PUBLISHED ON : நவ 21, 2016

நேற்று வரைக்கும் அப்பாவின் பையில் ஆசையோடு பார்த்த பணம், அம்மாவிடம் அடம் பிடித்துக் கேட்ட பணம், இப்போது செல்லாது என்று சொல்லும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆனால் பணத்திற்கு அதன் மதிப்பு எப்படி வந்தது என்று தெரிந்தால் இந்த ஆச்சர்யம் காணாமல் போய்விடும். பணத்தை சம்பளமும், கையாளவும் அதன் கதையை தெரிந்து கொள்வது அவசியம்.
மனித இனம் நாகரிகமடைந்த ஆரம்பக் காலகட்டத்தில் உலகெங்கும் பண்டமாற்றுமுறையே வணிகத்தில் பின்பற்றப்பட்டது. பண்டமாற்று முறையில் இருந்த பல்வேறு சிக்கல்களால் அடுத்து உலோகக் கட்டிகள், குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் வர்த்தகத்தில் பயன்படுத்தப்பட்டன. அரசுகள் தோன்றிய பிறகு, கட்டிகளுக்கு பதிலாக நாணயங்கள் வந்தன.
தங்கம், வெள்ளியை கட்டிகளாகவே பயன்படுத்தும் மக்களும் உலகெங்கும் இருந்தனர். அவர்களால் தங்கள் தங்கக் கட்டிகளை எப்போதும் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவற்றை பாதுகாப்பு மிகுந்த வங்கிகளில் கொடுத்து பாதுகாத்தனர். அந்த வங்கிகள் அவர்களுக்கு, 'இவ்வளவு தங்கம் எங்களிடம் கொடுத்து வைக்கப்பட்டு உள்ளது' என்று ரசீதுகளில் எழுதித் தந்தன. அந்த ரசீதை மீண்டும் யார் கொண்டு வந்து தந்தாலும், அதற்கு தங்கம் தர வேண்டியது வங்கிகளின் கடமை.
இப்படியாக வங்கியின் ரசீது பெற்ற ஒருவர், இன்னொருவரிடம் வர்த்தகம் செய்யும் போது வங்கியில் உள்ள தங்கத்தை எடுத்துத் தராமல், அந்த ரசீதை மட்டும் கொடுப்பதே போதுமானதாக இருந்தது. ஏனெனில் ரசீதை வாங்கியவர் தனக்குத் தேவை ஏற்பட்டால் அதனை வங்கியில் கொடுத்து தங்கமாக மாற்றலாம். அல்லது அவர் அந்த ரசீதை இன்னொருவருக்கு மாற்றலாம். இப்படியாக வங்கிகளால் வழங்கப்பட்ட ரசீதுகள்தான் உலகின் ஆரம்பகாலப் பணத்தாள்கள்.
நெடும் தொலைவுகளுக்கு வர்த்தகம் செய்யச் செல்பவர்கள் தங்கக் கட்டிகளை தங்களுடன் கொண்டு செல்வதை விடவும் ரசீதுகளைக் கொண்டு செல்வது எளிதாக இருந்ததனால் அதனைப் பெரிதும் விரும்பினர். ஆரம்பகால ரசீதுகள் தோலினால் செய்யப்பட்டன.
சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், கி.பி.10ஆம் நூற்றாண்டு வாக்கில் தோலுக்கு பதில் காகிதத்தை பயன்படுத்திய சீன அரசர்கள், மக்களிடம் இருந்த தங்கம் வெள்ளியை வாங்கிக் கொண்டு மாற்றாக பணத்தாள்களை அரசு முத்திரையோடு வெளியிட்டனர். மக்களுக்கு தங்கம் தேவைப்பட்டால் பணத்தாளைக் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். வர்த்தகத்தில் தங்கத்திற்குப் பிறகு தாள்களைப் பயன்படுத்த இது துவக்கமானது. சீனா சென்ற ஐரோப்பிய பயணி மார்க்கோபோலோவின் குறிப்புகளால் இந்த முறை பின்னர் உலகமெங்கும் பின்பற்றப்பட்டது. ஆனால் பெரும்பாலான நாடுகளில், அரசுக்கு பதிலாக அந்த நாட்டின் மைய வங்கிகள்தான் பணத்தாள்களை வெளியிடுகின்றன.
பண்டைய முறையில் வங்கிகள் வணிகர்களுக்குக் கொடுத்த ரசீதில் அவர்கள் கொடுத்த உறுதி மொழியின் தொடர்ச்சியாகவே நமது ரூபாய் நோட்டுகளில் 'I promise to pay the bearer' என்ற வாசகம் காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த உறுதி மொழியே இந்தியப் பணத்தை மதிப்புள்ளதாக மாற்றுகின்றது. ரிசர்வ் வங்கியோ அரசோ ஒரு குறிப்பிட்ட பணத்தாளை செல்லாததாக அறிவிக்கும் போது இந்த உறுதிமொழியும் செல்லாததாகிவிடுகிறது. இப்படியாக வங்கியின் உறுதிமொழியால் ஒரு காகிதம் பணத்தாள் ஆகிறது; ஒரு பணத்தாள் காகிதமாகிறது.
-இரா.மன்னன்

