sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நிறுத்துவது எப்படி?

/

நிறுத்துவது எப்படி?

நிறுத்துவது எப்படி?

நிறுத்துவது எப்படி?


PUBLISHED ON : செப் 18, 2017

Google News

PUBLISHED ON : செப் 18, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஙகெ நான எனன எழுதியிருககிறென எனறு உஙகளால படிகக முடிநதால பல பழைய ஓலைசசுவடிகளையும உங்களால படிததுவிட முடியலாம இபபொது நாம வாசிககும தமிழ வெறு சில நூறறாணடுகளுககு முனனர பயனபடுததிய தமிழ வெறு வாககியம எஙகெ அரமபிககிறது எஙகெ முடிகிறது எனபதறகு எநத அடையாளககுறியும இலலாமல எலலா வாககியஙகளையும் செரதது எழுதும முறைதான அபபொது இருநதது எழுததுககு மெல புளளி வைககும பழககம இருககவிலலை நெடிலுககு நாம் இபபொது பயனபடுததும இரடடைககொமபு இருக்கவிலலை இபபடி பல வெறுபாடுகளுணடு திருவளளுவர இனறு அசசிடபபடும திருககுறளைப பாரததால அவருககு அதைப படிகக முடியாமலகூடப பொயவிடலாம.

படித்துவிட்டீர்களா? எழுத்து எந்த அளவு மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்பதைப் பல கல்வெட்டுகளைப் பார்க்கும்போது நமக்குப் புரியும். ஆ என்ற எழுத்தையே 'அவு'க்குப் பக்கத்தில் துணைக்கால் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் க், ச், ட், த், ப், ற் எல்லாவற்றையும் புள்ளி இல்லாமல் க, ச, ட, த, ப, ற என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் கல்வெட்டுகளில் புள்ளிகள் இருக்கின்றன. ஏன் அப்படி என்று ஞாநி மாமாவைக் கேட்டேன்.

“ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் எழுதியதால், ஒவ்வொரு புள்ளி குத்தும்போதும் ஓலை கிழிந்துவிடும் என்பதால் புள்ளி போடாமல் விட்டிருக்கலாம்” என்றார் மாமா. வாக்கியம் எங்கே ஆரம்பிக்கிறது எங்கே முடிகிறது, எங்கே தொடர்கிறது என்பதையெல்லாம் உணர்த்தும். ,

நிறுத்தற் புள்ளிகளே (punctuation marks) கிடையாது என்பதுதான் எனக்குப் பெரிய ஆச்சரியம். தமிழில் மட்டுமல்ல, தமிழைப் போல உலகத்தின் பழமையான மொழிகளான லத்தீன், கிரேக்கம் எல்லாவற்றிலும் ஆரம்பத்தில் அப்படித்தானாம்.

காரணம் அவர்கள் பார்த்துப் படிப்பதை விட மனப்பாடம் செய்து பேசுவதில்தான் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். கிரேக்க நாகரிகத்தில் படிப்பவரை விட பேசுபவருக்குத்தான் அதிக மரியாதை இருந்திருக்கிறது. எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து பேசியிருக்கிறார்கள். மனப்பாடம் செய்யவாவது ஒருத்தர் படித்துப் பார்க்க வேண்டும் இல்லையா? அப்படிப் படிக்கும்போது எந்த இடத்தில் இடைவெளி தரவேண்டும் என்பதை / என்ற கோடு போட்டுக் குறித்திருக்கிறார்கள். அதுதான் முதல் நிறுத்தற் குறியீடு. பின்னர் அதுவே கீழே இறங்கி வளைந்து (,) கமாவாகிவிட்டது.

எப்போதிலிருந்து உலகம் இந்த நிறுத்தற் குறிகளைப் பயன்படுத்துகிறது?

“2000 ஆண்டுகளுக்கு முன்பே… மூன்று புள்ளி வைப்பதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் இவை ஒழுங்குபடுத்தப்பட்டு பரவலாகியிருக்கின்றன. இத்தாலி அச்சகர் அல்துஸ் மாண்ட்டியஸ்தான் இப்போதிருக்கும் ( ) ; : போன்ற பல நிறுத்தற் குறிகளை அறிமுகப்படுத்தியவர்.” என்றார் மாமா.

தமிழில் எப்போது வந்தது என்று கேட்டான் பாலு.

“அதுவும் ஒரு இத்தாலிக்காரர்தான். கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற கிறித்துவ பாதிரியார் தமிழகத்துக்கு வந்து தமிழ் கற்றுக் கொண்டு தன் பெயரை 'வீரமா முனிவர்' என்று மாற்றிக் கொண்டார். அவர் நிறைய எழுத்து சீர்திருத்தங்களைச் செய்தார். நெடிலுக்கு நாம் பயன்படுத்தும் இரட்டைச் சுழிக் கொம்பை அவர்தான் உருவாக்கினார். 'அ'வை கீழே சுழித்து 'ஆ'வாக்கினார். 'எ'வுக்கு கோடு இழுத்து 'ஏ'வாக்கினார். நிறுத்தற் குறிகளையும் அவர்தான் அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. சில குறிகள் முன்னரே இருந்தன.” என்றார் மாமா.

“அவர் காலத்தில் அச்சு வந்துவிட்டது இல்லையா?”

“அச்சுக் கலை கண்டுபிடிக்கப்பட்டு 577 ஆண்டுகளாகின்றன. வீரமாமுனிவர் 300 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் இருந்தவர். இன்றைக்கு மொழியில் நமக்கு சகஜமாக இருக்கும் பல விஷயங்கள் அச்சுக் கலையினால் பரவலானவைதான். இப்போது நிறுத்தற் குறிகள் ஏராளமாக இருக்கின்றன. கணினி வந்தபின் அது சார்ந்தும் புதுப் புது நிறுத்தற்குறிகள் வந்திருக்கின்றன. நியாயமாக உங்களுக்கெல்லாம் பள்ளியில் பங்க்சுவேஷனுக்கு மட்டும் தனி வகுப்பு நடத்த வேண்டும். மொழிக்கு மொழி பங்க்சுவேஷன் வேறுபடும். அதையெல்லாம் சொல்லித்தரவேண்டும்.” என்றார் மாமா.

“ரொம்ப இலக்கணம் பேசிவிட்டோம். களைப்பாக இருக்கிறது. காரை எடுங்க மாமா. ஒரு ரவுண்ட் போய் விட்டு வரலாம்” என்றான் பாலு.

“இன்னிக்கு கார் ஃப்ரீ டேயாச்சே. நான் காரை எடுக்க மாட்டேனே. நடந்து பூங்காவுக்குப் போகலாம்” என்றார் மாமா.

“அதென்ன கார் ஃப்ரீ டே?”

“முதலில் ஐரோப்பாவில் ஆரம்பித்தார்கள். இருபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஒரு நாளாவது காரைப் பயன்படுத்தாமல், பொதுப் போக்குவரத்தையோ சைக்கிளையோ உபயோகிக்க வேண்டும் என்பது நோக்கம். அப்படிச் செய்தால் இன்னும் அதிக நாட்கள் அதே போல செய்யத் தோன்றும். சூழல் மாசுபடுவது குறையும். இஸ்ரேலில் கார் ஃப்ரீ தினத்தன்று வழக்கமாக காற்று மாசுபடும் அளவு 99 சதவீதம் குறைந்ததைக் கண்டறிந்தார்கள்.” என்றார் மாமா.

பூங்காவில் போய் ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். எங்கள் பகுதியில் ஒவ்வொரு செக்டாரிலும் ஒரு குட்டிப் பூங்கா இருக்கும். பெரிய ஜீவா பூங்காவை விட இங்கே கூட்டம் குறைவாகவும் அமைதியாகவும் இருக்கும். இன்று யாருமே இல்லை. ரொம்ப அமைதியாக இருந்தது. இருட்டிவிட்டதால் வானில் நட்சத்திரங்கள் தெரிய ஆரம்பித்திருந்தன.

“எல்லாம் எவ்வளவு அமைதியாக இருக்கிறது” என்றேன்.

“உலகத்தில் வேறெங்கேயோ குண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் இல்லையா?” என்றான் பாலு. “எங்கேயும் கேட்கக் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் உலக அமைதி தினம் கொண்டாடப் படுகிறது” என்றார் மாமா.

“எப்போது அமைதி ஏற்படும்?” என்றேன்.

“உலக அமைதி தினக் குறிக்கோளிலேயே அதற்கு பதில் இருக்கிறது. எல்லாருக்கும் மதிப்பு, பாதுகாப்பு, கௌரவம் (respect, safety, dignity) கிடைத்தால் உலகம் அமைதியாகிவிடும்” என்றார் மாமா.

அடுத்த ஒரு மணி நேரம் அந்த மூன்று மந்திரச் சொற்களையும் விரிவாக அலசிக் கொண்டிருந்தோம்.

வாலுபீடியா 1: எந்த நிறுத்தற் குறியை எங்கே பயன்படுத்தவேண்டும் என்று யோசியுங்கள்.

, . / ' “ ' ” : ; < > ( ) ? ! ^ { [ ] } | \ ~

வாலுபீடியா 2: புள்ளி எழுத்து பற்றி தொல்காப்பியம் சொல்கிறது. ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் காலத்து வல்லம் கல்வெட்டில்தான் எழுத்துக்கு மேல் புள்ளி வைக்கும் எழுத்துகள் காணப்படுகின்றன.

வீரமாமுனிவர் (1680 -1742) தேம்பாவணி என்ற கிறித்துவ பக்தி இலக்கியம் தவிர, பரமார்த்த குரு கதைகள் என்று நையாண்டிக் கதைகளும் எழுதியிருக்கிறார்.

வாலுபீடியா 3:

உலக நிறுத்தற் குறிகள் தினம்: செப்டம்பர் 24

கார் ஃப்ரீ தினம்: செப்டம்பர் 22

உலக அமைதி தினம்: செப்டம்பர் 21






      Dinamalar
      Follow us