PUBLISHED ON : ஜூன் 19, 2017

லூயிஸ் மவுன்ட்பேட்டன்
25.6.1900 - 27.8.1979
விண்ட்ஸர், இங்கிலாந்து
ஆளும் உரிமையை பிரிட்டன் நாடாளுமன்றத்திடம் இருந்து, இந்தியாவுக்கு மாற்றும் முக்கியமான வேலை. ஆங்கிலேயர்கள் சுமுகமாக வெளியேறவும், பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு சுதந்திர நாடுகளைப் பிரிப்பதற்கான பொறுப்பு அவரிடம் இருந்தது. இந்திய சுதந்திரத்துக்கு அவர் குறித்து வைத்திருந்த தேதி, 1948 ஜூன் 30. அதற்கு முன்னரே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால், 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் வழங்க முடிவெடுத்தார். அவர் வேறு யாருமல்ல, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலுமான லூயிஸ் மவுன்ட்பேட்டன்.
தொடக்கக் கல்வியை வீட்டிலேயே பயின்றார். பிறகு பள்ளிப் படிப்பை முடித்து, 1916ல் கடற்படையில் சேர்ந்தார். பணியில் திறமையுடனும் சிறப்பாகவும் இருந்ததால், 1920ல் கடற்படை தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். கடற்படையில் பணியாற்றினாலும், தனது படிப்பை நிறுத்தாமல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் சேர்ந்தார்.
வின்ஸ்டன் சர்ச்சிலுடன் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தார். கடற்படையில் படிப்படியாக உயர்ந்து, 1939ல் 'கெல்லி' என்கிற போர்க்கப்பலின் கேப்டனாக பொறுப்பேற்றார். இரண்டாம் உலகப்போரில், சிறந்த கமாண்டராகச் செயலாற்றி, பல துணிச்சலான வியூகங்களை வகுத்தார்.
1947ல், தற்போதைய குடியரசுத் தலைவருக்கு இணையான பதவியான, இந்தியாவின் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குகிற முக்கியமான வேலையும் அவரிடம் கொடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த இந்தியாவுக்கே சுதந்திரம் அளிக்க அவர் விரும்பினார். ஆனால், பிரிவினையை அவரால் தடுக்க முடியவில்லை.
இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரத்துக்குப் பிறகு, பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவைவிட்டு வெளியேறினர். மவுன்ட்பேட்டன் ஜூன் 1948 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். அதன் பிறகு இங்கிலாந்து திரும்பி, 1949ல் மீண்டும் கடற்படையில் கமாண்டராகப் பணியாற்றினார்.
சிறப்புப் பெயர்கள்: ரைட் ஹானரபிள், பர்மாவின் முதலாவது கோமகன்
பதக்கம், விருதுகள்: இந்திய சுதந்திர மெடல், பிரிட்டிஷ் வார் மெடல், விக்டரி மெடல், அட்லாண்டிக் ஸ்டார், ஆப்பிரிக்கா ஸ்டார், பர்மா ஸ்டார், இத்தாலி ஸ்டார் உள்ளிட்ட பல