PUBLISHED ON : நவ 20, 2023

தமிழில் ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால், எண்ணற்ற செய்திகள் மழைபோல் பொழிகின்றன. பெருவரலாறும் மக்கள் பயன்பாடும் மிகுந்த மொழிக்குத் தான் அத்தகைய ஆற்றல் உண்டு. அந்த வகையில் இன்று நாம் ஒரு சொல்லை எடுத்துக்கொள்வோம். 'கொத்து' என்பது அந்தச் சொல்.
'கொத்து' என்பது திரளாய் அமையப்பெற்றது. நிலக்கடலைச் செடி கொத்துக் கொத்தாய் காய்க்கும். தானும் தன்னையடுத்த அனைத்தும் சேர்ந்த திரளே 'கொத்து.' கொத்தாகக் காய்க்கும் காயை, 'கொத்தவரங்காய்' என்கிறோம். காய்க்கொத்துகள் பலவகை. திறவுகோலாகிய சாவிகளைச் சேர்த்து வைத்திருந்தாலும் அது 'சாவிக்கொத்து.'
கொத்து என்ற சொல் 'கொற்று' என்ற வினைச்சொல்லின் பேச்சு திரிபு. உளியால் கற்களைக் கொற்றுவது தான் சிலை செய்யும் பணி. அவ்வாறு கொற்றுபவர் 'கொற்றன்' எனப்பட்டார். 'கொற்றன்' என்பது பேச்சு வழக்கில் 'கொத்தன்.'
முற்காலத்தில் கற்களை உரிய வடிவத்தில் கொற்றி எடுத்துத்தான் கட்டடங்கள் கட்டுவார்கள். கட்டடத்திற்குக் கற்களைக் கொற்றுவதும் சிலைகளுக்குக் கொற்றுவதுமே கட்டுமானப் பணிகள். அதனால் கட்டடம் கட்டுபவர் 'கொற்றன்' எனப்பட்டார். அதன் பேச்சு வழக்கே 'கொத்தன், கொத்தனார்' என்பது.
'கொற்றன்மங்கலம்' என்னும் ஊர்ப்பெயரே 'கொற்றமங்கலம்' ஆகிப்பின் 'கொத்தமங்கலம்' ஆனது. 'கொத்தன்' என்று தொடங்கும் எண்ணற்ற ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் உள்ளன. 'கொத்தவாசல்' என்றால் 'கொற்றன்வாயில்.'
கோட்டைக் கொத்தளம் என்பது சேர்த்துச் சொல்லப்படும் மரபுத்தொடர். கோட்டை என்பது காவல் மிக்க பெருமதில்களோடு கட்டப்பட்ட வலிமையான அமைப்பு. கோட்டைச் சுவர்கள் ஒரே நேர்க்கோட்டில் கட்டப்படுவதில்லை. ஆங்காங்கே முன்னே புடைப்புகளும் துருத்தல்களும் தோன்ற முன்னால் தள்ளிக் கட்டுவார்கள். அவ்வாறு கட்டுவதால் கோட்டைச் சுவர்களை நெருங்குவோரையும் தாக்கமுடியும். அத்தகைய அமைப்பே 'கொத்தளம்' எனப்படுவது.
கோட்டை வாயில், கொத்தளவாயில் ஆகியனவற்றிலிருந்தே 'கொத்தவால்' என்ற சொல் தோன்றுகிறது. அதனால் காவற்பணியர்கள் இருக்குமிடம் 'கொத்தவால்சாவடி.'
கொற்றும் பணியை நிலத்தின்மீது செய்வது வேளாண்மையில் இன்றியமையாத செயல். அதுவே 'கொத்துதல்' என்றாயிற்று. அலகால் செய்தால் அது பறவையின் கொத்தல். எ.டு: மரங்கொத்தி. களையெடுக்கப் பயன்படும் கருவி 'களைக்கொத்து.' உழ முடியாமல் கொத்திப் பயிரிடும் காடு 'கொத்துக்காடு.'
'கொத்து' என்ற ஒரு சொல்லின் வழியாக நாம் பயன்படுத்தும் பலப்பல சொற்களின் வேர்ப்பொருளை உணர முடிகிறது.
-மகுடேசுவரன்