PUBLISHED ON : மே 09, 2016

பால சரஸ்வதி பிறந்த நாள் மே 13
இந்தியக் கலைகளில் உலகின் கண்களில் முதலாவதாக வந்து நிற்பது பரதக் கலை. பரதம் என்றதும் நினைவுக்கு வருபவர் பால சரஸ்வதி. இந்தியாவின் பல பரதக் கலைஞர்கள் இன்று உலகம் முழுக்கப் பரந்து இருந்து வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரதம் கற்பிக்கிறார்கள்.
முன்னர் ஒரு காலத்தில் பரத நாட்டியம் என்பது மரியாதைக்குரிய கலையாக இருக்கவில்லை. கோயில்களில் மட்டும் ஆடப்பட்ட கலை அது. குறிப்பிட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அந்தக் கலையைத் தொடர்ந்தார்கள். அந்தப் பிரிவினருக்கு 'தேவதாசிகள்' என்று பெயர் இருந்தது. 'கடவுள் மேல் பிரியம் கொண்டவர்கள்' என்று அந்த வார்த்தைக்குப் பொருள் சொன்னார்கள்.
ஆனாலும், உயர்குடி என்று சொல்லப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்தக் கலையை மாற்றுக் குறைவானதாகவே பார்த்தார்கள்.
அப்படிப்பட்ட சூழலில் பால சரஸ்வதி பரதக் கலையை முன்னெடுக்கத் தொடங்கினார். தனம்மாள் என்கிற மிகப் பிரபலமான வீணை வித்வாம்சினியின் பேத்தி இவர்.
நான்கு வயதிலேயே பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இந்திய எல்லைகளைத் தாண்டி உலகம் முழுக்க பரதக் கலையின் கொடியைப் பறக்க விட்டார். பால சரஸ்வதியின் ஆட்டத் திறமையை உலகம் வியந்தது. உலகமே பாராட்டுவதால், இந்தியாவில் பரதக் கலையின் மேல் இருந்த கருத்து மாறியது. பரதம் எல்லோருக்குமான கலையாக மாறியது.
ஒரு கலையில் உலகப் புகழ் பெறுவது சிறப்பான விஷயம். தன் திறமையின் மூலமும் இடைவிடாத இயக்கத்தின் மூலமும் அந்தக் கலைக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தருவது பெரும் சிறப்பு. அந்தப் பெருமைக்கு உரியவர் பால சரஸ்வதி.
பத்மபூஷண், பத்ம விபூஷண் என்று இந்திய அரசாங்கத்தில் இவர் பெறாத பட்டங்கள் இல்லை! சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான சத்யஜித் ராய், 'பாலா' என்கிற பெயரில் பால சரஸ்வதியைப் பற்றி ஓர் ஆவணப் படமே எடுத்திருக்கிறார்!
