PUBLISHED ON : பிப் 24, 2020

சாட் உணவகங்களில் வெண்ணெய் மணம் வீச 'பன்'னை (Bun) புரட்டுவார்கள். அதோடு காய்கறிகளை மசித்து, கரம் மசாலா, சாட் மசாலா எல்லாம் சேர்த்து சமைத்து செய்யப்படும் கலவையோடு சேர்த்து சாப்பிடும் போது, மாலைநேர பசி மயக்கம் பறந்துபோகும்.
சரி, இந்த உணவு எப்படி உருவானது தெரியுமா? 1850களில் மும்பையில் நூற்பாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்தனர். அங்கு வேலை பார்க்கும் மக்கள் சீக்கிரமாக உணவு சாப்பிட்டு, வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த உணவு.
நூற்பாலைகள் நிறைந்த டார்டியோ எனும் சந்தடி மிகுந்த பகுதியில் சர்தார் என்பவரால் உருவாக்கப்பட்டது.
'பாவ்' என்ற பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் ஒன்று இருக்கிறது. மராத்தி மொழியில் பாவ் என்றால் 'நான்கில் ஒரு பாகம்' என்று அர்த்தம். நான்கு பகுதிகளாகப் பிரித்து இது சாப்பிடப்படுவதால்தான் இந்தப் பெயர்.
இன்னும் சிலரோ போர்ச்சுக்கீசிய மொழியில் 'பாவ்' என்றால் ரொட்டி என்று அர்த்தம். அதனால்தான் இந்தப் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். தற்போது தள்ளு வண்டிகள் முதல் நட்சத்திர உணவு விடுதிகள் வரையிலும் முக்கிய உணவாக உள்ளது.
எத்தனை வகைகள்!
சீஸ் பாவ் பாஜியின் மேல் சுவையான பாலாடைக்கட்டிகள் தடவப்பட்டிருக்கும்; பாவ் பாஜியை லேசாக வறுத்தெடுத்தால் மொறமொறப்பான ஐட்டம் தயார். பனீர் சேர்த்தால் அது ஒரு தனி ருசி. காளான் பிரியர்களுக்காகக் காய்கறிகளுக்குப் பதில் காளான் சேர்ப்பதும் உண்டு. காய்கறிகளை மசிப்பதற்குப் பதில் துண்டுகளாகச் சேர்த்துச் செய்தால் அதுதான் காடா பாவ் பாஜி.
ஜெயினர்கள் தரைக்குக் கீழ் வளரும் எதையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு இல்லாமல் வாழைப்பழம் சேர்த்துச் செய்யப்படுவதுதான் ஜைனர் பாவ் பாஜி.
கொல்கத்தா பாவ் பாஜியில் அங்கே மட்டும் பிரத்யேகமாகக் கிடைக்கும் மசாலாக்கள் சேர்க்கப்படும். மசாலாக்களும் மிளகாய்த்தூளும் சேர்க்காமல் செய்யப்பட்டால் அதுவே வெள்ளை பாவ் பாஜி.
-லதானந்த்

