PUBLISHED ON : ஜூலை 24, 2023

'பள்ளி', 'கல்லூரி' ஆகிய இரண்டு சொற்களும் நம் வாழ்க்கையில் கலந்துவிட்டவை. வீடு எப்படி நம் வாழ்வின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ, அவ்வாறானவை பள்ளியும் கல்லூரியும். பள்ளியிலும் கல்லூரியிலும் ஒருவரது முற்பாதி வாழ்க்கை அமைகிறது.
'பள்ளி' என்ற சொல் எப்படி வந்தது? சமண முனிவர்கள் வாழ்கிற இடம் 'பள்ளி' எனப்பட்டது. அவர்கள் இயற்கையாக அமைந்த மலைக்குவடுகளில் (குகை) கற்படுக்கைகளில் உறங்குவார்கள். முற்காலத்தில் அவர்கள் வாழுமிடத்திற்குச் சென்று கற்றுக்கொள்வது வழக்கம். அதனால், 'பள்ளி' என்பது, கற்குமிடத்திற்கும் பெயராக ஆயிற்று. இன்று 'பள்ளி' என்பது கல்விக்கூடம்.
இத்தகைய துறவிகள் வாழ்ந்த இடங்கள் யாவும், 'பள்ளி' என்று முடியும் ஊர்ப்பெயர்கள் ஆயின. 'சிரா' என்ற சமண முனிவர் வாழ்ந்த இடம் 'சிராப்பள்ளி.' அதோடு 'திரு' என்ற சிறப்பு முன்னொட்டைச் சேர்த்ததுதான், 'திருச்சிராப்பள்ளி.'
கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலும் 'பள்ளி' என்று முடியும் ஊர்கள் பல உள்ளன. 'மதனபள்ளி', 'குமுதபள்ளி', 'மூகண்டபள்ளி', 'போச்சம்பள்ளி', 'வேப்பனப்பள்ளி' என்று அவை இருக்கின்றன. கன்னடத்தில் 'பள்ளி' என்ற சொல், 'ஹள்ளி' என்றாகும். 'மாரண்டஹள்ளி,' 'கொல்லஹள்ளி' என்று பலப்பல ஊர்ப் பெயர்களைக் காணலாம். கோவில்கள் உள்ள ஊர்களும் 'பள்ளி' என்றே பெயர் பெற்றன.
இடப்பொருளில் அமைந்த சிறப்புப் பெயர்தான் 'பள்ளி.' 'பண்ணுப் பெயர்த்தன்ன காவும் பள்ளியும்' என்று மலைபடுகடாம் கூறுவதால், அது சிற்றூரையும் குறிக்கிறது.
முனிவர்கள் உறங்குமிடம் 'பள்ளி' என்பதால், 'பள்ளிகொள்ளுதல்' என்பது உறங்குவதற்குப் பெயராயிற்று. 'பள்ளிகொண்டான்' என்றால் உறங்கினான். 'பாற்கடலில் பள்ளிகொண்டான்' என்றால், பாற்கடலில் தூங்கினான் என்று பொருள்.
'கல்லூரி' என்ற சொல் எப்படி வந்திருக்கும்? 'கல்' என்பது தான் வேர்ச்சொல். 'கல்' என்றால், கற்பாயாக என்று ஏவுவது. அதிலிருந்தே 'கல்வி' என்ற சொல் வருகிறது. 'கலத்தல் காலம் கல்லூரிநற் கொட்டில்' என்கிறது சீவகசிந்தாமணி.
கல் மீது ஊர்ந்து கற்றார்கள். முற்காலத்தில் தேவாரப் பாடல்களைக் கல்பதித்த சுற்றுத் தாழ்வாரங்களில் அமர்ந்து ஓதினார்கள். அந்தக் காலத்துக் கல்விமுறையே திண்ணைக் கல்விதானே?
அதனால், அச்செயல்பாடு நிகழுமிடம், 'கல்லூரி' ஆயிற்று. தற்காலத்தில் அது உயர்கல்வி கற்குமிடத்திற்குப் பெயராகி வருகிறது.
- மகுடேசுவரன்
