PUBLISHED ON : மார் 11, 2019
மாயா இராமசுவாமி (Maya Ramaswamy)
மாயா இராமசுவாமி, வனவிலங்கு ஓவியர். வீட்டில் இருப்பதைவிட தோட்டத்திலும், பூங்காவிலும், காட்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர். 'டி.வி., இணையம் ஆகியவற்றைத் தாண்டிய ஆச்சரியங்கள் கொண்டது இயற்கை. இயல்பாகவே இயற்கையை நேசிக்கும்போது, மனது உற்சாகம் அடையும்'' என்பது இவரின் கருத்து. மாயாவுக்கு இயற்கை உயிரினங்களை ஓவியங்களாக்குவதில் ஆர்வம் ஏற்பட்டது இப்படித்தான். இவர் சிறுவர் புத்தகங்களுக்கு ஓவியங்களை வரைந்து வருகிறார். ராஜநாகம், பனிச்சிறுத்தை, கரடி, யானை, புலி என, இந்திய உயிரினங்களை மையமாக்கி எழுதும் நூல்களுக்கு தன் ஓவியங்கள் மூலம் உயிர் கொடுக்கிறார் மாயா.
சங்கீதா கடூர் Sangeetha Kadur
பெங்களூருவைச் சேர்ந்த சங்கீதா, புகழ்பெற்ற பறவை ஓவியர். புகைப்படங்களைவிட ஓவியங்களில் பறவைகளைத் துல்லியமாகக் காணலாம் என்பதில் நம்பிக்கை கொண்டவர். கார்கேஸ் சயின்ஸ் பௌண்டேஷன் (Gorgas Science Foundation) அமைப்புக்காக இவர் வரைந்த தி ஹம்மிங் பேர்டு புக் (The hummingbird book) ஓவியங்கள் இவரின் திறமைக்குச் சான்று. ''எழுத்துக்களைவிட படங்கள் மூலம் இயற்கையைப் பற்றி அறிவது மனத்தில் பதியும்'' என்கிறார் சங்கீதா. இவர் காடுகளுக்குச் சென்று பறவைகளைப் பார்த்து, நேரடியாய் வரைவதில் வல்லுநர்.
சுனிதா தாரீயம் Sunita Dhairyam
அமெரிக்கக் கனவுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்தியாவிற்கு மீண்டும் வந்தவர் சுனிதா. காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான மோதலைத் தீர்க்க, பந்திப்பூர் தேசியப் பூங்காவில் தங்கிப் பணியாற்றினார். கர்நாடகத்தைச் சேர்ந்த சுனிதா, புலிகளைக் காப்பது குறித்து, பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சுவர் ஓவியங்கள் வரைவது சுனிதாவின் பலம். தமது ஓவியங்களைப் பழங்குடி மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவிய பெருந்தன்மையாளர். பழங்குடிகளின் சுயதொழில் முயற்சிகளுக்கும் உதவி வருகிறார். சுனிதா வடிவமைத்த புலி உருவ டி ஷர்ட், சாவிக்கொத்து ஆகியவை சூழலியலாளர்களிடேயே மிகவும் பிரபலம்.
ஹேம்லதா பிரதான் Hemlata Pradhan
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹேம்லதா வரையும் செடிகள், கொடிகள், பூக்களை ஓவியம் என்று சில நிமிடங்கள் உற்றுப் பார்த்தால்தான் கண்டறிய முடியும். இந்தியா முழுவதிலும் உள்ள தாவரங்களை, ஓவியங்களாக்கிப் பதிவு செய்து வருகிறார். லண்டனில் தாவர ஓவியத்திற்கான படிப்பை முடித்தவர். தாவரங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த ஓவியங்களை வரைந்து வருகிறார்.
நிகாரிகா ராஜ்புத் Niharika Rajput
பறவைகளைச் சிற்பமாகச் செய்வது நிகாரிகாவின் தனித்திறன். இயற்கை மீது இருக்கும் ஆர்வத்தால், சிற்பங்களைச் செய்யச் சுயமாகக் கற்றுக்கொண்டவர். சிற்பங்களைச் செய்ய அதிக நேரத்தையும், உழைப்பையும் கொடுத்து, இளம் வயதில் சாதனை செய்து வருகிறார்.
3டி தொழில்நுட்பத்தில் படங்கள் வரைந்து, அதைச் சிற்பமாக மாற்றி வருகிறார். இந்தியப் பறவைகள் பலவற்றைச் சிற்பமாக மாற்றியிருக்கிறார். பள்ளி மாணவர்களுக்குப் பொம்மைகள் வடிவமைப்பது குறித்து வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
ரோஷிணி வ்யம் Roshni Vyam
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கோண்ட் பழங்குடி இன ஓவியர் ரோஷிணி. தன்னுடைய பகுதியைச் சேர்ந்த கோண்ட் பழங்குடி மக்களின் ஓவியங்களைச் சந்தைப்படுத்த உழைத்து வருகிறார். கோண்ட் பழங்குடியினரின் ஓவியங்களைக் காப்பதிலும், மக்களுக்கு அறிமுகம் செய்வதிலும் ரோஷிணி முக்கிய பங்காற்றி வருகிறார். நவாயனா, தாராபுக்ஸ் உள்ளிட்ட பதிப்பகங்களுக்கும் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
