PUBLISHED ON : நவ 27, 2017

கட்டுரை எழுதினால் எண்களைக் கட்டாயம் எழுதும்படி ஆகும். சுருக்கம் கருதி, எண்களை எழுத்தால் எழுதாமல் எண்ணாலேயே எழுதுவோம். அதில் தவறில்லைதான். பத்து என்று எழுதாமல் '10' என்று எழுதுவோம். தொடக்கப் பள்ளி வகுப்புகளில் எண்களை எழுத்தால் எழுதுவது, எழுத்துகளை எண்ணால் எழுதுவது என்று பயின்றிருப்போம்.
ஒரு கட்டுரையில் வெறும் எண்களை மட்டும் எழுதும் நிலைமை இருக்காது. அந்த எண்ணோடு ஒரு வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, இரண்டாயிரத்துப் பதினாறில் என்று அந்த எண்ணைக் குறிப்பிட வேண்டும். அதற்கு என்ன செய்கிறோம்? 2016-ல் என்று எழுதுகிறோம்.
இரண்டாயிரத்துப் பதினாறு என்று எண்ணால் எழுதி, ஓர் இடைபடுகுறி (ஐஃபன்) போட்டு, 'ல்' போட்டு முடிக்கிறோம். 2016-ல் என்றால் என்ன?
2016-ல் = இரண்டாயிரத்துப் பதினாறில் = இரண்டாயிரத்துப் பதினாறு இல்
இரண்டாயிரத்துப் பதினாறு என்பதை எண்ணுருவில் எழுதப்பட்ட பிறகு மீதமிருப்பது இல் என்னும் வேற்றுமை உருபு.
இரண்டாயிரத்துப் பதினாறில் = இரண்டாயிரத்துப் பதினாறு இல் = 2016 இல் இப்படித்தான் எழுதவேண்டும்.
பொருத்தமே இல்லாமல் 2016-ல் என்று எழுதிக்கொண்டிருக்கிறோம்.
'இல்' என்னும் வேற்றுமை உருபை 'ல்' என்று சீர்குலைக்கிறோம்.
இப்படித்தான் பின்னொட்டுகளாக வரும் எல்லா உருபுகளையும் பிற சொற்களையும் சிதைக்கிறோம்.
இரண்டாம் வகுப்பு என்றால் இரண்டு ஆம் = 2ஆம் என்றுதான் எழுத வேண்டும். '2-ம்' என்று எழுதுகிறோம். இங்கே 'ஆம்' என்னும் எண்ணுப் புணர்ச்சிக்குரிய விகுதி 'ம்' என்று சுருங்கிவிட்டது. இப்போது என்ன பொருள் தரும்?
2-ம் = இரண்டு-ம் = இரண்டும்.
இரண்டும் வகுப்பு என்பதைத்தானே அது உணர்த்துகிறது?
'இரண்டாம்' என்பது 'இரண்டும்' என்று மாறிவிட்டது. '2ஆம் வகுப்பு' என்று எழுதினால் இரண்டாம் வகுப்பு என்று முழுமையாகிறது.
ஓர் எண்ணுப் பெயரை எழுத்தால் எழுதும்போது, என்னென்ன வேற்றுமை உருபுகள், விகுதிகள் பின்னால் ஒட்டுமோ அவற்றை அவ்வாறே முறையாகக் குறிப்பிட்டு எழுதவேண்டும். ஐ, ஆல், கு, இன், கள் ஆகிய விகுதிகளே பெரும்பாலும் வரும். அவற்றை அப்படியே குறிப்பிடவேண்டும்.
மகுடேசுவரன்
