sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சுதந்திர விஜயம்

/

சுதந்திர விஜயம்

சுதந்திர விஜயம்

சுதந்திர விஜயம்


PUBLISHED ON : ஆக 14, 2017

Google News

PUBLISHED ON : ஆக 14, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1947 ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சென்னையில் எப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் நடைபெற்றன? ஆனந்த விகடன் உதவி ஆசிரியராக இருந்த கோபு (எஸ்.எஸ்.கோபாலகிருஷ்ணன்) 24 ஆகஸ்ட் 1947 இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் இது.

அந்த வேளையில் தேனாம்பேட்டை ஆலயங்கள் எல்லாவற்றிலும் இருந்து நாகஸ்வரம் கம்பீரமாய் எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும், ரேடியோ முழக்கம் செய்துகொண்டு இருந்தது. விடுதலை கீதம் வானைக் கிழித்துக் கொண்டு சென்றது. இந்திய சுதந்திர விழாவைப் பார்ப்பதற்காக, சூரியனும் அந்த நடுநிசி வேளையில் கண் விழித்துக்கொண்டு சென்னைக்கு விஜயம் செய்துவிட்டானோ என்று அதிசயிக்கும்படி, சென்னை மாநகரம் அப்போது ஜெகஜோதியாக விளங்கிக்கொண்டிருந்தது.

சிற்சில இடங்களில், ஜனங்கள் தங்கள் வீட்டு அலங்காரத்தையும், தெரு அலங்காரத்தையும், மேலும் மேலும் மெருகுபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே ஜார்ஜ் டவுனுக்குச் சென்றேன். அங்கு ஜனங்கள், கூட்டம் கூட்டமாக சமுத்திரக் கரையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஓர் ஆசாமியை நிறுத்தி, “எங்கே எல்லாரும் போகிறீர்கள்” என்று கேட்டேன். “கோட்டையைப் பிடிக்க” என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டே அந்த ஆசாமி போனார். “நாமுந்தான் அந்தக் கோட்டையைப் பிடிக்கலாமே!” என்று அவரைப் பின்தொடர்ந்தேன்.

கோட்டையில் இருந்து புறப்பட்டதும், நேராக வீடு திரும்ப எனக்கு மனம் வரவில்லை. சென்னையை இன்று அலசிப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது என்று தீர்மானித்துக் கொண்டு, பீச் ரோடில் நடந்தேன். 'இரவோடு இரவாக எத்தனை கொடிகள் முளைத்திருக்கின்றன!' என்று ஆச்சரியப்படும்படி சர்க்கார் மாளிகைகள், கட்டடங்கள் எல்லாவற்றிலும் கணக்கு வழக்கின்றி மூவர்ணக் கொடிகள் பறந்துகொண்டு இருந்தன.

சென்னையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பிரதான சின்னமாக விளங்கிய செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்தபோதுதான், எனக்குக் கோட்டையைப் பிடிக்கும் மர்மம் புரிந்தது. ஜனங்கள் அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டையில் கொடியேற்றும் விழாவைக் கண்டு களிக்கத்தான் அப்படிக் கூட்டம் கூட்டமாகப் போய் இருக்கிறார்கள். கோட்டை எல்லையில் காலை வைக்கக்கூட அஞ்சிய சென்னை வாசிகள், இன்று கோட்டையைப் பிடித்துவிட்டார்கள். கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் ஜனத்திரள் சூழ்ந்திருந்தது. இரவு முழுவதும் காத்துக்கிடந்த கூட்டத்தினர், சூரியோதயத்தின்போது கோட்டை கொடி மரத்தில் மூவர்ணக் கொடி ஜிலுஜிலு என்று பறப்பதைப் பார்த்து மனம் மகிழ்ந்தார்கள்; அவர்களிடையே ஒரு நீண்ட பெருமூச்சும் ஏற்பட்டது.

'கட்டடங்களையே பார்த்துக்கொண்டு போகிறீர்களே! நானும் இன்று மாறுதலோடு நிற்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று போட்டியிடுவதுபோல் பீச் ரோடில் தன்னந்தனியே நின்றுகொண்டு இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவச் சிலை என் கவனத்தைக் கவர்ந்தது. கிட்டத்தில் போய்ப் பார்த்தபோது, அந்த மன்னரின் கரங்களில் ஒன்று, இந்திய தேசிய மூவர்ணக் கொடியை அழகாகத் தாங்கிக் கொண்டு இருந்தது. இதைச் செய்தவரின் ரசிகத் தன்மையைப் பாராட்டிவிட்டு, கலாசாலைக் கட்டடங்களைப் பார்க்கச் சென்றேன்.

சென்னையில், திருவல்லிக்கேணியும் ஆயிரம்விளக்கும் தனி முக்கியத்துவம் பெற்றிருக்கும் இடங்கள். ஏனெனில், முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அதிகமாகக் கலந்து வாழும் இடங்கள் அவை, அங்கே சென்று முஸ்லிம் சிறுவர்கள், பெரியவர்கள் எல்லாரும் இந்திய மூவர்ணக் கொடியைச் சட்டைகளில் குத்திக்கொண்டு வெகுஉற்சாகமாகத் தெருவில் நடமாடிக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும், எந்த விதமான இடையூறும் இன்றி சுதந்திர விழா சென்னையில் நடந்தேறிவிடும் என்ற தைரியம் எனக்கு ஏற்பட்டது.

அடுத்தபடியாக, மயிலாப்பூரை அடைந்தேன். வியாழக்கிழமை இரவிலேயே சுதந்திரம் பெரிய அதிர்ச்சியோடு மயிலாப்பூருக்கு விஜயம் செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். திடும்திடும் என்று அதிர்வேட்டுகள் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டு ஊரறிய அடிமை அரக்கனை விரட்டியதாகச் சொல்லிக் கொண்டார்கள். மயிலாப்பூர் பெரிய மனிதர்களின் பெரிய பங்களாக்களில், மூவர்ணக் கொடிகள் பெருந்தன்மையோடும், கம்பீரத்தோடும் பறந்து காட்சி அளித்தன.

கார்ப்பரேஷன் கட்டடத்தை நெருங்கிப் பார்த்தபோது, “பலே! அழகுக்கு அழகு செய்து இருக்கிறார்கள்!' என்று வியந்துகொண்டு, குழுமி இருந்த ஜனத்திரளோடு கலந்துகொண்டேன். அப்போது திடீரென்று எழுந்த கரகோஷம் காரணமாக அண்ணாந்து பார்த்தேன். பிரதமர் ஓமந்தூர் ரெட்டியார், பக்தி சிரத்தையோடு கொடியேற்றி வைத்தார். மேயர் குதூகலத்தோடு குதித்துப் பேசினார். இப்படி சர்க்கார் மாளிகைகளிலும், காரியாலயங்களிலும் தேசியக்கொடி பறந்ததுதான், மக்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியிருந்தது.

பிற்பகல் இரண்டு மணியில் இருந்தே கோட்டை மைதானம் திமிலோகப்பட்டது. சென்னை சர்க்காரின் பிரதிநிதியாக கவர்னர் ஸர் ஆர்ச்சிபால்ட் துரை, மன்றோ உருவச் சிலையின் முன்பு தேசியக்கொடியை ஏற்றிவைத்து வணங்கும் வைபவம் அது என்று அறிந்தேன்.

குறிப்பிட்ட நேரத்துக்கு கவர்னர் விஜயம் செய்துவிட்டார். ஆனால், பிரதம மந்திரி ஓமந்தூர் ரெட்டியார் வந்து சேரவில்லை. கூட்டத்தினரும் கவர்னரும் சிறிதுநேரம் சுற்று முற்றும் கவலையோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது, 'போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விட்டதால் கூட்டத்தை நெருக்கிக்கொண்டு உள்ளே வரத் தாமதம் ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க வேண்டும்' என்று சொல்லிக்கொண்டே பிரதம மந்திரி பாய்ந்து வந்து, கவர்னர் துரையிடம் கை குலுக்கினார்.

குறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தத் தவறிய குற்றத்துக்காக சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதுபோல் கவர்னர் ஏற்றிவைத்த அந்தக் கொடி சற்று மக்கர் செய்துகொண்டுதான் மேலே சென்றது. பரபரப்பு அடங்குவதற்கு முன், அந்தக் கொடிக்கம்பத்தின் மேலே சென்று கம்பீரமாகப் பறந்து காட்சியளித்தது.

கோட்டை மைதானத்தில் இருந்து புறப்பட்டபோது, நன்றாக இருட்டிவிட்டது. நகரின் தீபாலங்காரத்தைப் பார்க்கச் செளகரியமாக இருந்தது. ஜெனரல் ஆஸ்பத்திரியில் கண்ணைப் பறிக்கும் விளக்குகளைப் போட்டு, அதைப் பிரமாண்டமானதொரு பொம்மைபோல் தோற்றம் அளிக்கும்படி செய்திருந்தார்கள். எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் ஒளிர்ந்தது. பக்கத்தில் ரிப்பன் கட்டடம், பஞ்சவர்ணங்களை வாரி வீசிக்கொண்டு இருந்தது. நான் மட்டும் சளைத்துவிட்டேனா என்று கேட்பதுபோல, தூரத்தில் எழும்பூர் ஸ்டேஷன் பிரகாசித்தது.

நன்றாக இருட்டிய பிறகுதான், கொண்டாட்டம் பிரமாதப்படத் தொடங்கியது. வாண வேடிக்கைகள், ஊர்வலங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, ஜனங்கள் சற்று களைப்புத் தீர காற்று வாங்க பீச்சுக்குப் போனபோது, அங்கே அவர்களை வரவேற்கப் பலவித களியாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள், இரவைப் பரந்த மணற்பரப்பில் கழித்துவிட்டு மறுநாள் காலையில்தான் விடு திரும்பினார்கள்.

சுதந்திர விழாவில் மிக உற்சாகம் காட்டியவர்கள், ஸ்திரீகளும் குழந்தைகளும்தான் என்று நான் நிச்சயமாகச் சொல்வேன். ஸ்திரீகள் தங்கள் ஜடையை மூவர்ண புஷ்பக் கொத்துகளினால் அலங்கரித்துக்கொண்டு இருந்த அழகையும், இடையில் மூவர்ண சேலை உடுத்தியிருந்த விமர்சையையும் பார்க்கக் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் குதூகலத்துக்கு எல்லையே இல்லை. அவர்கள் சட்டைகளில் கணக்குவழக்கின்றி தேசியக் கொடிகளைக் குத்திக்கொண்டும், வாய் நிறைய மிட்டாய்களைத் திணித்துக்கொண்டும் தலைகால் தெரியாமல் ஓடும் மோட்டார் கார்களோடும் சைக்கிள்களோடும் போட்டியிட்டுக்கொண்டு போன காட்சி, இன்னும் என் கண் முன் தாண்டவம் ஆடுகிறது.

சென்னையில், சுதந்திர விஜய வைபவக் கொண்டாட்டத்தைப் பார்த்து அனுபவித்தவர்கள் ஒவ்வொருவரும், 'எதிர்காலத்தில் வருஷா வருஷம் நடக்கப்போகும் இந்த சுதந்திர தின விழாவைப் பார்க்க எனக்கு இந்த இரு கண்கள் போதாது. இதைப் போல் ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள் என்று முடிவோடு விட்டுக்குத் திரும்பினேன்.

வாழ்க சுதந்திரம், வாழ்க பாரத நாடு!

நன்றி : ஆனந்த விகடன்






      Dinamalar
      Follow us