PUBLISHED ON : நவ 21, 2016

திருவிழா நாட்களில், தேர் வீதி உலா வருவதை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். அந்தக் காலத்தில் ஆண் பிள்ளைகள் சிறுதேர் வைத்து விளையாடினார்கள். அரசர்கள் குதிரை பூட்டிய தேரில் பயணம் செய்தார்கள். பாரி வள்ளல் முல்லைக்கு தேர் கொடுத்தார் என்ற கதையும் நமக்குத் தெரியும். இப்படி தேருக்கு நிறைய சிறப்புகள் இருப்பதைப் போல, நிறைய பெயர்களும் இருக்கின்றன.
அரி, இயந்திரம், இரதம், எந்திரம், கவரி, குயவு, கூவிரி, கொடிஞ்சி, சயந்தனம், திகிரி, விமானம், வையம் போன்ற பெயர்கள் தேருக்கு உண்டு.
தேரின் நடுபாகம் தட்டு, நாப்பண். தேரின் மரச்சக்கரத்திற்கு கிடுகு என்று பெயர்.
தேரில் இருக்கைக்கு அருகே அமைந்திருக்கும் கைப்பிடிக்கு கூவிரம், கொடிஞ்சி என்று பெயர்.
தேரில் பறக்கும் கொடி இடக்கியம் என்று அழைக்கப்பட்டது. சத்தி, சருத்தி, சிதவல், சீதாரம் என்றும் தேரின் கொடிக்கு பெயர்கள் உண்டு.
தேர்ப்பாகனுக்கு வலவன், சூதன், சாரதி என்ற பெயர்கள் உண்டு. மகாபாரதக் கதையில் பார்த்தன் எனப்படும் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டியாக பணியாற்றியதால், கண்ணனுக்கு பார்த்தசாரதி என்று பெயர்.

