தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/விருதுகளை குவிக்கும் இந்தியக் கண்டுபிடிப்பாளர்

விருதுகளை குவிக்கும் இந்தியக் கண்டுபிடிப்பாளர்

விருதுகளை குவிக்கும் இந்தியக் கண்டுபிடிப்பாளர்


PUBLISHED ON : மார் 11, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள் தம் பதினேழு வயதில், பொதுவாக என்ன செய்வார்கள்? எந்தக் கல்லூரியில் என்ன படிப்பில் சேரலாம் என்று தானே யோசித்துக் கொண்டு இருப்பார்கள். தன் 17 வயதிலேயே அறிவியல் ஆய்வாளர், தொழில்முனைவோர், சமூக அக்கறையாளர் என புகழ்பெற்றுள்ளார் இளைஞர், முகம்மது சுஹைல். மங்களூருவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார்' (Pradhan Mantri Rashtriya Bal Puraskar) விருதைப் பெற்றார்.

வெறும் 2 ரூபாய் செலவில், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்தது முகம்மதின் சாதனை. தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தார்.

“நூல்களைப் படித்து கற்றுக்கொண்டு எதையாவது, புதிதாக உருவாக்குவது எனக்குப் பிடிக்கும். என் 14 வயதில், நடந்தால் மின்சாரம் உற்பத்தியாகும் டைல் தகட்டை உருவாக்கினேன். மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் டைல்ஸ்களைப் பதித்துவிட்டால் இலகுவாக மின்சாரம் கிடைக்கும். இதற்காக, எனக்கு 50க்கும் அதிகமான விருதுகள் கிடைத்தன. அதன் பிறகு, 2 ரூபாய் செலவில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறியும் கருவியை உருவாக்கினேன். இக்கருவி உருவானதன் பின்னணியில் சுவாரசிய கதை உண்டு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் மாலையில், என் நண்பன் சுவஸ்தீக் வீட்டுக்கு வந்தான். தான் கேட்ட டாக்டர் மானுபிரகாஷ் உரை பற்றி என்னிடம் சொன்னான். உயிரியல் துறை சாதனையாளரான அவர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார். உயர் தொழில்நுட்பக் கருவிகளை எளிய மக்களுக்கும் எப்படிக் கிடைக்கச் செய்வது என்பது பற்றி வீடியோவில் பேசியிருந்தார். எளிமையாக 50 சென்டுகளுக்கும் குறைவான செலவில், மடிக்கும் மைக்ரோஸ்கோப்பை உருவாக்கியவர் டாக்டர். மானுபிரகாஷ். அதன்மூலம், எளிமையாக மலேரியாவைக் கண்டறிலாம். உடனே எனக்கும் இதைப்போல செய்ய வேண்டும் என்று தோன்றியது.

உடனே இணையத்தில் இந்தியாவின் முக்கியப் பிரச்னைகளைப் பற்றித் தேடினேன். அதில், முதன்மையானதாக ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தது. இதற்குத் தீர்வு கண்டறிவதில் நிறைய சவால்கள் இருந்தன. இரத்த சோதனை எடுப்பது, மருத்துவக் கழிவுகள் அகற்றம், அதிகப் பொருளாதாரச் செலவுகள் என்று ஏராளமான பிரச்னைகள் இருந்தன. இதற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று என் நண்பனுடன் பேசி முடிவெடுத்தேன்.

அதன் பின்னர், ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டதுதான், 2 ரூபாய் பேப்பர் கருவி. அதை இரண்டு நிமிடங்களில் தயாரித்து விடலாம். எச்சிலை அந்த பேப்பரில் வைத்தால் போதும், நிறமாற்றம் மூலம் உங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறதா இல்லையா என்பதைச் சொல்லிவிடும்.

எவ்வளவு ஊட்டச்சத்துக் குறைபாடு என்பதைக் கண்டறிய, மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதை வெற்றிகரமாக எனேபோயா பல்கலைக்கழக மருத்துவமனையில் சோதனை செய்தோம்.

ஏழைகளுக்கு உதவும் இதை இலவசமாகவே வழங்கத் தீர்மானித்துள்ளேன். எனது இந்தக் கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக, அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகம், எனது பெயரை, நட்சத்திரம் ஒன்றுக்கு சூட்டியுள்ளது.

நான் சிறுவன் என்ற மனநிலையில் இருந்து எதையும் உருவாக்க மாட்டேன். நீண்டகால இலக்குகளே எனது குறிக்கோள். இன்றிலிருந்து 30 ஆண்டுகளில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அப்படியே என்னைக் கற்பனை செய்து கொள்கிறேன். அந்த மனநிலையில் இருந்துதான் என் செயற்பாடு இருக்கும். என் வெற்றியின் பின்னணியில் இருப்பது இதுவே” என்று அழகான கருத்துகளோடு பேசினார் முகம்மது சுஹைல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us