
மதிய உணவு நேரம், மீனாட்சியம்மாள் தன்னுடைய மகனைச் சாப்பிட அழைத்தார்.
''இதோ, வருகிறேன் அம்மா'' என்றார் அவருடைய மகன். வழக்கம்போல் புத்தகமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தார்.
மீனாட்சியம்மாளுக்குத் தன்னுடைய மகனை மிகவும் பிடிக்கும். ஆனால், அவர் சாப்பிடும்போது புத்தகம் படிப்பது மட்டும் கொஞ்சமும் பிடிக்காது.
பின்னே? சாப்பிடும்போது கவனம் முழுவதும் உணவில் அல்லவா இருக்கவேண்டும்? அப்போதுதானே தாயார் கஷ்டப்பட்டு சமைத்த உணவை ருசித்துச் சாப்பிடமுடியும்? புத்தகம் படித்துக்கொண்டே சாப்பிட்டால் உணவின் சுவை எப்படித் தெரியும்?
ஆனால், மீனாட்சியம்மாளின் மகனுக்கோ, புத்தகங்களின்மீது அவ்வளவு விருப்பம். எந்நேரமும் படித்துக்கொண்டே இருக்கவேண்டும், அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் சாப்பிடும்போதும் புத்தகங்களைப் படிக்கிற பழக்கம் அவருக்கு வந்திருந்தது.
உணவுத் தட்டின்முன் அமர்ந்தபடி புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிற மகனைச் சினத்துடன் பார்த்தார் மீனாட்சியம்மாள். 'இப்படி எந்நேரமும் புத்தகத்திலேயே கவனமாக இருந்தால், உணவுத்தட்டில் என்ன இருக்கிறது என்பதுகூட இவனுக்குத் தெரியாதே!' என்று நினைத்தார்.
உடனே, மகனுக்குப் பாடம் கற்பிக்க அவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. குழம்பிலிருந்த கறிவேப்பிலை இலைகளை மட்டும் எடுத்து அவனுடைய தட்டில் வைத்தார்.
புத்தகத்தில் கவனமாக இருந்த மகன் அந்தக் கறிவேப்பிலையை எடுத்து உண்டார். ''சோறு எங்கே? குழம்பு எங்கே?''என்றெல்லாம் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர் புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார்.
அடுத்து, மீனாட்சியம்மாள் கொஞ்சம் தயிர் ஊற்றினார். அதையும் அவருடைய மகன் வழித்து உண்டார்.
இதைப் பார்த்த மீனாட்சியம்மாளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ''சாப்பாடு முடிந்ததா?'' என்று கிண்டலாகக் கேட்டார்.
''ஓ, வயிறு நிரம்பிவிட்டது''என்றார் அவருடைய மகன். தட்டிலிருந்து எழ முயன்றார்.
மீனாட்சியம்மாள் பதறினார், ''நீ சாப்பிட்டது சாதம் இல்லை, வெறும் கறிவேப்பிலையும் தயிரும்தான்'' என்றார்.
''அப்படியா?'' என்று வியப்புடன் கேட்டார் அவருடைய மகன். ''சரி, சாதம் போடுங்கள், சாப்பிடுகிறேன்''என்று திரும்பவும் தட்டின்முன் அமர்ந்தார்.
''இப்படிப் புத்தகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால் தட்டில் என்ன இருக்கிறது என்பதுகூட உனக்குத் தெரியவில்லையே'' என்று ஆதங்கத்துடன் கேட்டார் மீனாட்சியம்மாள்.
''கொஞ்சம் சரியாகப் பார்த்து ருசித்துச் சாப்பிடக்கூடாதா?''
''அம்மா, எனக்கு என்ன தரவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் எதைப் பரிமாறினாலும் நான் சாப்பிடுவேன்'' என்றார் அவருடைய மகன். அதைக்கேட்டு மீனாட்சியம்மாள் நெகிழ்ந்துபோனார்.
இளவயதிலேயே இப்படிக் கல்வி, நூல் வாசிப்பின்மீது மிகுந்த ஆர்வத்துடன் இருந்த மீனாட்சியம்மாளின் மகன், பின்னர் சிறந்த கவிஞராக, எழுத்தாளராகத் திகழ்ந்தார். 'தமிழ்க்குமரி, கவி உலகில் கம்பன், எனது சிறைவாசம்' உள்ளிட்ட பல தேர்ந்த நூல்களை எழுதிப் புகழ்பெற்ற ச.து.சுப்பிரமணிய யோகியார்தான் அவர்.
-என். சொக்கன்

