PUBLISHED ON : டிச 17, 2018

உலகின் மொத்த மக்கள்தொகை வளர்ச்சியில், எண்பது சதவீதத்தைக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எட்டியிருக்கிறோம். அந்த அளவுக்கு மக்கள்தொகைப் பெருக்கத்தால் திக்கித் திணறுகிறது நம் பூமி. இதனிடையே நம் பூமியில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறது காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் 'கிளைமேட் சென்ட்ரல்' என்னும் சர்வதேச அமைப்பு. உலகம் முழுக்க இருக்கும் அறிவியலாளர்கள், சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பத்திரிகையாளர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள்.
கடந்த 628 மாதங்களில், அதாவது 52 ஆண்டுகளில், ஒரு மாதம்கூட குளிர்ச்சியான மாதமாக இல்லை என்று தெரிவிக்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். புவி வெப்பமயமாவதன் வெளிப்பாடுதான் இந்த நிகழ்வு என்பது அவர்களது கணிப்பு. நாசா மற்றும் தேசிய கடல்சார், வளிமண்டல நிர்வாக அமைப்பு (National Oceanic and Atmospheric Administration - -NOAA) ஆகிய அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற தரவுகளைப் பெற்றும், பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் 'கிளைமேட் சென்ட்ரல்' இந்த ஆய்வு முடிவுகளை வரைபடமாக வெளியிட்டுள்ளது.
வரைபடத்தில், பூமியின் குளுமையைக் குறிப்பதற்கு ஊதா நிறத்தையும், வெப்பத்தைக் குறிப்பதற்கு சிவப்பு நிறத்தையும் விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். சிவப்பு வண்ணமே வரைபடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் வெயிலின் தாக்கத்தால் பல உயிர்கள் பறிபோகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் கடுமையான வெப்பத் தாக்கத்தினால் இறந்து போயிருக்கிறார்கள். 2015-ஆம் ஆண்டில் மட்டும் 2,422 பேர் இறந்துள்ளார்கள்.
மற்ற வெப்ப நாடுகள் சந்திக்கும் பிரச்னைகளைத்தான் நாமும் சந்தித்து வருகிறோம். 'கிளைமேட் சென்ட்ரலின்' இந்த ஆய்வு முடிவுகள் நம் பூமியின் உண்மை நிலையை உலகத்தின் முன் எடுத்துக் காட்டியிருக்கிறது.
- சு.கவிதா
