sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

காற்று வெளியிடை...

/

காற்று வெளியிடை...

காற்று வெளியிடை...

காற்று வெளியிடை...


PUBLISHED ON : ஜூன் 12, 2017

Google News

PUBLISHED ON : ஜூன் 12, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடற்கரையில் கைக் காற்றாடி வாங்கினோம். கடற்கரையில்தான் இந்த மாதிரி விளையாட்டுப் பொருட்கள் கிடைக்கின்றன. சோப் நுரையில் குமிழ்கள் ஊதும் கருவி, எனக்குப் பிடித்த இன்னொரு விளையாட்டுக் கருவி. நானும் பாலுவும் யார் ஊதிய குமிழ் பெரிசாக வருகிறது என்று போட்டி போட்டு ஊதுவோம்.

பட்டம், கைக்காற்றாடி எல்லாம் கடையில்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் நாமே செய்துகொள்ளலாம். ஒரு பழைய ரீஃபில், கொஞ்சம் கெட்டி பேப்பர், ஒரு குண்டூசி, ஒரு கத்தரிக்கோல் இருந்தால் போதும். கைக்காற்றாடி செய்துவிடலாம். காற்று எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறது என்பதை, அது சுற்றுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

காற்று இல்லாவிட்டால் நாம் எல்லாரும் என்ன ஆவோம்? யோகா வகுப்பில் மூச்சை இழுத்து நிறுத்த சொல்லிக் கொடுத்தார்கள். சில நொடிகள்தான் நிறுத்த முடிகிறது. அதன்பின் மூச்சு திணறிவிடுகிறது. காற்று எவ்வளவு முக்கியம் என்று, அப்போது புரிந்துகொண்டேன்.

“காற்றைக் கொண்டு பாய்மரக்கப்பலை இயக்குவதை சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே கண்டுபிடிச்சாச்சு. பழங்காலத்துல கிணற்றுல இருந்து தண்ணீர் இறைக்கறதுக்கு காற்றாலையை பயன்படுத்தியிருக்காங்க” என்றார் மாமா.

இயற்கையில் நிலக்கரி, பெட்ரோல் எண்ணெய், எரிவாயு எல்லாம் கிடைக்கின்றன. ஆனால், அவை இன்னும் 50 ஆண்டுகளில் தீர்ந்துபோய்விடும். அதனால், சூரிய ஒளி, காற்றைப் பயன்படுத்தி, ஆற்றலையும் மின்சாரத்தையும் உண்டாக்குவதுதான் புத்திசாலித்தனம்.

“நாட்டிலேயே காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம்தான் முதலிடம். மொத்த காற்றாலை மின்சாரத்தில் 30 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது. 1,500 மெகாவாட் மின் உற்பத்தி வரை செய்யக்கூடிய காற்றாலைகள், முப்பந்தல் என்ற ஊரில் இருக்கின்றன” என்றார் மாமா.

“காற்றை நாம் எப்போதுமே கொண்டாடி வந்திருக்கிறோம். தெற்கிலிருந்து வீசும் காற்றுக்கு தென்றல் என்று பெயர்; வடக்கிலிருந்து வீசுவது வாடை. கிழக்கு மேற்கிலிருந்து வீசுவதற்கு என்ன பெயர்?” என்று கேட்டான் பாலு. “கிழக்குக் காற்று கொண்டல். மேற்குக் காற்று கச்சான். தெற்குக் காற்றுக்கு சோழகம் என்றும் ஒரு பெயர் உண்டு.” என்றது வாலு.

“பாரதியார் காற்றைப் பற்றி வசனகவிதை எழுதியிருக்கிறார். அதில், காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் இரண்டு கயிறுகளுக்கு கந்தன் வள்ளியம்மை என்று பெயர் சூட்டி, இருவரும் அன்பாக பேசிக் கொள்வதாக, ஒரு குட்டிக் கதையும் எழுதியிருக்கிறார்” என்றார் மாமா.

“காற்றைப் பற்றி பாரதி சொன்னதில் எனக்கு மிகவும் பிடித்தது, காற்று நாம் பலவீனமாக இருந்தால் நம்மை அழித்துவிடும். நாம் பலமாக இருந்தால், நமக்கு உதவி செய்யும் என்று அவர் சொல்வதுதான். 'காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று' என்கிறார் பாரதி. நிஜம்தானே. வலிமையான பெரிய காற்றாலைகளைக் கட்டினால், மின்சாரம் தயாரிக்க காற்று உதவுகிறது. பலவீனமான கூரை போட்டால், தூக்கி எறிந்துவிடுகிறது” என்றார் மாமா.

“பாரதிதானே 'காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்'' என்றும் சொல்லியிருக்கிறார்?” என்று கேட்டேன். “ஆமாம். பூமியை சுற்றியும் காற்று நிறைந்திருக்கிறது. அதில் ஏறி அதைத் தாண்டித் தானே வேறு கிரகங்களை நோக்கிப் போக வேண்டும்? ட்ரோப்போஸ்பியர், ஸ்ட்ரேட்டோஸ்பியர், மீசோஸ்பியர், தெர்மோஸ்பியர், அயனோஸ்பியர் எல்லாவற்றுக்கும் அப்பால் போனால், காற்று மிக மிக மெலிதாகிவிடும். அதுதான் ஸ்பேஸ் எனப்படும் விண்வெளி.” என்றார் மாமா.

“பூமியிலிருந்து அதற்கு எவ்வளவு தூரம் மேலே போக வேண்டும்?” என்று கேட்டான் பாலு. “சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர்.”

வழக்கமாக பாலு சொல்வது போல, இந்த முறை நான் சொன்னேன். “நான் பெரியவளானதும் அங்கே போய் எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறேன்.”

“போய்ப் பார். ஆனால், அப்படிப் போகும் முதல் பெண் நீ இல்லை. 54 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் விண்வெளியில் சுற்றிவிட்டு வந்துவிட்டார்.” என்றது வாலு. “வேலண்டினா” என்றார் மாமா.

சோவியத் யூனியனில், 1963ல் ஒரு தையல் தொழிலாளியாக இருந்தவர், 26 வயது வேலண்டினா. விண்வெளிக்கு பெண்களை அனுப்பத் திட்டமிட்டபோது விண்ணப்பித்தார். 400 பேரில் அவர் தேர்வானார். 'வோஸ்தக்- 6' என்ற விண்கலத்தில் சென்ற அவர், மூன்று நாட்கள் விண்வெளியில் இருந்து, 48 முறை பூமியை சுற்றியிருக்கிறார். திரும்பி வந்ததும், அவர் சாதனைக்கு பரிசாக என்ன வேண்டும் என்று கேட்டார்கள். சோவியத் ராணுவத்தில் சார்ஜெண்டாக இருந்த தன் அப்பா, இரண்டாம் உலக யுத்தத்தில் பின்லாந்தில் போரில் இறந்த இடத்தைக் கண்டுபிடித்து, அங்கே அவருக்கு நினைவுச் சின்னம் வைக்கவேண்டும் என்பதுதான் வேலண்டினா வைத்த கோரிக்கை. அதன்படியே செய்தார்கள். வேலண்டினா விண்வெளியில் எடுத்த புகைப்படங்களின் மூலம்தான், வான்வெளியில் எங்கெல்லாம் ஏரோசால் வாயு அடுக்குகள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.

“இப்போது வேலண்டினா என்ன செய்கிறார்?” என்று கேட்டேன். “பொறியியல் படித்து, நிறைய கட்சிப் பதவிகளில் இருந்தபின்னர் ஓய்வுபெற்றார். தற்போதைய ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வேலண்டினாவுக்கு, வயது 80” என்றார் மாமா.

“இந்த மாதிரி ஒவ்வொருத்தர் சாதனைகள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டால், நாமே அதையெல்லாம் செய்து முடித்துவிட்ட மாதிரி ஒரு திருப்தியும் களைப்பும் வந்துவிடுகிறது.” என்றான் பாலு. “இனி கொஞ்சநேரம் சும்மா ஹாயாக நடக்கலாம். வேறு எதுவும் செய்யவேண்டாம் என்று தோன்றுகிறது” என்றான்.

“உன்னை மாதிரி ஆட்களுக்காகத்தான் ஜூன் 19ம் தேதியை, 'சாண்ட்டரிங் டேவாக' கொண்டாடுகிறார்கள். சாண்ட்டரிங் என்றால், கை வீசி மெதுவாக நடப்பது. அப்படி நடப்பதில் இருக்கும் மகிழ்ச்சியைப் பற்றி, எழுத்தாளர்கள் சிலர் கதையில் எழுதியிருக்கிறார்கள்.” என்றார் மாமா.

“முதலில் நடப்போம். அப்புறம் மாலு எழுதுவாள்” என்றான் பாலு. எல்லாரும் எழுந்து மணலில் கால் புதையப் புதைய, மெதுவாகக் கை வீசி நடந்தோம்.

வாலுபீடியா 1

ஜூன் 15 - உலகக் காற்று தினம்

ஜூன் 16 - விண்வெளிக்கு முதல் பெண் சென்ற நாள். 1963

வாலுபீடியா 2

இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் 70 சதவிகிதம், மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக் காற்று வீசும்போது நடக்கிறது.






      Dinamalar
      Follow us