தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நெல் வகைகள்

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நெல் வகைகள்

தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் நெல் வகைகள்


PUBLISHED ON : நவ 27, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழந்தமிழர்கள் பின்பற்றிய வேளாண்மை நுட்பமும், அறிவுத் திறனும் சிறப்பானதாக இன்றளவும் பேசப்படுகிறது. பண்டைக் காலத்தில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான நெல் வகைகள் இருந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தமிழில் இலக்கண நூலான தொல்காப்பியம் பயிர் வகைகளில் நெல்லையும், எண்ணெய் வித்துகளில் எள்ளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. தமிழர்கள் நிலங்களை ஐந்தாகப் பிரித்து, ஐவகை நிலங்களுக்கு ஏற்ப, அங்கு வேளாண்மை உள்ளிட்ட தொழில்களைச் செய்தனர். நிலத்தின் தன்மைக்கேற்ப நெல் பயிரிடப்பட்டது. ஆற்றுப் பாசனத்தில் விளையும் நெல்லை 'சாளி' என்று அழைத்தனர். ஒரு வேலி நிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளைந்ததாக பதிற்றுப்பத்து கூறுகிறது. இந்த நெல்லின் பெயரில் 'சாளியூர்' என்னும் ஊர் இருந்ததை மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.

மருத நிலத்தில் விளைந்த நெல் 'முடந்தை.' இதன் தாள், மூங்கில் போல நீண்டும் பருத்தும் இருக்கும் என்கிறது பதிற்றுப்பத்து. குளத்துப் பாசனத்தில் விளைகிற 'வெண்ணெல்' பற்றி அகம், புறம், குறுந்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. மேட்டு நிலத்தில் விளைகிற நெல், 'தோகை நெல்' என்று அழைக்கப்பட்டது. இந்த நெல்லின் கதிர்கள் குட்டையாக இருக்கும். இதுபற்றி மதுரைக் காஞ்சியும், மலைபடுகடாம் பாடல்களும் குறிப்பிடுகின்றன.

குறிஞ்சி நிலத்தில் விளைகிற நெல் வகைகளில் ஒன்று 'குளநெல்'. சுனை நீரைப் பயன்படுத்தி இந்த நெல்லை பயிர் செய்ததாக நற்றிணை குறிப்பிடுகிறது. குறிஞ்சி நிலத்தில் விளையும் நெல், 'ஐவன நெல்,' 'மலை நெல்' என்றும் அழைக்கப்பட்டது.

'சித்திரை வண்ணன்', 'சித்திரைக் காளி', 'கார்த்திகை சம்பா' என்று மாதங்களின் பெயர்களையும் நெல்லுக்கு வைத்தனர். 'ராமபாணம்', 'சீதாபோகம்', 'அர்ச்சுனன்' என்று இதிகாச காப்பிய மாந்தர்களின் பெயர்களாலும், நெற் பயிர்களுக்குப் பெயரிடப்பட்டன. கடவுள் பெயர்களான 'தில்லைக் கூத்தன்', 'வீதிவிடங்கன்' போன்ற பெயர்களையும் வைத்து மகிழ்ந்தனர்.

நாடு, ஊர், வடிவம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும், நெல்லுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

'பாண்டி சம்பா', 'கொங்காரு', 'திருநெல்வேலி நாதன்', 'கருங்குருவை', 'கருஞ்சூரை', 'கருப்பன்', 'குங்குமச் சம்பா', 'பாற்கடுக்கன்', 'பச்சை பெருமான்', 'செஞ்சம்பா', 'செந்தாழை', 'செம்மிளக்கி', 'நெடுமூக்கன்', 'மூக்கன் சம்பா', 'வாலான்', 'கட்டை வாலான்', 'காடைக் கழுத்தன்', 'ஆனைக்கொம்பு சம்பா', 'கோதுமை சம்பா' போன்ற பெயர்களும், நெல்லுக்கு அந்தக் காலத்தில் பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.

'கற்பூர மாலை', 'புனுகு சம்பா', 'மாணிக்க சம்பா', 'மாணிக்க மாலை', 'முத்துச் சம்பா', 'முத்து வெள்ளை', 'பொற்சாளி', 'பொற்பாலை', 'பொன்நாயகன்' போன்ற பெயர்கள் இருந்தன.

ஓரிரு நெல் வகைகள் தவிர, மீதி எல்லாம் கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்டன என்பதுதான் சோகம்.

பாடல் இடம்பெற்ற இலக்கியம்:

'அரிந்துகால் குவித்த செந்நெல்'

அகநானூறு 116ம் பாடல்

'பழஞ்செந்நெல்லின் முகவைக் கொள்ளாள்'

அகம்- 126

'பால் பெய்செந்நெற் பாசவல் சேற்றோடு'

அகம்- 237

'வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்'

அகம்- 40

'வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை'

அகம்- 96

'வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்'

அகம்- 201

-மணி.மாறன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us