PUBLISHED ON : ஜூன் 12, 2017

தற்கால இந்திய வரலாற்று ஆசிரியர்களில் மிக முக்கியமானவர் ராமசந்திர குஹா. 1947-க்குப்பின், இந்திய வரலாறு முடிந்துவிடவில்லை என்பதை தீவிரமாக நம்பும் இவர், தற்போதைய தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல், பழங்குடியினர், அரசியல், கலாசாரம், மானுடவியல் தொடர்பான வரலாற்று நூல்களை எழுதி வருகிறார். அமெரிக்காவின் 'ஃபாரின் பாலிசி' என்னும் புகழ்பெற்ற இதழ், இவரை உலக ஆளுமைகளுள் ஒருவராகத் தேர்வு செய்தது. 2011ம் ஆண்டு சாகித்ய அகாதமி, 'காந்திக்குப் பிறகு இந்தியா' என்ற இவரது புத்தகத்திற்கு விருது வழங்கியது. இந்தியாவில் புகழ்பெற்ற தினசரிகளுக்கும், இதழ்களுக்கும் அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
வரலாற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
என் சிறுவயதில், கிரிக்கெட் ஆட்டக்காரனாக ஆக வேண்டும் என்றுதான் விரும்பினேன். நான் டேராடூனில் வளர்ந்தவன். அப்போதைய டேராடூனில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும், அதற்கான காலநிலை அமையாது. அதனால் அந்த ஆசையை விட்டுவிட்டேன். கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும், கிரிக்கெட் குறித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினேன். அங்கிருந்துதான் எனக்கு வரலாற்று ஆர்வம் தொடங்கியது.
உங்களுக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியது எது?
நமக்கு ஏற்படுவது திருப்புமுனை தான் என்பது புரிவதற்கு முன்பே, திருப்புமுனை ஏற்பட்டுவிடும். பின்னாளில் அதையொட்டி நடக்கும் சம்பவங்களால் தான், திருப்புமுனையை உணர முடியும். நிறைய திருப்புமுனைகள் அவ்வப்போது இருந்தாலும், கல்லூரியில் பொருளாதாரம் படித்து வந்தபோது, வெர்னியர் எல்வின் எழுதிய 'இந்திய பழங்குடிகள்' பற்றிய புத்தகம் படிக்க நேரிட்டது. அதன்பின் எனக்கு மானுடவியல் துறை மீது ஆசை வந்தது. மனிதர்கள் எப்படித் தோன்றினார்கள், பண்பாடு, இனக்குழுக்கள் எப்படி ஏற்படுகின்றன என, பலவற்றையும் குறித்த படிப்பு அது. அது தான் என் வாழ்க்கையை மாற்றியது.
பள்ளியில் வரலாறு பாடங்களை சொல்லித் தருவதில் திருப்தியா?
வரலாற்றை சுவாரஸ்யமாக்க புத்தகங்கள் மட்டுமோ, வகுப்பறை மட்டுமோ போதாது. மாணவர்களை நேரடியாக வரலாற்றுச் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நேரடியாகப் பார்த்தால் மட்டுமே, அவை மனதில் பதியும். மாணவர்களுக்கும் வரலாறு மீது ஆர்வம் அதிகரிக்கும்.
வரலாற்றுப் புத்தகங்கள் எழுத ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
மானுடவியல் படித்த காலத்தில், பழங்குடியினர் சமூகத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான 'சிப்கோ இயக்கம்' நடைபெற்று வந்தது. அதுகுறித்து ஆய்வு செய்ய விரும்பினேன். வடகிழக்கு மாநிலங்களில் வளர்ந்ததால், சமூகப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதன்பின் பல ஆண்டுகள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில், வரலாற்று நூல்கள் எழுத வேண்டும் என முடிவெடுத்து அதில் இறங்கிவிட்டேன்.
வரலாற்று நூல்கள் எழுதுவது அவ்வளவு கடினமா?
எந்தவொரு வேலைக்கும் உழைப்புதான் முக்கியம். வரலாற்றுப் புத்தகங்கள் எழுதுவதற்கு, நிறையப் புத்தகங்கள் படிக்க வேண்டும். பல்வேறு கருத்துகளை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆதாரங்களைத் திரட்ட வேண்டும். அதேசமயம், நம் தனிப்பட்ட கருத்துகளைத் திணிக்கக்கூடாது. பல சமயங்களில், வரலாறு பற்றிய நம்முடைய புரிதல்தான், புத்தகங்களாக வெளிப்படுகின்றன. அதில் வரலாற்றைத் திரிக்காமல், நேர்மையாகச் சொல்ல வேண்டும். நடந்த சம்பவங்களை மையக்கருவாக்கி விருப்புவெறுப்பற்று எழுத வேண்டும்.
உங்களுடைய ஒரு நாள் எப்படி இருக்கும்?
புத்தகங்கள் எழுத வேண்டும் என்றால், நிறைய நூலகங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அங்கு படித்த விஷயங்களைக் குறிப்பெடுக்க வேண்டும். அதன்பின் அதைத் தொகுத்து எழுத வேண்டும். ஒரு புத்தகம் எழுத, சில ஆண்டுகள்கூட ஆகலாம். மற்ற சமயங்களில் தினசரிகளுக்கு, இதழ்களுக்கு அரசியல் கட்டுரைகள் எழுதுவேன்.
அவர் எழுதிய சில முக்கிய புத்தகங்கள்
காந்திக்குப் பிறகு இந்தியா
இந்தியாவிற்கு முந்தைய காந்தி
நவீன இந்தியாவின் சிற்பிகள்
சமூக சூழலியல்
நுகர்வெனும் பெரும்பசி