PUBLISHED ON : அக் 28, 2019

வாரம் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, விடுமுறை என்பதே ஏக்கம் கலந்த கனவுதான். வார கடைசி நாட்களான சனி, ஞாயிறு என்ன செய்வீர்கள்? என கேட்டிருந்தோம். மாணவர்களின் கருத்தறிய, பண்ருட்டி, ரத்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியரை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:
ஹேமபிரியன், 9ஆம் வகுப்பு
சென்ற ஆண்டு வரைக்கும் அந்த நாட்கள் விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட தாமதமாக எழுவேன். மொபைல் பார்ப்பேன். கேம்ஸ், வீடியோ பார்ப்பதும், நண்பர்களுடன் மைதானத்தில் கால்பந்து விளையாடுவதுமாகப் பொழுது போகும். இப்ப அதற்கெல்லாம் நேரமே இல்லை. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் புக்ஸுடன் இருப்பதால் அதைக் கண்டாலே பிடிக்கலை.
பி.முகிலன், 9ஆம் வகுப்பு
சனி, ஞாயிறு என்றாலே ஜாலி தான். அந்த ரெண்டு நாளும் ஸ்கூல் பையைத் தொடவே மாட்டேன். டி.வி.யில் என்னென்ன புரோகிராம் என பார்த்து, திட்டமிட்டுப் பார்ப்பேன். எண்ணெய் தேய்த்துக் குளிப்பேன், கிரிக்கெட் விளையாட்டு, வீடியோ கேம்ஸ், பக்கத்துவீட்டு பசங்களுடன் விளையாட்டு என, விடுமுறை போகும். ஹோம் ஒர்க் எல்லாம் திங்கட்கிழமை எழுந்துதான் முடிப்பேன்.
எஸ்.ஆர். கனிமொழி, 9ஆம் வகுப்பு
என் அம்மாவும் டீச்சர் என்பதால், வார நாட்களில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் இருப்பாங்க. ஏதோ அவசர சமையலாக இருக்கும். அந்த 2 நாள் விடுமுறையிலேயும் நிதானமாக விதவிதமாக சமைத்துத் தருவாங்க. நான் அவங்களுக்கு ஒத்தாசையா இருப்பேன். மாலை நேரத்துல பார்க் மாதிரி எங்காச்சும் வெளியில சென்று வருவோம்.
எம்.ஆஃபியா நஸ்ரின், 8ஆம் வகுப்பு
சனிக்கிழமை தலைமுடியை எண்ணெய் தேய்த்து வாரி, சரிசெய்வது. 'டிராயிங்.' சமையல் செய்து பார்ப்பதுன்னு போகும். ஞாயிறு பகல் வீடு முழுவதையும் சுத்தம் செய்வதிலும், மாலையில் ஹோம் ஒர்க் செய்யுறதுலயும் போகும். நடுநடுவே டி.வி.யும் பார்ப்பேன்.
எஸ்.எம்.முகேஷ், 6ஆம் வகுப்பு
வெள்ளிக்கிழமையே சனி, ஞாயிறு விடுமுறை குறித்து திட்டமிடுவேன். ஏனென்றால், உறவினர்கள் வீட்டிற்குச் சென்று அங்கு பசங்களுடன் விளையாடுவேன். புக்கை எடுத்துப் படிக்கப் பிடிக்காது. இடையே ஹோம் ஒர்க் மட்டும் செய்வேன். டி.வி. பார்ப்பேன். விளையாடுவேன். இப்படித்தான் பொழுதுபோகும்.
ஏ.முஹமது யஷ்யா, 8ஆம் வகுப்பு
நண்பர்களுடன் கிரிகெட் விளையாடுவேன், பார்க் போவேன். கதைப் புத்தகங்கள் படிப்பேன். சில சமயம் எங்காவது பிக்னிக் போவோம். அம்மா, ஏதாவது கடைக்குப் போகச் சொல்லுவார்கள். அவங்களுக்கு ஒத்தாசை செய்வேன். ஞாயிறு மாலை 6:00 மணிக்கு பிறகு ஹோம் ஒர்க் செய்வேன்.
