PUBLISHED ON : நவ 25, 2019

காலை வேளையில் பள்ளிக்குச்செல்லும் பிள்ளைகள் இருக்கும் வீடு, எப்படி பரபரப்பாக இருக்கும் என்பதை தனியே சொல்லத்தேவையில்லை. ஒரே வீட்டில் இரண்டு பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கின்றனர் என்றால், அந்தக் காட்சியை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். பள்ளியில் வேலை நாளை அரை நாளாகக் குறைத்தால்?
எப்படி இருக்கும் என்று கேட்டிருந்தோம். மாணவர்களின் கருத்தறிய, மதுரை, மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் மாணவர்களைச் சந்தித்தோம்.
அவர்களின் கருத்துகள் இதோ..
சுபதாரணி
ஜாலியாக இருக்கும். ஒரே நேரத்தில் பள்ளி தொடங்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் சிக்கித் தவிப்பதை தினமும் பார்க்கிறேன். இப்படி அரைநாளாக மாற்றினால், காலையில் ஏற்படும் வாகனக்கூட்டம் குறையும். மதியத்திற்கு மேல் டைம் கிடைத்தால் பாடங்களைத் திரும்பப் படிக்க, விளையாட நல்ல நேரம் கிடைக்கும். என்னைப் போல பலருக்கும் இந்த வாய்ப்பு நல்லதாக அமையும்.
கோபிநாத்
மகிழ்ச்சிதான்! பள்ளி நேரத்தை அரைநாளாக மாற்றினால் பெற்றோருடன் அதிக நேரம் செலவழிக்க முடியும். மதியம் வீட்டுக்குப்போய், கூடுதலாக கொஞ்ச நேரம் விளையாடவும் வாய்ப்புகள் அமையும். பாடப்புத்தகப் பையின் சுமையும் குறையும். நினைச்சுப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு.
மவுலிகா
பள்ளி நேரத்தை அரைநாளாகக் குறைத்தால், மாணவர்களுக்கு சோம்பல் வளர்ந்து விடும். தற்போது புதிய புத்தகத்தில் அதிக பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களாலும் முழுப் பாடத்தை, அவசரமாக நடத்தும்படி ஆகிடும். ஏற்கெனவே இருக்கும் பாடங்களைப் படித்து, புரிந்துகொண்டு படிப்பதே சுமையாக இருக்கு. இதுல பள்ளியை அரைநாளாக மாத்திட்டா அவ்வளவு தான். சுமை இன்னும் அதிகமாகிடும். அதனால் இப்போது உள்ள மாதிரியே தொடரட்டும்.
ஜோதி பிரியா
பள்ளியை பாதி நாளாக குறைத்தால், பள்ளியில் தோழிகளைச் சந்தித்து உரையாடுவதும் கதைகள் பேசுவதும் குறைஞ்சுபோயிடும். வீட்டுக்குப் போனாலும் படி படின்னு சொல்லுவாங்க. தேவையில்லாத மன அழுத்தம் அதிகரிக்கும். ஆனாலும், ஒரு வழி இருக்கு. பத்தாம் வகுப்பிற்கு மேல் தற்போதுள்ள முறையைப் பின்பற்றுவது நல்லது. ஆனால், கே.ஜி., முதல் 5ஆம் வகுப்பு போன்ற சிறிய வகுப்புகளுக்கு நேரத்தை குறைச்சுக்கலாம்.
மோகன மாணிக்கதாசன்
நேரத்தைக் குறைப்பதால் 'பள்ளிக்கூடம் அரைநாள் தானே' என காலையே உற்சாகமாக விடியும். விடுப்பே எடுக்காமல் பலரும் பள்ளிக்குத் தவறாமல் வர வாய்ப்புள்ளது. மீதி அரைநாள் நன்றாக விளையாடலாம். என்ன.. வீட்டில் பிள்ளைகளின் சேட்டை தாங்காமல் பல பெற்றோருக்குத் திண்டாட்டம் ஆகிவிடும்.
திவ்யஸ்ரீ
உண்மையில் இப்படி நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும். என்னைப் போன்றவர்களுக்குப் பரவாயில்லை. தூக்கத்தைக் கெடுத்து, தூங்கி வழிந்தபடி காலையில் பள்ளிக்கு வரும் சிறுவர்களைப் பார்க்கும்போது சங்கடமாக இருக்கும். இது நடைமுறைக்கு வந்தால் மாணவர்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
