PUBLISHED ON : ஏப் 11, 2016

தேர்தல் என்கிற சொல் உங்கள் காதில் விழாமல் தவிர்க்கவே முடியாது.
இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் நடக்க இருக்கிறது.
சட்டமன்றம் என்பதைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொள்வோம். கட்சி அரசியல் பற்றி இல்லாத விஷயங்கள்!
தமிழகத்தில் மொத்தம் உள்ள சட்ட மன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை: 234.
தமிழக சட்டமன்றம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது.
இந்த சட்டமன்றத்துக்கு ஒருவர் தலைவர். அவர் சபாநாயகர். முதல்வர் உட்பட அனைவரும் இவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். அவையில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பு. பேரவை நடக்கும்பொழுது யாராவது ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்களை அவையை விட்டுத் தற்காலிகமாக நீக்குவார். எம்.எல்.ஏ-.க்களின் பதவியைப் பறிக்கும் அதிகாரமும் இவருக்கு உண்டு. தவறு செய்யும் உறுப்பினர்களை இவரால் சிறைக்கு அனுப்பவும் முடியும்.
இவ்வளவு அதிகாரம் மிகுந்த சபாநாயர் பதவிக்கும் துணை சபாநாயகர் பதவிக்கும் பொருத்தமான நபர்களைத் தேர்வு செய்வது ஆட்சி அமைக்கும் கட்சியினர்தான்.
மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 118 தொகுதிகளிலாவது ஒரு கட்சி வென்றிருக்க வேண்டும். அதாவது 234ல் சரிபாதியைவிட ( 117) ஒரு தொகுதி கூடுதலாக வென்றிருக்க வேண்டும். அப்படி வென்ற கட்சி தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும். கவர்னரிடம் சென்று ஆட்சியமைக்க உரிமை கோரும்.
அந்தத் தலைவரை கவர்னர் அழைப்பார். அமைச்சர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். சட்ட மன்றம் கூடும். அவையின் (அதிக முறை எம்.எல்.ஏ. வாக இருந்தவர்) மூத்த உறுப்பினர், தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். அவரிடம் அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக (சட்ட மன்ற உறுப்பினராக) பதவி ஏற்பார்கள்.
நடக்க இருக்கும் தேர்தலில் உங்க ஊர் எந்த சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது என்று அறிந்திருக்கிறீர்களா?
