
வேத் மேத்தா
21.3.1934
லாகூர், பாகிஸ்தான் (ஒன்றுபட்ட இந்தியா)
சிறுவயதிலேயே பார்வையிழந்த வேத் மேத்தா, தனது 20வது வயதில் 'ஃபேஸ் டு ஃபேஸ்' (Face to Face: An Autobiography) என்ற தனது முதல் நூலை வெளியிட்டார். ஐம்புலன்களில் கண் தவிர காது, வாய், மூக்கு, தோல் ஆகியவற்றைக் கண்களாக்கி அறிவைப் பெருக்கினார். இவற்றுடன் வியக்கத்தக்க நினைவாற்றலையும் கொண்டிருந்தார் வேத் மேத்தா.
அப்போதைய இந்தியாவில் பார்வையற்றோர் படிக்க சரியான பள்ளிகள் இல்லை. இதனால், இவர் 15 வயது வரை பள்ளி செல்லவில்லை. அதன் பிறகே அமெரிக்காவில் உள்ள பார்வையற்றோர் பள்ளிக்குப் படிக்கச் சென்றார். எல்லா பாடங்களையும் விரைவாகப் படித்து, ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார். பள்ளி மூலமாகப் பல பயிற்சிகளும் இவருக்குக் கிடைத்தன.
ஒரு பொருளின் அமைப்பு, நிறம், அளவு போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு மனதில் பதிந்து கொள்வார். அது தொடர்பான கேள்விகளையும் கேட்டு முழுமையாக ஒரு விஷயத்தை மனதில் நிறுத்துவார். இத்தகைய கடின உழைப்புக்குப் பிறகே டிப்ளமோ முடித்து பட்டமும் பெற இவரால் முடிந்தது.
கல்லூரிக் காலத்திலேயே எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னாளில் 'தி நியூயார்க்கர்' பத்திரிகையில் எழுத்தாளராகவும் நிருபராகவும் பணிக்குச் சேர்ந்தார். அங்கு, வேத் மேத்தா எழுதிய கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 24 புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
'நம்மால் முடியாது என்று பிறர் வேண்டுமானால் நினைக்கலாம்; ஆனால் நம்மால் முடியாதது எதுவுமில்லை' என்று நிரூபித்து, சாதனைகளின் இமயமாகத் திகழ்கிறார் வேத் மேத்தா!