PUBLISHED ON : அக் 07, 2019

இந்தியாவில் உள்ள 47 சதவீத குழந்தைகள் நோய் பாதிப்பு அபாயத்தில் உள்ளனர். வசதியான குழந்தைகளில் 17 சதவீதம் பேரும் இதில் அடங்குவர். இதற்கு இக்குழந்தைகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்படாததே காரணமாகும். இதை மத்திய அரசின் தேசிய குடும்பநலத்துறை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு 12 முதல் 23 மாதங்களுக்குள் போட வேண்டும். அரசு தடுப்பூசித் திட்டத்தில் பிசிஜி (காசநோய்), அம்மைத் தடுப்பூசி, டிபிடி (டெட்டனஸ்), போலியோ சொட்டு மருந்து ஆகியவை வழங்கப்படுகிறது. இத்தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டால் மட்டுமே, அக்குழந்தை தடுப்பூசி போடப்பட்ட குழந்தையாக கருதப்படும். இம்முறையில் இந்தியாவில் 38 சதவீதம் குழந்தைகள் முழுமையாகத் தடுப்பூசி மருந்து வழங்கப்படாமல் உள்ளனர். இத் தகவலை 2015- - -16ஆம் ஆண்டு வெளியான தேசிய குடும்பநலத்துறை ஆய்வறிக்கை கூறுகிறது.
2010 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் தடுப்பூசி போடப்பட்டு, ஒரு கோடி குழந்தைகள் நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசிகளை முறையாக வழங்குவதன் மூலம் குழந்தைகள் நிமோனியா, வயிற்றுப்போக்கு, கக்குவான் இருமல், அம்மை, போலியோ ஆகிய பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.
சரியான முறையில் தடுப்பூசிகளைப் போடாதபோது, அம்மை, நிமோனியா, ரோட்டா வைரஸ் ஆகியவை ஏற்படுத்தும் பாதிப்பினால் அரசுக்கும், குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கும் பெரும் செலவினம் ஏற்படுகிறது. இதுபோன்ற நோய்களால் பல்வேறு குடும்பங்கள் கடன் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது என்று 2018ஆம் ஆண்டு வெளியான ஹார்வர்டு டிஹெச் சான் பொதுநல ஆய்வறிக்கை கூறுகிறது. கடன் பிரச்னைக்கு முக்கிய காரணம், பலரும் மருத்துவம் சார்ந்த காப்பீடுகளை எடுக்காததே ஆகும். இம்முறையில் 71 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இம்முறையில் திடீர் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர். பல லட்சம் குடும்பங்கள் மருத்துவச் செலவுகளால் வறுமைக்கோட்டுக்கும் கீழ் தள்ளப்பட்டுள்ளதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
