
நண்பரைச் சந்தித்தேன். அவரோடு தேநீர் அருந்தினேன்.தேநீருக்கு ஆங்கிலத்தில் Tea.
Tea Leaf என ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒருவகையான இலையிலிருந்துதான் Tea எனும் பானம் தயாராகிறது. இந்த இலையைத் தமிழில் 'தேயிலை', அதாவது, 'தே இலை' என்று எழுதுவார்கள்.
'தே' எனும் அந்த இலையைக்கொண்டு தயாரிக்கப்படும் நீரிலிருந்து இந்தப் பானம் கிடைக்கிறது. ஆகவே, அதனை இப்படி எழுதவேண்டும்:
தே + நீர் => தேநீர்
ஒருவேளை 'தேனீர்' என்று எழுதினால் என்ன பொருள்?
தேன் + நீர் => தேனோடு கலந்த நீர் என்று பொருள். அது இங்கே பொருந்தாது.
எனக்குத் தேநீரைவிடக் காப்பிதான் பிரியமானது. அதை எப்படித் தமிழில் எழுதுவது?
Coffee என்ற ஆங்கிலச்சொல்லைத் தமிழில் எழுதும்போது, 'f' என்ற ஒலிப்பை வழங்குவது சிரமம். அதற்கு இணையான 'p' என்ற ஒலிப்பைத் தரும் 'ப' என்ற எழுத்தைப் பயன்படுத்திக் 'காப்பி' அல்லது 'காபி' என்று எழுதுகிறோம்.
சிலர் இதனை 'காஃபி' என்று எழுதுவார்கள், 'ஃப' என்பது 'fa' என்ற ஒலிப்பைத் தருவதாக எண்ணிப் பயன்படுத்துவார்கள். இன்னும் சில உதாரணங்கள்: 'ஃபோன்', 'ஃபன்', 'ஃபாஸ்ட்'.
இவை அனைத்தும் ஆங்கிலச்சொற்கள். தமிழ்ச்சொற்களில் 'f' எனும் ஒலிப்பு கிடையாது, ஆகவே ஆய்த எழுத்தாகிய 'ஃ'ஐத் தமிழில் இப்படிப் பயன்படுத்துவதில்லை. ஆங்கில எழுத்துகளுக்குமட்டும் பயன்படுத்துகிறோம், அதுவும் பழக்கத்தால் வந்ததுதான், இலக்கணம் ஏதுமில்லை.
தமிழில் இதனைப் 'பழச்சாறு' அல்லது 'பழரசம்' என்கிறோம். 'கனிச்சாறு', 'கனிரசம்' போன்ற பெயர்களும் பயன்படுத்தப்படுவதுண்டு.
எந்தப்பழத்திலிருந்து சாறு வந்ததோ அதைப்பொறுத்து வெவ்வேறு பெயர்கள் அமைகின்றன. உதாரணமாக, 'எலுமிச்சைச்சாறு', 'ஆப்பிள் சாறு', 'ஆரஞ்சுச்சாறு'.
பழங்களுக்குமட்டுமல்ல, கரும்பிலிருந்து வருவது கரும்புச்சாறு, (அருகம்)புல்லிலிருந்து வருவது அருகம்புல் சாறு, இப்படி இன்னும் பல சாறுகள் நம்மிடையே உண்டு!
'காப்பி'க்குத் தமிழ்ச்சொல் ஏதும் இல்லையா?
'குளம்பி' என இதற்கொரு பெயர் உண்டு. காரணம், காப்பிக்கொட்டை குதிரையின் குளம்பு வடிவத்தில் இருக்கிறது. ஆகவே, குளம்புவடிவக் கொட்டையிலிருந்து வந்த பானம். குளம்பி என்று அழைக்கிறார்கள்.
காப்பியோ காஃபியோ குளம்பியோ, அதனை அதிகம் உட்கொள்வது உடலுக்கு நல்லதில்லை. அதற்குப்பதிலாகப் பழங்களிலிருந்து பிழிந்த சாறு சிறந்தது.
-என். சொக்கன்

