PUBLISHED ON : பிப் 05, 2018

தேங்காய் என்ற சொல் எப்படி வந்திருக்கும்? காய் என்பது விளங்குகிறது. பிஞ்சுக்கும் பழத்திற்கும் இடைப்பட்ட வளர்நிலை. எல்லாக் காய்களும் பழுப்பதில்லை. பழுக்காத காய்கள் முற்றுவதும் முதிர்வதும் உண்டு. தென்னை மரத்தின் விளைபலன்களே தேங்காய்கள் எனப்படுகின்றன. தென்னை மரத்திலிருந்து விளைவதால், அதைத் தென்னங்காய் என்று சொல்வதில்லை. தேங்காய் என்றே சொல்கிறோம். தேங்காய் என்னும் அச்சொல் எவ்வாறு வந்தது?
தென்னை மரத்திற்குத் “தெங்கு” என்று ஒரு பெயருண்டு. தெங்கு, தெங்கம் ஆகியவை தென்னை மரத்தைக் குறிக்கிற சொற்கள். இந்தத் தெங்கு என்பதுதான், தேங்காய் என்ற சொல் தோன்றுவதற்கு வேராக விளங்குவது. தேங்காய் என்ற சொல் எப்படிப் புணர்ந்து பெறப்பட்டது என்பதை விளக்குவதற்கு நன்னூலில் ஒரு வாய்பாடு இருக்கிறது.
''தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின்” என்னும் வரிதான் அது.
(நன்னூல் 187)
காய் வரின் = தெங்கு என்ற சொல்லை அடுத்து காய் என்ற சொல் வந்தால்
ஈற்று உயிர்மெய் கெடும் = ஈற்று என்றால் கடைசி. கடைசியில் உள்ள உயிர்மெய் எழுத்து கெட்டுப்போகும். தெங்கு என்ற சொல்லில் கடைசியாக உள்ள உயிர்மெய் 'கு'. அது கெட்டுப்போகும். அழிந்துவிடும். அதன்பின் தெங்கு => தெங் என்று நிற்கும்.
தெங்கு நீண்டு = தெங்கு என்பதில் ஈற்று உயிர்மெய் கெட்டு மீதமிருக்கும் தெங் என்பது நீண்டுவிடும். தெங் என்பதன் முதலெழுத்து தெ என்னும் குறில் நீண்டு தேங் என்று நெடிலாகும்.
தேங் என்பதுடன் காய் சேர்ந்து தேங்காய் என்று ஆனது.
தெங்கு + காய் => தெங்(கு) + காய் => தேங் + காய் => தேங்காய்
தேங்காய் பழுப்பதில்லை. ஆனால், முற்றி முதிரும் தன்மையுடையது. அவ்வாறு முற்றிய தேங்காயை நெற்று என்பார்கள். அதனைத் “தெங்கம்பழம்” என்று கூறுவதுமுண்டு. 'நாய் உருட்டிய தெங்கம்பழம்போல” என்ற பழமொழியும் உண்டு.
- மகுடேசுவரன்