PUBLISHED ON : நவ 21, 2016

'அத்தை வீட்ல போயி உறையூத்த மோர் வாங்கிட்டு வா கண்ணு' என்று அம்மா கூறுகிறார். பாலில் உறைமோர் ஊற்றினால், அது தயிராக உறைந்துவிடும். இங்கே உறை என்பது உறைதல் என்னும் வினைச்சொல்லைக் குறிக்கும். திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு உறைவது.
சோழநாட்டின் தலைநகரம் உறையூர். இந்த ஊர்ப்பெயரில் உள்ள உறைக்கு என்ன பொருள்? பாலுக்கு உறையூற்றுகிறவர்கள் வாழ்வதால், இவ்வூருக்கு உறையூர் என்று பெயரா? இல்லை. உறைதல் என்றால் வசித்தல் என்றும் பொருள். இவ்வூரில் உறைகின்றவர்கள் என்றால் இவ்வூரில் வசிக்கின்றவர்கள். உணவு உடை உறைவிடம் என்று வரிசைப்படுத்திக் கூறுவோம். இங்கே உறைதல் என்றால் வசித்தல். அதனால்தான் வசிப்பிடமான வீட்டை உறையுள் என்பார்கள்.
'எதாச்சும் உறையில போட்டு மூடி வைக்கணும். திறந்து வெச்சிருந்தா தூசி பிடிக்கும்' என்கிறோம். ஒன்றை முழுமையாய் மூடித்தரும் பொருளுக்கும் உறை என்றே பெயர். பால் பொட்டலம் உறையிடப்பட்டு வருகிறது. தண்ணீர்ப் பொட்டலம் உறைகளாய் விற்கப்படுகின்றன. தலையணை உறை, மெத்தை உறை.
'கறிக்குழம்பு நல்லா உறைப்பா இருக்கு...' என்று கூறுகிறார்கள். குழம்பு நன்கு காரமாக இருந்தால் அப்படிக் கூறுவதுண்டு. இங்கே உறைக்கும் தன்மையாவது காரம். உறைத்தல் என்பது காரமாக இருப்பதைக் குறிக்கும்.
வாள்வைக்கும் இடுப்புப் பையையும் 'உறை' என்பார்கள். 'வாளை உறைக்குள்ளிருந்து வெளியே எடுக்க மாட்டேன். அப்படி எடுத்தால் வெட்டாமல் திரும்ப வைக்கமாட்டேன்' என்பது மன்னர் மிரட்டும் வசனம்.
உறை என்பதற்கான பொருள்கள் இத்தோடு முடிவதில்லை. 'பெருமை, நீளம், உயரம், மழை, வாழ்நாள், துன்பம், பொன்' ஆகிய பொருள்களிலும் 'உறை' என்ற சொல் பயன்படுத்தப்படும்.
-மகுடேசுவரன்

