தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/எப்படி இருக்கு புதிய பாடத்திட்டம்

எப்படி இருக்கு புதிய பாடத்திட்டம்

எப்படி இருக்கு புதிய பாடத்திட்டம்


PUBLISHED ON : நவ 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எண்ணற்ற வல்லுநர் சந்திப்புகள், ஆலோசனைகளுக்குப் பின்னர், தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையான புதிய பாடத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துகளையும் கோரியுள்ளது. இத்தகைய மாற்றங்கள் வேண்டும் என்று கோரிவந்த ஆசிரியர்கள், புதிய பாடத்திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

'பக்கா' பாடத்திட்டம்

“ஹையர் செகண்டரி இயற்பியல் பாடத்திட்டம் அற்புதமாக இருக்கிறது. பாடங்களை 'பக்கா'வாக 'ரிஅரேஞ்ச்' செய்திருக்கிறார்கள். பிளஸ் 1இல் அறிமுகப் படுத்தப்படும் ஒரு பாடம், பின்னர் பிளஸ் 2விலும் தொடரும். பல மாணவர்களால், அதைப் புரிந்துகொள்ள முடியாது.

புதிய பாடத்திட்டத்தில், ஒரு பாடம் அறிமுகப்படுத்தப்பட்டால், அதை முழுமையாக விளக்கிவிடுகிறார்கள். தொடர்ச்சி வைப்பதில்லை. இது நல்ல உத்தி. அதேபோல், நூறு பக்கங்கள் வரை போகக்கூடிய ஒருசில பெரிய பாடங்களை, மூன்று, நான்கு துணைத் தலைப்புகளில் தனித்தனிப் பாடங்களாகப் பிரித்து வழங்கியுள்ளார்கள். இதனால், மாணவர்கள் துவண்டு போகமாட்டார்கள். நேனோ தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், கம்யூனிகேஷன், கணினி தொழில்நுட்பம் போன்ற புதிய வளர்ந்துவரும் துறைகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சங்கள்.

ஒரே ஒரு விஷயத்தைத் தான் கவனத்தில் கொள்ளவேண்டும். பத்தாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கப்படும் அறிவியல் பாடத்தின் தரம் மேம்படுத்தப்பட்டால்தான், பிளஸ் 1, பிளஸ் 2வில் மாண்வர்களால் இத்தகைய முன்னேறிய பாடங்களைப் புரிந்துகொள்ள முடியும். அங்கே பேஸ்மென்ட் வலுவாகப் போடப்பட வேண்டும்.”

கே. ஜான், தலைமையாசிரியர், திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர், சென்னை.

மரபு தொடர்ச்சி பிரமாதம்!

“தமிழ்ப் பாடத்திட்டம் இதுநாள்வரை இருந்த வழக்கமான முறைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக, செய்யுள் பகுதி என்றால், வாழ்த்துப் பகுதி, சங்க இலக்கியம், தொடர்நிலைச் செய்யுள், வழிபாட்டுப் பாடல்கள் என்று தான் இருக்கும். இப்போதோ, விதவிதமான பொருண்மைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றியுள்ளார்கள். இயற்கை, அழகியல், கலை, தமிழர் தத்துவ மரபு, நாட்டு வரலாறு, பண்பாட்டு வரலாறு என்று எண்ணற்ற சப்ஜெக்டுகளில் பாடங்கள் உள்ளன. துணைப்பாட நூல் என்றால், பொதுவாக சிறுகதைகள் மட்டுமே இருக்கும். புதிய பாடத்திட்டத்திலோ, பேட்டி, கடிதம் இலக்கியம், நாவல் சுருக்கம், நாடக வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுவது மரபுத் தொடர்ச்சிதான். ஆறாம் வகுப்பில் நிலா பற்றி ஒரு கவிதை இடம்பெற்றால், ஏழாம் வகுப்பில் அதே நிலா பற்றிய புதுக்கவிதை, எட்டாம் வகுப்பில் ஹைக்கூவில் நிலா என்ற முன்னேற்றம் சுவாரசியமாக இருக்கிறது. இதேபோல், துறைமுகங்கள், ஊர்கள் பற்றிப் படிக்கும்போதும் இதே தொடர்ச்சி இருக்கிறது. ஒரு வகுப்பில் மாமல்லபுரம் என்றால், அடுத்தடுத்த வகுப்புகளில் புதுச்சேரி, மதுரை, சென்னை என்று ஊர்களின் வரலாறு தொடர்கிறது. பாடப் புத்தகங்கள் தயாராகி வந்த பின்னர், மாணவர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்படும் என்பதைப் பொறுத்துத்தான், இந்தப் புதிய முயற்சியின் பலன் தெரியவரும்.”

ப.சரவணன், முதுநிலைத் தமிழாசிரியர், சென்னை மேல்நிலைப் பள்ளி, அயனாவரம்.

சுயவேலைவாய்ப்புக்கு உதவி!

“தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 உயிரியல் பகுதி, சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய பிளஸ்1 பாடப்பகுதியில் தற்போதுள்ள பிளஸ் 2 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பாடத்திட்டத்தில் சூழ்நிலையியல், தாவர-விலங்குகளின் பொருளாதார பயன்பாடு போன்ற பாடங்கள் சிறப்பாக உள்ளன. மரபியல், மூலக்கூறு அறிவியல் பகுதிகளிலும் சில மாற்றங்கள் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. மாணவர்களுக்கு சுய வேலைவாய்ப்பைத் தரும் பாடங்களான காளான் வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், போன்ற பயனுள்ள பாடங்கள் வரவேற்கத்தக்கது. இவற்றை நடைமுறைப்படுத்தும் வகையிலும், மாணவர்கள் செய்முறைப் பயிற்சியில் ஈடுபடும் வகையிலும் அமைக்க வேண்டும். உயிரியல் கற்கும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கள ஆய்விற்காக அருகில் உள்ள காடுகள், மலைகள், தாவர-விலங்கினங்களின் வாழிடங்களுக்கு அழைத்துச் செல்வது அவசியம்.”

எம்.வி. பாலசுப்ரமணியன், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

லேட்டஸ்ட் முன்னேற்றங்கள்

“இடைநிலைப் பள்ளி அளவில், முந்தைய பாடத்திட்டத்தில் இருந்த அறிவியல் பாடங்களோடு ஒப்பிடும்போது, இது பல மடங்கு உயர்வானது. லேட்டஸ்ட் முன்னேற்றங்களை எல்லாம் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஒரே ஒரு விஷயம் மட்டும் முக்கியம். இந்தப் பாடத்திட்டத்தை ஒட்டி, புதிய பாணியில், பாடங்கள் எழுதப்பட வேண்டும். அவற்றைச் சரியாகத் தரப்படுத்த வேண்டும். பின்னர், அந்தப் பாடங்களை, வகுப்பறையில் முழுமையாகவும் நிறைவாகவும் சொல்லித் தரவேண்டும். கருத்திலிருந்து களத்தில் அது நடைமுறைக்கு வருவதில் பல இடங்களில் பல்வேறுவிதமான இழப்புகள், குறைபாடுகள் ஏற்படலாம். இதனை 'டிரான்ஸ்மிஷன் லாஸ்' என்று சொல்வார்கள். அதைக் குறைத்துவிட்டால், நிச்சயம் மாணவர்கள் பலமடங்கு பயன் அடைவது உறுதி.”

என். மாதவன், தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாதிரி

பின்லாந்தைவிட ஒருபடி மேலே!

“ஆங்கிலப் பாடத்திட்டத்தை வடிவமைக்கும்போது, மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம் பாடத்திட்டங்களோடு ஒப்பிட்டதோடு மட்டுமல்லாமல், பின்லாந்து நாட்டின் பாடத்திட்டத்தோடும் ஒப்பிட்டோம். பின்லாந்து தான் மிகப் பணக்கார நாடு. அங்கேயுள்ள அபரிமிதமான வசதிகளை இங்கே உடனே வழங்க முடியாது என்றாலும், அவர்களுடைய பாடத்திட்டத்தைவிட ஒரு படி உயர்வாகவே நமது ஆங்கிலப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், இங்கிலாந்தில் கற்பிக்கப்படும் ஆங்கில இலக்கணத்தைவிடவும் நமது இலக்கணப் பகுதி நிச்சயம் ஒரு படி மேலே அமைந்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 புதிய ஆங்கிலப் பாடத்திட்டத்தில் படிப்பவர்களால் வருங்காலத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் மிகச்சுலபமாக, அச்சமின்றி பங்குபெற்று, நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும்.”

ம. பெத்தவண்ண அரசு, முதுநிலை ஆங்கில ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி,

அய்யலூர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us