
சுதந்திர தினத்தை ஒட்டி உனக்கு ஒரு க்விஸ் வைக்கப் போகிறேன் என்றான் பாலு. சரி என்றேன். எங்கள் க்விஸ்சில் எப்போதும் வாலுவும் ஞாநி மாமாவும் ஒவ்வொரு கேள்விக்கும் உதவி செய்யலாம். இந்த முறை பாலு வித்தியாசமாக கேள்விகள் தயாரித்திருந்தான்.
கேள்வி 1: ஏன் ஆகஸ்ட் 14/15 நள்ளிரவில் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்? பகலில் கொடுத்திருக்கக் கூடாதா?
எனக்குத் தெரியவில்லை. வாலு சொல்லிற்று. ஆகஸ்ட் 15தான் அப்போதைய வைஸ்ராய் மெளன்ட்பேட்டனுக்குப் பிரியமான நாளாம். இரண்டாம் உலக யுத்தத்தில் அவர் கமாண்டராக இருந்தபோது, ஜப்பான் சரணடைந்த நாள் அது. ஆனால், 14, 15 இரண்டு நாட்களுமே ஜோசியப்படி நல்ல நாள் இல்லை என்று நிறைய ஜோசியர்கள், பண்டிதர்கள் எல்லாரும் ஆட்சேபம் எழுப்பினார்களாம். நள்ளிரவு நேரத்துக்கு, இந்த நல்ல நேர ஜோசியம் எல்லாம் பொருந்தாது என்பதால், நள்ளிரவில் 45 நிமிடம் சுதந்திரம் பெறும் நிகழ்ச்சியை வைக்க முடிவாயிற்றாம்.
அதையே தன் பேச்சில் நயமாகப் பயன்படுத்திக் கொண்டார் நேரு என்றார் மாமா. “நடு இரவுக்கான மணி ஒலிக்கும்போது, உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா விடுதலைக்கும் புது வாழ்வுக்கும் விழித்தெழுகிறது.” என்று நேரு பேசியிருக்கிறார்.
'விதியுடன் உறவாடல்' என்று பொருள்படும் 'டிரிஸ்ட் வித் டெஸ்டினி (Tryst With Destiny)' என்ற அந்தப் பேச்சை முன்கூட்டி எழுதி தயாரிக்கவோ, குறிப்புகள் எடுக்கவோகூட அன்று நேருவுக்கு நேரம் கிடைக்கவில்லை. மனத்தில் தோன்றியதை அப்படியே பேசிய அந்தப் பேச்சு, உலகத்தின் முக்கியமான பேச்சுகளில் ஒன்றாகிவிட்டது என்றார் மாமா.
கேள்வி 2: அதே நள்ளிரவில் பிறக்காமல் பாகிஸ்தான் மட்டும் ஏன் முன் தினமே பிறந்தது?
பிரிட்டிஷார் சுதந்திரம் பற்றி செய்த அறிவிப்பின்படி, பாகிஸ்தானும் ஆகஸ்ட் 15 தான் பிறந்தது. ஆகஸ்ட் 14 என்று அவர்கள் குறிப்பிடவில்லை. பாகிஸ்தான் முதலில் வெளியிட்ட தபால் தலையில்கூட 15ந் தேதிதான் குறித்திருந்தது. பின்னால் பாகிஸ்தான் தன் சுதந்திர தினத்தை 14 என்று மாற்றிக்கொண்டது.
கேள்வி 3: எந்தப் பகுதியெல்லாம் பாகிஸ்தான், எதெல்லாம் இந்தியா என்று முன்கூட்டியே பிரித்து தயாராக வைத்திருந்தார்களா?
எல்லைக் கோட்டை வரையும் பொறுப்பில் இருந்த ஆங்கில அதிகாரி ராட்கிளிஃப் ஆகஸ்ட் 9ந் தேதியே தன் அறிக்கையைத் தயாராக வைத்திருந்தார். ஆனால், மெளன்ட்பேட்டன் அதை அறிவிக்க விடவில்லை. காரணம் பஞ்சாப்தான் என்றார் மாமா. பஞ்சாபில் ஒரு பகுதி பாகிஸ்தானுக்கும், இன்னொரு பகுதி இந்தியாவுக்கும் என்று முடிவு. இதையொட்டி ஏற்கனவே மதக் கலவரங்கள் தொடங்கிவிட்டன. சரியான எல்லைக்கோட்டை அறிவித்தால் இந்தப் பக்கத்திலிருந்து லட்சக்கணக்கானோர் அந்தப் பக்கமும், அங்கிருந்து லட்சக்கணக்கில் இந்தப் பக்கமும் வருவார்கள். குழப்பமும் கலவரமும் அதிகமாகலாம். அதெல்லாம் ஆகஸ்ட் 15க்கு முன்னதாக நடந்தால், அதற்கு பிரிட்டிஷ் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். 15க்குப் பிறகு என்றால், புதிய இந்திய அரசுக்குத்தான் பழி. எனவே, எல்லைப் பிரிவினை அறிக்கையை 17ம்தேதிதான் அறிவிக்கவைத்தார்கள்.
கேள்வி 4: 1950ல் தானே நமக்கு அரசியல் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அப்படியானால், 1947 முதல் 1950 வரை சட்டமே இல்லாமல் இருந்தோமா?
உண்மையில் 1950 வரை நாம் முழு விடுதலையை அடையவில்லை என்றே சொல்லவேண்டும் என்றார் மாமா. சட்டப்படி நாம் மன்னராட்சியின் கீழ் இருக்கும் சுயாட்சி நாடாக இருந்தோம். ஆறாம் ஜார்ஜ் மன்னர்தான் 1950 வரை நமக்கும் மன்னர். ஜனவரி 26, 1950ல் அரசியல் சட்டத்தை நிறைவேற்றும்போதுதான், நாம் மன்னராட்சி என்பதை ஒழித்துவிட்டு குடியரசானோம் என்றார் மாமா.
கேள்வி 5: ஏன் காந்தி சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளவில்லை? ஆகஸ்ட் 15, 1947 அன்று அவர் எங்கே இருந்தார்?
காந்தி அன்று கொல்கத்தாவில் இருந்தார். வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவிலும், இன்னொன்று பாகிஸ்தானுமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரு பக்கமும் மதக் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தன. அவற்றை நிறுத்துவதற்காக, காந்தி அங்கே சென்றிருந்தார். காந்தி இரு தரப்பினருடனும் பேசியதையடுத்து, ஆகஸ்ட் 15 லிருந்து சில தினங்கள் வங்காளம் அமைதியாக இருந்தது. சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. காந்தி கொல்கத்தாவில் சாதித்தது ஓர் அற்புதம் என்று மெளன்ட்பேட்டன் சொன்னார்.
மதக் கலவரங்கள் இப்போதும்தானே நடக்கின்றன என்று கேட்டான் பாலு. “எந்த மதத்திலும் சாதாரண மக்களுக்குத்தான் இதில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களை பகடைக் காய்களாக வைத்து அரசியல் செய்வோர்தான் கலவரங்களுக்குக் காரணம்” என்றார் மாமா.
நான்கு பேரும் சுதந்திரப் போராட்ட காலத்து புகைப்படங்களின் தொகுப்பு ஒன்றைப் பார்த்தோம். இந்திய பஞ்சாபிலிருந்து பாகிஸ்தான் பஞ்சாபுக்கு செல்லும், வரும் ரயில்களின் புகைப்படங்கள் என்னைக் கவர்ந்தன. எவ்வளவு கூட்டம்…... அவர்களெல்லாரும் அமைதியாக பயணம் செய்திருந்தால் சரித்திரமே மாறியிருக்கும். வெவ்வேறு மதத்தினர் ஒருவரோடொருவர் அன்பாக கலகலப்பாக பழகும் புகைப்படங்களையும் பார்த்தேன்.
புகைப்படம் ஒரு முக்கியமான விஷயம் என்றான் பாலு. “அப்போது செல்போன் கேமரா இருந்திருந்தால் இன்னும் எத்தனையெத்தனை படங்கள் கிடைத்திருக்கும்.” என்றான்.
அப்போது இருந்தது சம்பிரதாயமான பிலிம் கேமராக்கள். அந்த பிலிம் கேமராவில் எப்படி படம் எடுக்கிறார்கள், எடுத்த படத்தை எப்படி பிரின்ட் போடுகிறார்கள் என்றெல்லாம் மாமா அவர் நண்பர் புகைப்படக்காரர் பொன்சியின் ஸ்டூடியோவுக்கு எங்களைக் கூட்டிட்டுப் போய் காட்டியிருக்கிறார். “இங்கேதான் படத்தைக் கழுவுகிறோம்” என்று ஒரு சிவப்பு விளக்கு மட்டும் எரியும் அறையை பொன்சி மாமா காட்டியபோது, எனக்குச் சிரிப்பாக வந்தது. படத்தை ஏன் கழுவ வேண்டும்? எடுத்த படம் அழுக்காக இருக்குமா என்ன? என்று கேட்டேன். கேமராவிலிருந்து பிலிமை எடுத்து அதில் இருக்கும் பிம்பத்தை அதில் நிலைபெறச் செய்ய, வெவ்வேறு ரசாயனங்களில் முக்கி எடுக்கிறார்கள்.
நெகட்டிவ் கிடைத்ததும், அதை ஒரு என்லார்ஜர் மெஷினில் வைத்து புரொமைட் பேப்பர் மீது பிம்பம் விழச் செய்கிறார்கள் இப்போது இந்த பேப்பரை விதவிதமான ரசாயனங்களில் முக்கி எடுக்கிறார்கள். பழைய புகைப்படங்கள் சில எப்படி மங்கலாகி வெளுத்துப் போய் விடுகின்றன என்று அங்கே தெரிந்துகொண்டேன். டெவலப் செய்யும்போது, சரியாக 'ஃபிக்ஸ்' செய்யாவிட்டால் அப்படி ஆகும் என்றார் போட்டோ மாமா.
சுதந்திரமும் அரசியலும்கூட போட்டோ மாதிரிதான் என்று தோன்றியது.
70 வருடங்களில் சரியான அணுகுமுறையில் செய்தவை இன்றும் 'பளிச்' என்று பயன் தருகின்றன. ஒழுங்காக ஃபிக்ஸ் செய்யாதவை மங்கி வெளுத்துப் போய்விட்டன.
டிஜிட்டல் இந்தியா வேறு மாதிரி இருக்கப் போகிறது என்றான் பாலு. பழைய பாக்ஸ் கேமராவில் எடுத்தாலும், நவீன செல்போனில் எடுத்தாலும், எதை எடுக்கிறோம், எப்படி எடுக்கிறோம் என்ற நம் பார்வைதான் எப்போதும் முக்கியம் என்றார் மாமா. அது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும் என்றேன். நேருவின் பேச்சும், காந்தியின் கொல்கத்தா அணுகுமுறையும் இன்றைக்கும், 'பளிச்' என்றுதான் இருக்கின்றன.
வாலுபீடியா 1: உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் 19. முறையாகப் புகைப்படம் எடுப்பதற்கான தொழில்நுட்பத்தை டாகுரோ உருவாக்கினார். அதற்கான உரிமையை பிரெஞ்ச் அரசாங்கம் விலைக்கு வாங்கி, அந்தத் தொழில்நுட்பத்தை இனி எல்லாரும் இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்த நாள்