தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெப்பத்தின் பிடியில் தென்னிந்தியா!

வெப்பத்தின் பிடியில் தென்னிந்தியா!

வெப்பத்தின் பிடியில் தென்னிந்தியா!


PUBLISHED ON : மார் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

நம் இந்தியா என்பது ஒரே தேசம்தான். ஆனால், வட இந்தியா மற்றும் தென்னிந்தியா ஆகிய இரு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை வேறுவேறு. உதாரணத்திற்கு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களின் தொடக்க காலங்களில் வடஇந்தியாவில் குளிரும், தென்னிந்தியாவில் வெப்பமும் நிலவியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக மார்ச் ஆறாம் தேதி, தென் பகுதிகளில் வழக்கத்தைவிட மிக அதிகமான வெப்பநிலை நிலவியதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சமவெளிப் பகுதிகளின் வெப்பநிலை, 2 நாட்களுக்கு அல்லது அதற்குமேல் குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிலும், மலைப்பாங்கான பகுதிகளின் வெப்பநிலை தொடர்ந்து 2 நாட்கள் அல்லது அதற்குமேல் குறைந்தபட்சம் 30 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட காலநிலையை, வெப்பமான காலநிலையாக கருத்தில் கொள்வர்.

அதன்படி, இந்திய வானிலை மையத்தின் தர்மபுரி வானிலை ஆய்வு மையம், மார்ச் ஆறாம் தேதி 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இதுவரையான ஆண்டுகளில் மார்ச் மாதம் பதிவான மிக அதிகமான வெப்பநிலை இதுதான். ஏனென்றால், இதற்குமுன் 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே பதிவானது.

அதுமட்டுமல்ல, வெயில் நகரமான வேலூரில் இந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இத்தனைக்கும் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் வேலூரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையே 38.4 டிகிரி செல்சியஸ்தான்.

அதேபோல திருத்தணியும் வெயிலுக்குத் தப்பவில்லை. இந்த மாதம் அங்கே அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. சென்னை, வேலூர், திருத்தணி தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளான திருச்சி, சேலம், கரூர் போன்ற நகரங்களில் இம்மாத வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, ராயலசீமா பகுதியில் உள்ள திருப்பதி (40.4 டிகிரி செல்சியஸ்) மற்றும் கடப்பாவில் (40 டிகிரி செல்சியஸ்) என, வானிலை ஆய்வு மையங்களில் பதிவாகி உள்ளது. இவை தவிர, ஆந்திரத்தில் உள்ள மேலும் ஐந்து வானிலை ஆய்வு மையங்களில் இந்த மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், வெப்பத்தின் தாக்கம் காரணமாகவும், அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நிலநடுக்கம் போன்ற பேரிடர் உயிரிழப்புகளுக்கு அடுத்து, கடும் வெப்பம் காரணமாக பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

- சு.கவிதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us