PUBLISHED ON : ஜூன் 12, 2017

உலகில் இருக்கிற புல், பூண்டு முதல் மனிதன் வரை, எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு எனத் தத்துவஞானிகள் கருதுகின்றனர். இதனை அறிவியல்பூர்வமாக நிரூபித்தவர் விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். அவர், தாவரங்களுக்கு உயிர் உண்டு; அவை சுவாசிக்கின்றன; உணவு உட்கொள்கின்றன என்பதை ஆய்வு செய்து நிரூபித்தார்.
நுண்ணிய மின் கருவிகளைக் கொண்டு, தாவரங்களின் உயிர் அணுக்களை ஆராய்ந்து இம்முடிவினைக் கூறினார். முதலில், அவர் தவளையைப் பிடித்து, அதன் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். அதன் கால்களில் அதிர்வு ஏற்பட்டது. அது போலவே, உயிருள்ள தாவரம் ஒன்றின் தண்டுப் பாகத்தில் மின்சாரத்தைச் செலுத்தினார். அதன் இலைகள் சுருங்கித் தாவரம் உயிரிழந்தது, இவ்வாராய்ச்சியின் முடிவாக, அவர் வெளியிட்ட உண்மைகள் தாவரங்களும் நம்மைப் போல் உணவை ருசி பார்க்கின்றன; சுவாசிக்கின்றன; உயிருடன் வாழ்கின்றன என்பதே.
தாவரங்கள் ஒரு பாகத்திலிருந்து, மற்ற பாகங்களுக்கு உணர்ச்சியை அறிவிக்கின்றன. தாவரங்களுக்கு நம்மைப் போல் நரம்புகள் இல்லை. எனினும், உணர்ச்சியை அறிவிக்க, தாவரங்களில் உள்ள சில உயிரணுக்கள் பயன்படுகின்றன. தொட்டாற்சுருங்கி (Mimosa - மிமோசா) என்று ஒரு தாவரம் இருக்கிறது. இது தொட்டவுடன் சுருங்கிக் கொள்ளும். ஏதேனும் பட்டால், இதன் இலைகள் உணர்ச்சியின்றி மூடிக்கொள்ளும். தாவரத்திற்கு உணர்ச்சி உண்டு என்பதை நிரூபிக்க, இந்தத் தாவரம் ஒன்றே போதும். சில தாவரங்கள் ஒளியின் தாக்குதலினாலும், இடியின் தாக்குதலினாலும் அழிகின்றன என்பதையும், ஜகதீஷ் சந்திரபோஸ் எடுத்துக் கூறினார்.
விலங்குகள், மனிதர்கள் போலவே, தாவரங்களுக்கும் உணவு மிகமிக அவசியம். தாவரங்கள், தம் வேர்களின் மூலம் பூமிக்கடியிலுள்ள மண்ணிலிருந்து உணவை உறிஞ்சிப் பெறுகின்றன. தாவரங்களின் இலைப்பகுதிகள் காற்றைச் சுவாசிக்கின்றன. சில தாவரங்கள், ருசிப்பதில் மனிதர்களையும் மிஞ்சிவிடுகின்றன என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நம் உடலில் இரத்தம் ஓடுவது போலவே, 'தாவரச் சாறு' (Sap -சாப்) என்னும் ஒருவகைச் சாறு தாவரங்களின் உடல்முழுவதும் வியாபித்துள்ளது. இந்தத் தாவரச் சாற்றை, தாவர உயிரணுக்கள் தாவரத்தின் உடல் முழுவதற்கும் எடுத்துச் செல்கின்றன. விலங்குகளால் தாவரங்களுக்கு ஏற்படும் காயங்களைத் தாவரங்களிலுள்ள, 'புண்திசு' (Layers of Wound Tissue - லேயர்ஸ் ஆஃப் வுண்ட் டிஷ்யூ) என்னும் அடுக்கு காக்கிறது. மொத்தத்தில், தாவரங்கள் நம்மைப் போல வாழ்கின்றன என்பதால், அவற்றுக்கும் உயிர் உண்டு.
- நற்பின்னை