PUBLISHED ON : நவ 27, 2017

நவம்பர் 28, 1820 - ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ் பிறந்த நாள்
ஜெர்மன் நாட்டின் அரசியல் தத்துவஞானி, பத்திரிகையாளர். கம்யூனிச சித்தாந்தத்தை கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை எழுதினார். முதலாளித்துவ பொருளாதாரம் பற்றி, பல கருத்துகள் கூறியிருக்கிறார்.
நவம்பர் 30, 1858 - ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள்
1895ல் மார்கோனிக்கு முன்னரே வானொலி அலைகளின் மூலம் கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய ஆராய்ச்சியாளர். இவருக்கு 'சர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது பிரிட்டிஷ் அரசு.
டிசம்பர் 2, 2001 - உலக கணினி எழுத்தறிவு நாள்
மனிதனின் அன்றாட வாழ்வில் கணினியைப் புறக்கணித்துவிட முடியாது. அதற்கேற்ப அனைத்து வேலைகளிலும் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. ஆக அனைவருக்கும் கணினி கல்வி அவசியம் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
டிசம்பர் 2, 1984 - தேசிய மாசு கட்டுப்பாடு நாள்
போபாலில் மீதைல் சையனேட் என்ற நச்சு வாயுக் கசிவால் பலர் இறந்தனர். இது உலக அளவில் தொழிற்சாலை மாசால் நிகழ்ந்த மாபெரும் பேரிடர்களில் ஒன்றாகும். இதில் மரணமடைந்தவர்களின் நினைவாகவும், மாசு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 3, 1884 - ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அரசியல் சாசனம் வகுக்கும் பணிக்குழுவுக்குத் தலைமை ஏற்றார். நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக 1950 முதல் 1962 வரை இருந்தார். இந்திய குடியரசுத் தலைவர் பதவியை 2வது முறையாக வகித்தது இவர் மட்டுமே! இந்திய அரசு இவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவித்தது.
டிசம்பர் 3, 1795 - ரோலண்ட் ஹில் பிறந்த நாள்
நவீன அஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தி, அஞ்சல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். நாடு முழுவதும் 'யுனிஃபார்ம் பென்னி போஸ்ட்' என்கிற திட்டத்தை, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்படி, 1839ம் ஆண்டு முதல், பணம் கொடுத்து தபால் வாங்கி அதில் ஸ்டாம்ப் ஒட்டும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது.
