோசிக்கறது, வீட்டுப் பாடம் செய்யும்போதுதான்” என்றார் சே.கண்மணி.

“பள்ளி விட்டு வந்ததும், டியூஷன் போகணும்; வீட்டுப்பாடம் செய்யணும்னு அடுத்தடுத்த வேலைகள் மாணவர்களை ஆக்கிரமிச்சுடுது. விளையாட நேரமே இருக்கறதில்லை. எல்லா நேரமும் படிச்சுக்கிட்டேவா இருக்க முடியும்? வீட்டுப்பாடம் மட்டும் எழுதி முடிச்சா பத்தாது. பேரன்ட்ஸ் வேற இன்னும் நாலு கணக்கு கூடுதலா போடுன்னு கேட்டுக்கிட்டே இருப்பாங்க. ஆசையா படிக்கறது போய், அழுத்தத்துல படிக்கற நிலைமை வந்துடும். மனசு படிப்புல சேரவே சேராது,” என்று யதார்த்தம் பேசினார் பா.தருண்.

“ரிடென்ஷன்னு ஒரு விஷயம் இருக்கு. வகுப்புல எவ்வளவுதான் சொல்லிக்கொடுத்தாலும், மனசுல 70, 80 சதவீதம்தான் தங்கும். வீட்டுக்கு வந்துட்டா, அது பத்து சதவீதமாகக்கூட குறைஞ்சிடலாம். வீட்டுப்பாடம் செய்யும்போது, பள்ளியில் படித்த விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியும். இது மாணவர்களுக்கு நன்மையை மட்டுமே தருது. பள்ளியில் நாம ஏழு மணி நேரம்தான் படிக்கிறோம். மற்றபடி கேம் விளையாட, 'டிவி' பார்க்கத்தான் செலவிடறோம். நாலு வருஷம் கஷ்டப்பட்டு படிச்சு, வீட்டுப்பாடம் செய்து பயிற்சி எடுத்தா, அடுத்த நாற்பது வருஷங்களுக்கு, நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கும்தானே?” என்றார் ஆர்.திரிலோகநாத்.

“மாணவர்களுக்கு இப்ப இருக்கிற பாடத்திட்டம் கடினமானதா இருக்கு.” என்று தயக்கத்தோடு தொடங்கிய ச.காவ்யா, தொடர்ந்து பேசினார். “ஆனா அப்படி இருந்தாதான் மாணவர்கள் முழுமையான கல்வியை பெற முடியும்னு பாடத்திட்டங்களை வடிவமைச்சிருக்காங்க. பொருளாதார மேதை அமர்த்தியா சென், தற்போதைய கல்விமுறை, மாணவர்களுக்கு மனஅழுத்தம் தரக்கூடியதாக உள்ளது. மேல் படிப்பு என்ற பெயரில் இயந்திரத்தனமாகப் பிழியப்படுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதனால, வீட்டுக்கு போனா டியூஷன், செஸ் கிளாஸ், பாட்டு கிளாஸ்ன்னு மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கு. இதோடகூட வீட்டுப்பாடமும் செய்யணும்னா, நிச்சயமாக அது மாணவர்களுக்கு சுமைதான்.”

“பிரச்னை வீட்டுப் பாடம் செய்யற விதத்துல இருக்கு. அத்தியாயத்தின் கடைசியில இருக்கிற கேள்வி, பதில், ஃபில் இன் த பிளாங்க்ஸ் போன்ற விஷயங்களை அப்படியே எழுதிப் பார்த்து, மனனம் செய்யற மாதிரி வேலைசெஞ்சாதான் போர் அடிக்கும். அதனால், பெரிய பலன் இல்லை. உண்மையில, பாடத்தை இன்னும் ஆழமா புரிஞ்சுக்கற மாதிரி அமைச்சா, வீட்டுப் பாடம் போர் அடிக்காது. நல்ல பயிற்சியா இருக்கும்,” என்று புதுக் கோணத்தைச் சொன்னார் ரே.பா.ஐஸ்வர்யா.

“வீட்டுப்பாடம் பயிற்சியா சுமையா என்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.” என்ற ர.தீப்தா, “என் கண்ணோட்டத்தில அதை பயிற்சியாகத்தான் கருதறேன். ஒரு கல்லை கவனமாகச் செதுக்கினால்தான் சிலை அழகாக உருவாகும். ஆசிரியர்கள்தான் சிற்பிகள். அவர்கள் நம்மை கவனமாக செதுக்குவதால்தான், மாணவர்களாகிய நாம் உயர்வடைகிறோம். கவனமாக செதுக்குவதோடு, நுணுக்கமான முறையில் அழகு செய்ய உதவுவதுதான் வீட்டுப்பாடம். வீட்டுப்பாடத்தை விரும்பிச் செய்வதால், நமக்கு பயிற்சியும், நம் கல்வி முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கிறது.” என்றார்.

எல்லாரும் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த, சு.தீக் ஷிதா, வாயைத் திறந்தார். “பல மாணவர்கள் ஹோம் ஒர்க் செஞ்சுடுவாங்க. அதனால், அவங்களோட மனசுல அந்தப் பாடம் போய் பதிஞ்சுதான்னு எப்படித் தெரியும்? மறுநாள் ஹோம் ஒர்க் புக்கைப் பார்த்து, எழுதிட்டியான்னு கவனிச்சா மட்டும் போதாது. மாணவர்கள் அதை புரிஞ்சுக்கிட்டுத்தான் எழுதினாங்கன்னு உறுதிப்படுத்திக்கணும். வீட்டுப் பாடத்தை மாணவர்களுடைய விருப்பத்துக்கு ஏற்ப விட்டாதான், அது அவங்களோட மனசுல போய் உட்காரும். வற்புறுத்தினா, அதையும் கடனேன்னுதான் செய்வாங்க.” என்று முத்தாய்ப்பாகச் சொன்னார் தீக் ஷிதா.

ஆசிரியர்கள், பயிற்சிக்காக வீட்டுப் பாடம் தருகின்றனர். ஆனால், அதைப் பயிற்சியாய் தராமல், அயற்சிப்படுத்துவதாய் தருகின்றனர். வீட்டுப் பாடத்தால் எங்களுக்கு நாங்களாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. விடுமுறை நாட்களிலும் வீட்டுப் பாடத்தைக் கொடுத்து, எங்களின் மனச்சுமையை மலைச்சுமையாய் மாற்றுகின்றனர். மொத்தத்தில், வீட்டுப்பாடம் உடல் சுமையல்ல, மனச்சுமையே.

ப. சௌமியா (10ம் வகுப்பு) : 142, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, மதுரை.

வீட்டுப்பாடம் செய்வது சுமையே! ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கும்போது, அனைத்துப் பாடங்களிலும் கொடுக்கிறார்கள். இதனால் வீட்டில் வைத்து அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிக்க முடிவதில்லை. எல்லா ஆசிரியர்களும் வீட்டுப்பாடம் கொடுப்பதால், பாடங்களை மனநிறைவோடு ஏற்க இயலாமல் போகிறது. ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் வீட்டுப் பாடங்களைத் தந்தால் மட்டுமே, வீட்டுப்பாடம் செய்வது பயிற்சியாக அமையும்!

ஷா.ஆஷிபா சஃப்ரின் (11ம் வகுப்பு) : ஆல்வின் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்--.

வீட்டுப்பாடம் செய்வது பயிற்சியே! மாணவர்கள் பள்ளி செல்லும் நேரம் தவிர்த்து, அதிக நேரம் வீட்டில் இருப்பதால், தினந்தோறும் வீட்டுப்பாடங்களைக் குறைவின்றி நிறைவாகச் செய்து முடிக்க வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் மேற்பார்வையில் மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யும்போது, மாணவர்களின் எழுதும் திறன், வரைதிறன், நினைவாற்றல் மேம்பட வழி ஏற்படுகிறது. வீட்டுப்பாடம் செய்வதை பயிற்சியாகக் கருதி, ஆர்வத்துடன் செயல்பட்டால் மட்டுமே, மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.

தெ.திரிஷா (9 ம் வகுப்பு)

அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்---.







      Dinamalar
      Follow us