PUBLISHED ON : ஜன 18, 2016

குளுகுளுன்னு காத்தடிக்குது
மண்ணு வாசம் வீசுது
பளபளன்னு மின்னலடிக்குது
கண்ணு எனக்குக் கூசுது.
கடகடன்னு இடி இடிக்குது
காத்து பயம் கூட்டுது
சடசடன்னு சத்தங்கேக்குது
சட்டுனு மழை ஊத்துது.
குடுகுடுன்னு ஓடிக்குதிச்சு
மழையில் ஆட்டம் போட்டேங்க.
கடுகடுன்னு கோபத்தோட
அம்மா என்னைப் பார்த்தாங்க.
திருதிருன்னு முழிச்ச என்னை
திட்டித் திட்டித் தீர்த்தாங்க.
தரதரன்னு பிடிச்சிழுத்து
வீட்டுக்குள்ளே சேர்த்தாங்க.
வெடவெடன்னு குளிரில் உடம்பு
வெலவெலத்துப் போனது
கிடுகிடுன்னு காய்ச்சலேறி
நடுநடுங்கிப் போனது.
படபடன்னு அம்மா வந்து
பார்த்து பயந்து போனாங்க
விடுவிடுன்னு பத்து அரைச்சு
நெத்தியிலே போட்டாங்க.
பொலபொலன்னு விடிஞ்சது
மழையும் நின்னு போனது
கலகலன்னு சிரிப்பு வந்தது
காய்ச்சல் ஓடிப் போனது.
-கீதாமதி
இந்தப் பாட்டில் ஒரு குட்டிக் கதை இருக்கிறது. அதைத் தவிர, வேறு எது உங்கள் கண்ணில் பட்டது? ஏதோ ஒருவகையில் இசைந்து போகும் சில சொற்கள். ஆம். அவற்றிற்கு இரட்டைக் கிளவி என்று பெயர். சலசல, படபட… இது போன்ற சொற்களை சல+சல என்று பிரித்தால் ஒரு 'சல'வுக்குப் பொருள் கிடையாது.
