PUBLISHED ON : மார் 11, 2019
“பார்த்துக்கிட்டே இருக்கும்போதே, எட்டாங்கிளாஸ் முடிஞ்சுபோச்சு மிஸ். இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருந்தது. புது புக்ஸ், பேக், ஷூ, சாக்ஸ் எல்லாம் வாங்கினேன். இன்னும் ரெண்டு வாரம் தான். ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. அடுத்த கிளாஸ் வந்துடும்…”
ஓவியா கண்களில் ஆச்சரியம் பொங்கச் சொன்னபோது, ஒருவித சோகம் இருந்தது. எனக்கும் சமீப காலமாக அப்படித் தோன்ற ஆரம்பித்துவிட்டது. நினைத்தே பார்க்க முடியாத வேகத்தில் காலம் ஓடுகிறது.
தினமும் ஸ்கூல் வந்தேன். வகுப்புகளில் அமர்ந்து இருந்தேன். பல விஷயங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. புரிந்துகொண்டேன். தேர்வு எழுதினேன். பார்த்தால், ஆண்டு முடிந்துவிட்டது. பல புதிய நண்பர்கள் உருவானார்கள். சிலர்கூட பேசுவது நின்றுபோனது.
என் அனுபவங்களையும் சொல்லிக்கொண்டே நடந்தேன். நேற்று போல் இன்று இல்லை. ஒவ்வொரு நாளும் வேறு மாதிரி இருந்தது. ஒவ்வொரு நாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், அடுத்த நாள் வந்தவுடன் முந்தைய நாள் மறந்து போய்விடும்.
நடுவே, இரண்டு தேர்வுகள் வந்தன. நன்றாகப் படித்து மதிப்பெண் வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தேன். சில பாடங்களில் முடிந்தது. சிலவற்றில் முடியவில்லை. அம்மாவும் அப்பாவும் கோபித்துக் கொண்டார்கள்.
நானும் ஒரு சில தீர்மானங்கள் போட்டுக்கொண்டேன். இன்னும் முனைந்து படிப்பேன், நல்ல மதிப்பெண் வாங்கி, அம்மாவை ஆச்சரியப்படுத்துவேன் என்றெல்லாம் கற்பனை செய்தேன். நடைபெறவில்லை.
கிரிக்கெட் விளையாடவேண்டும், அதில் ஸ்கூல் டீம் வழியாக போட்டிகளுக்கெல்லாம் போகவேண்டும் என்றும் திட்டமிட்டேன். முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்தேன். உமா மிஸ் வெறுமனே கேட்டுக்கொண்டு வந்தார்கள்.
“காலம் மாதிரி சுவாரசியமான விஷயம் எதுவுமே இல்லை கதிர். அதை நாம் எப்படிப் புரிஞ்சுக்கறோம்ங்கறதுலதான் வெற்றி இருக்கு.”
“எப்படிச் சொல்றீங்க மிஸ்?”
“காலம் எல்லைக்குட்பட்டது தெரியுமா?”
“காலத்துக்கு எல்லை இல்லைன்னுதானே கேள்விப்பட்டு இருக்கேன்.”
“உண்மைதான். ஆனால், எல்லா செயல்களுக்கும் ஒரு காலபிரமாணம் உண்டு. ஒரு நாளைக்கு 24 மணிநேரம், ஒரு மணிநேரத்துக்கு 60 நிமிஷங்கறா மாதிரி, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் தான் உண்டு. தேர்வுன்னா அது மூணு மணிநேரம் தான். ஒரு ஃபுட்பால் விளையாட்டுன்னா, அதுக்கு மொத்தமே 1.30 மணிநேரம்தான். அதிலேயும் இரண்டு பகுதிகள் உண்டு.
இது மாதிரி ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரம் உண்டு. இதனால் தான் நான் நேரத்துக்கு வரையறை உண்டு. எல்லை உண்டுன்னு சொல்றேன். இந்த எல்லைக்குள்ள நாம் சாதனை செய்யணும். ஒன்றரை மணிநேரம் மட்டுமல்ல, நாள் முழுக்க ஃபுட்பால் விளையாடலாம். அது பயிற்சி. உண்மையான கேம்ங்கறது, போட்டி நடக்கற 1.30 மணிநேரம் தான்.
இதுக்குள்ள என்ன செய்யறோம்ங்கறதுதான் முக்கியம். கற்றுக்கொண்ட திறமையெல்லாம் மொத்தமா இறக்கி வெக்கற நேரம் அது. கோல்டன் டைம்னு அதைச் சொல்லலாம். திறமையை நிரூபிக்கற நேரம். இது ஒரு சிந்தனை.
இன்னொரு சிந்தனை, தொடர்ச்சி. அதாவது எப்போவோ ஒருமுறை விளையாடக் கூடாது. ஒவ்வொரு நாளும் அரை மணி, ஒரு மணிநேரம் விளையாடிக்கிட்டே இருக்கணும். அதுதான் டிசிப்ளின். அதுமட்டுமல்ல, அந்த விளையாட்டுல உனக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்கு, சாதனை செய்யணும்ங்கற முனைப்பு இருக்குங்கறதை உனக்கு நீயே நிரூபிச்சுக்க கிடைச்ச வாய்ப்பு.
காலம் ஓடிக்கிட்டே இருக்கும். அதை நம்மால் பிடிச்சு வெக்கமுடியாது. அதுகூட நாமும் வேகமாக ஓடி பல வேலைகளைச் செய்யணும். செய்யலைன்னா காலத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. அதைப் பயன்படுத்தவேண்டிய பொறுப்பு நம்மோடது.
காலம் யாருக்காகவும் காத்திருக்காது. ஒரு வேலையைக் கதிர்தான் செய்யணும்னு அது காத்திருக்காது. ஓவியா செய்தால் ஏற்றுக்கொள்ளும். யார் காலத்தோட ஒட்டி வேலைசெய்யறாங்களோ, அவங்களுக்குக் காலம் கருணையுள்ளத்தோட அத்தனை வளங்களையும் வாரி வழங்கும்.
காலம் எப்போதும் முன்னோக்கியது. கடந்த காலம் என்பது முடிஞ்சுபோனது. அது திரும்பப் போறதில்லை. நிகழ்காலம்ங்கறது இப்போ நடந்துக்கிட்டே இருக்கிறது. அதுவும் சற்றுநேரத்துல முடிஞ்சுபோயிடும். அதனால், காலம்ங்கறது உண்மையில் எதிரே இருக்கிறதுதான். அதாவது அடுத்த ஒருமணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஓராண்டு… இப்படி நமக்கு முன்னே பெரிய வாய்ப்புகள் மலையா கொட்டிக்கிடக்கு. அது இன்னும் தீரலை.
இங்கேதான் உங்க புத்திசாலித்தனம் இருக்கு. காலத்தை எப்படி பயனுள்ளதாக மாத்திக்கணுங்கறது உங்ககிட்ட தான் இருக்கு. அடுத்தது நீ 9ஆம் வகுப்பு வரப்போறே. உன் முன்னாடி ஒரு முழு ஆண்டு இருக்கு. அதுல நீ என்னவெல்லாம் கத்துக்கணும், செய்யணும்ங்கறதை முடிவு செய். அதை அடையறதுக்குத் தேவையான கால அவகாசத்தைத் திட்டமிடு. அந்தக் குறிக்கோளைச் சின்னச்சின்னப் பகுதிகளாகப் பிரிச்சுக்கோ. ஒவ்வொரு நாளும் அந்தச் சின்னச்சின்னப் பகுதிகளை முடிச்சுக்கிட்டே வா. அது போதும். திரும்பிப் பார்க்கும்போது, நீ நினைச்ச அத்தனை வேலைகளையும் செஞ்சு முடிச்சிருப்பே.
இதுதான் காலத்தைக் கைப்பிடிக்குள் வைத்துக்கொள்ளுதல். நான் வேற, காலம் வேறன்னு நினைக்காதே. காலம் ஓடிக்கிட்டே இருக்குன்னு சொல்லாதே. அது ஓடல. நீயும் ஓடணும்னுதான் கூப்பிடுது. கைபிடிச்சு ஓடி நினைச்சதை சாதிக்க வான்னுதான் கூப்பிடுது. அதுதான் உண்மையில் காலத்தின் குரல்.
காலங்கறது ஒரு வாய்ப்பு. ஒவ்வொரு நொடியும் ஒரு வாய்ப்பு. அதை ஆக்கப்பூர்வமாக மாத்திக்கறது உன்கிட்டதான் இருக்கு. ஒண்ணுமே செய்யலைன்னாலும் காலம் போய்க்கிட்டே இருக்கும், நிக்காமல் போற பஸ் மாதிரி. பஸ்ஸுல ஏரறது உன்கிட்ட தான் இருக்கு.”
காலத்தை சுருக்கமாக என் முன்னால் உமா மிஸ் காட்சிப்படுத்தியதில் நான் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
